புதிய உயிரினங்கள் - 2021
2021 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதிய உயிரினங்கள்!
உலகின் சிறிய பல்லி, புதிய இன ஆக்டோபஸ், எறும்பு என பல்வேறு புதிய உயிரினங்கள் உலகில் கண்டறியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதையும் மனிதன் ஆக்கிரமித்துவிட்டான் என்று தோன்றினாலும் கூட நாம் நினைத்துப்பார்க்க முடியாத ரகசியங்களை இயற்கை கொண்டிருக்கிறது. அப்படி கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட உயிரினங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
எறும்பு (Strumigenys ayersthey)
ஈகுவடார் நாட்டில் சாகோ டேரியன் எனும் பகுதியில் புதிய எறும்பு கண்டறியப்பட்டது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டக்ளஸ் பூஹெர் எனும் ஆய்வாளர் எறும்பைக் கண்டுபிடித்து அதனை உறுதி செய்தார். எறும்புக்கு ஸ்ட்ரூமிஜெனிஸ் அயர்ஸ்தே (Strumigenys ayersthey) என்று தனக்கு பிடித்த ராக் இசைக்கலைஞரின் பெயரை சூட்டியிருக்கிறார் டக்ளஸ்.
நிறம் மாறாத பச்சோந்தி (Brookesia nana)
நகத்தை விட சற்றே பெரிதாக இருக்கும் பச்சோந்தி (B.nana) இது. ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்தில் ஆண், பெண் என இரண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மடகாஸ்கரில் உள்ள மழைக்காடுகளில் அமைந்துள்ள மலைத்தொடர்தான் பச்சோந்தியின் இருப்பிடம். பச்சோந்தியின் குடும்பமாக இருந்தாலும் இந்த நானோ பச்சோந்தியால் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. பழுப்பு நிற உடலை வைத்து காட்டுக்குள் எளிதாக பிறர் கண்டுபிடிக்கமுடியாதபடி மறைந்திருக்கும். காட்டிலுள்ள சிறு பூச்சிகளை உணவாக உண்ணக்கூடியது.
தேனீ (Bombus incognitus)
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மலைக்குகைகளில் காணப்படும் தேனீ இனம். உப்சலா பல்கலைக்கழக ஆய்வுக்குழு, புதிய தேனீயைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் இனத்தில் 250க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. தொடக்கத்தில் இதனைப் பார்த்த ஆய்வாளர்கள் இதன் சகோதர தேனீயான பாம்பஸ் சில்விகோலாவை (Bombus sylvicola) தொடர்புபடுத்தி குழம்பிவிட்டனர். பொதுவாக புல்வெளி உள்ள இடங்களில் பாம்பஸ் தேனீ காணப்படும். மகரந்தச் சேர்க்கைக்கு முக்கிய பங்காற்றும் தேனீ இது.
ஆரஞ்சு நிற வௌவால் (Myotis nimmbaensis)
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நிம்பா மலைத்தொடரில் கிடைத்த உயிரினம் இது. குகையில் கண்டறியப்பட்ட புதிய இன வௌவாலுக்கு ஆரஞ்சு நிற முடிதான் விசேஷ அம்சம். இதோடு கூடவே வட்டக்காது கொண்ட வௌவாலும் (Hipposideros)இங்குதான் கண்டறியப்பட்டது. இவை உயிரோடு இருக்க இப்பகுதியை பாதுகாத்தால்தான் சாத்தியம். இக்கண்டுபிடிப்பிற்கு முன்னதாகவே இப்பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டது சாதகமான அம்சம்.
நட்சத்திர ஆமை (Grimpoteuthis imperator)
பசிபிக் கடலில் 4 ஆயிரம் அடியில் கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திர ஆமை இனம். ஆழ்கடலில் வசிக்கும் உயிரினங்களில் இதுவும் ஒன்று. இதன் தலையில் இரு காதுகள் போன்ற அமைப்பில் துடுப்புகள் அமைந்திருக்கும். இதுதான் இதனை தனித்துவமாக காட்டுகிறது. மர்ம உயிரினமாக அடையாளப்படுத்தும் இதனை எம்பரர் டம்போ ஆக்டோபஸ் என்று அழைக்கின்றனர்.
ஆதாரம்
5 new animals discoverd in 2021
brianna barbu
discover jan feb 2022
https://news.yale.edu/2021/05/05/how-yale-scientist-and-rem-star-named-ant-warhol-superstar
http://www.sci-news.com/biology/bombus-incognitos-09532.html
கருத்துகள்
கருத்துரையிடுக