வாங்கினா ஏமாந்துருவீங்க- மயிலாப்பூர் டைம்ஸ்









மயிலாப்பூர் டைம்ஸ்


எப்படியும் ஏமாத்துவோம்...


அண்மையில் அலுவலகம் அருகே உள்ள அரசு நடத்தும் காமதேனு கடைக்கு சென்றேன். சுற்றுமுற்றும் உள்ள ஜியோ மார்ட், ஸ்பென்சர், ஷோபிகா, நீல்கிரிஸ் என எல்லா கடைகளையும் விட இங்கு கொஞ்சம் பொருட்களின் விலையைக் குறைத்துக் கொடுக்கின்றனர். அதாவது ஆஃபர் அப்புறம் வந்து வாங்கிக்கோங்க என்று சொல்லாமலேயே பில்லிலேயே விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். 

அங்கு எப்போதும் போல போகும்போது செய்த தவறு, முத்ரா என்ற பிராண்டை வாங்கியது. அப்போது அம்பிகா பருப்பு பொடி தீர்ந்து போயிருந்தது. அதனை இப்போது பெயர் கூட மாற்றிவிட்டார்கள். அம்பிகா நெய் பருப்புப்பொடி. இதுதான் பருப்பு பொடிகளில் உருப்படியானது. நானும் சக்தி, ஆச்சி, 777 என நிறைய பருப்பு பொடிகளை வாங்கிப் பார்த்து வயிறு பிரச்னையானதுதான் மிச்சம். முத்ரா பிராண்டு இந்த பிரச்னைகளை செய்யவே இல்லை. 42க்கு ஒரு ரூபாய் குறைக்காமல் வாங்கினேன். 

இரண்டு வாரம் கழித்து சாப்பிட எடுத்தேன். அப்போதும் கூட அம்பிகா பருப்பு பொடி தீர்ந்துவிட்டதால்தான் அந்த சூழ்நிலை வந்தது. எடுத்து சோற்றில் போட்டு, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்தால் எந்த ருசியும் இல்லை. என்னடா இது, பெப்சோடன்ட் போட்டு காலையில்தான் பல் விளக்கினோம்.  இப்போது என்ன டேஸ்ட்டே தெரியவில்லை. என யோசித்துவிட்டு கொஞ்சம் பாட்டிலிலுள்ள தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் ஒரு கவளம் வாய்க்குள் தள்ளினேன். அப்போதும் ருசியே இல்லை. அப்போதுதான் முத்ரா பிராண்டை எடுத்து பின்பக்கமாக பார்த்தேன். பொட்டுக்கடலை முக்கியமான முதன்மைப் பொருள். அடுத்து மிளகாய் வற்றல், அப்புறம் உப்பு என பகுதிப்பொருட்கள் கதை போனது. 





நான் அடைந்த மன உளைச்சல் என்பது கொடுத்த காசு பற்றியதல்ல. இப்படி ஏமாற்றிவிட்டார்களே என்றுதான். சில மாதங்களுக்கு முன்னர் 777 என்ற பிராண்ட் பருப்பு பொடியை பயன்படுத்தினேன். சிறந்த தரம் என்று சொல்லமுடியாது. ஆனால் சுவைக்கு முயற்சி செய்திருந்தார்கள். எந்த முயற்சியுமே செய்யாமல் வாங்கியவர்களை ஏமாற்ற முயன்றால் எப்படி? கடுப்போடு அப்படியே எழுந்து முத்ராவை எடுத்து அது சென்று சேர வேண்டிய இடமான குப்பைத்தொட்டியில் சேர்த்தேன். பிறகு மீதியிருந்த சோற்றுக்கு நெய்யை ஊற்றி உப்பு போட்டு சாப்பிட்டேன். இப்படி எல்லாம் செய்து வாழ்க்கை நடத்துகிறார்களா என்று அந்த நொடி தோன்றியது.

அடிப்படையில் பருப்பு பொடியை கடலைப் பருப்பு, துவரம்பருப்பு அரைத்து போட்டு பயன்படுத்துவார்கள். ஆனால், முத்ராவை தயாரித்த மார்வெல் அக்ரோபுட்ஸ் நிறுவனம், அதெல்லாம் விலை அதிகம்ங்க.. சல்லிசா கிடைக்கிற பொட்டுக்கடலையைப் போட்டா பொடி வந்துராதா என முயன்றிருக்கிறார்கள். அதில் வெற்றி பெற்ற மிதப்புடன் பையில் அடைத்து அரசின் காமதேனு சூப்பர் மார்க்கெட்டிலேயே விற்பனை செய்துவிட்டார்கள். பிறகு என்ன, 

மார்வெல் அக்ரோ புட்ஸூக்கு எழுதிய மின்னஞ்சல் கடிதம் இதோ....


மதிப்பிற்குரிய மார்வெல் அக்ரோஃபுட்ஸ் நிறுவனத்திற்கு, வணக்கம்.

ஒரு வாரத்திற்கு முன்னர் தங்களுடைய பருப்பு சாதப்பொடியை காமதேனு் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கினேன். அப்போது நான், பாக்கெட்டில் உள்ள பகுதிப்பொருட்களைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் இப்போது ஏன் வாங்கினேன் என வருந்தும்படி ஆகிவிட்டது. இன்று இரவு உணவில்  தங்கள் பிராண்ட் பருப்பு பொடியைப் பயன்படுத்தினேன். பருப்பு பொடி இருக்கும் தைரியத்தில்தான் சோறே குக்கரில் வைத்தேன். 

சோற்றில் பருப்பு பொடியைப் போட்டு நெய் ஊற்றி பிசைந்தேன். சாப்பிட்ட போதுதான், தெரிந்தது அதில் ஊக்கமூட்டும் ருசியே இல்லாதது. அப்போதுதான் என்ன கலந்திருக்கிறீர்கள் என்று பார்த்தேன். பொதுவாக பருப்பு பொடியில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு கலக்குவார்கள். நீங்கள் பரிசோதனை முயற்சியாக பொட்டுக்கடலையை கலந்திருக்கிறீர்கள்.  ஆனால் இன்று உங்கள் பருப்பு பொடியை பயன்படுத்தி சாப்பிட்ட ஒவ்வொரு கவளச்சோறுமே நான் ஏன் இந்த பிராண்டை வாங்கினேன் என்று வருந்தி சாப்பிடும் தன்மையில் இருந்தது. வேறு வாய்ப்பே இல்லை சார்! 

பாக்கெட்டை நேராக குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் போட்டுவிட்டேன். பணஇழப்பும் மன உளைச்சலும்  எனக்குத்தான். நான் உங்கள் பிராண்ட பருப்பு பொடியை தேர்ந்தெடுத்ததிற்காக அதை ஏற்றுக்கொள்கிறேன். தயவு செய்து பருப்பு சாதப்பொடி பற்றி முடிந்தளவு ஆராய்ச்சி செய்துவிட்டு, முடிந்தால் நீங்களும் அதனை சோற்றில் போட்டு கலக்கி சாப்பிட்டுப் பார்த்துவிட்டு வியாபாரம் செய்யுங்கள் சார். 

எங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், நான் உணவுக்காக செலவு செய்த பணம் வீணில்லை என  நினைக்கவேண்டும். அந்த தரத்தில் நாங்கள் உணவுகளை வழங்குகிறோம் என ஓரியண்டல் குசைன் நிறுவனர் எம்.மகாதேவன் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. உணவு நிறுவனத்தைப் பொறுத்தளவில் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்கவேண்டும் சார். பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

இதற்கு அவர்கள் பதில் சொல்லுவது பற்றி எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் சில நாட்கள் கழித்து பதில் அனுப்பியிருந்தார்கள். 

உங்களுடைய கருத்தை மதிக்கிறேன். இன்னும் நீங்கள் கூறியது போல் தரம், சுவை இவற்றில் கவனம் செலுத்தபடும்.

நன்றி,
மார்வல்.

இன்று நடைபெறும் விஷயங்கள் எதிலும் செய்பவர்களுக்கு எள்ளளவிலும் குற்றவுணர்ச்சி இருப்பதில்லை. இந்தியாவில் இன்று கேள்வி கேட்டாலே அவரை குற்றவாளியாக பார்க்கிறார்கள். இப்படி பொருளை தயாரித்து அதற்கான அத்தனை விஷயங்களையும் செய்து ஷெல்பில் கூட ஏற்றியாயிற்று. ஆனால் இப்போதுதான் அடிப்படையான விஷயங்களை சரி செய்யவேண்டும் என நகர்கிறார்கள். இதனை வாங்கியவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது என்பது பற்றி மார்வெல் நிறுவனம் எதுவுமே கூறவில்லை. இதற்கு பதிலாக நான் எனது பதிலில் கூறியுள்ள பொறுப்பு ஏற்பை சுட்டிக்காட்டலாம். பொறுப்பு ஏற்பு என்பது இதல்ல. 

அண்மையில் வெளியான காலச்சுவடு நூலில், தவறுகள் இருந்தால் நூலை மாற்றிக் கொடுக்கிறோம். என்ன தவறு இருந்தாலும் சொல்லுங்கள். திருத்திக் கொள்ளுங்கள்  என கண்ணன் சுந்தரம் சொல்லுகிறார். புத்தகம் விற்றால் போதும் என பலரும் இருக்க, காலச்சுவடு கண்ணன் இப்படி சொல்ல எந்த அவசியமும் இல்லை. ஆனால் செய்யும் தொழிலை நேசிப்பவர் இதுபோன்ற முயற்சிகளை செய்வார். உலகின் முன்னோடி கார் தயாரிப்பு நிறுவனங்களை பார்த்தீர்கள் என்றால், அதில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய அதனை திரும்ப பெறுவது வழக்கமான ஒன்று. இதனை மனதில் கொண்டவர்கள் மட்டுமே தொழிலில் வெல்லுவார்கள். 
 
அன்பரசு சண்முகம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்