பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!
பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்!
உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.
நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம். கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு, மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு, நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில் 1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட இடங்களைக் கண்டுபிடிப்பது அவசியம். கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புவியியல் வல்லுநர்கள் இதற்கான முயற்சியைத் தொடங்கினர். இச்செயல்பாட்டிற்கு, குளோபல் பௌண்டரி ஸ்ட்ராடோடைப் செக்ஷன் அண்ட் பாய்ண்ட் (GSSP) என்று பெயர்.
நிலப்பரப்பு ரீதியாக குறிப்பிட்ட உயிரினங்கள், வேதிப்பொருட்கள் இருப்பதாக கண்டறியப்படும் இடம் ஜிஎஸ்எஸ்பி முறையில் குறிப்பிடப்படுகிறது. இந்த முறையில், துனிசியாவில் எல் கெஃப் எனும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, இரிடியம் இருப்பது புவியியல் வல்லுநர்களால் உறுதிபடுத்தப்பட்டது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விண்கல் மோதலால் இரிடியத்தின் தடம் உருவாகியிருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
இதுபோன்ற புவியியல் ஆதாரங்களை கண்டறிய உலகளவில் 34 ஆராய்ச்சியாளர்கள் இணைந்துள்ளனர். இவர்களது குழுவிற்கு ஆந்த்ரோபோசீன் வொர்க்கிங் குரூப் (AWG) என்று பெயர். பாறை அடுக்குகளை ஆராயும் உலக அமைப்பு(ICS), ஆராய்ச்சிக்குழுவை வழிநடத்துகிறது.
”அணுகுண்டு வெடிப்பின் காரணமாக புளூட்டோனியம் பூமியில் சில இடங்களில் கிடைக்கிறது. இதனால் பருவச்சூழலில் மாறுபாடு ஏற்பட்டதாக கூறமுடியாது. கரிம எரிபொருட்களால், உருவாகும் மீத்தேன் வாயு வெப்பமயமாதலை நேரடியாகவே உருவாக்குகிறது “ என்றார் ஆய்வாளரான கோலின் வாட்டர்ஸ். தற்போது பூமியில் மனிதர்கள் தாக்கம் ஏற்படுத்திய இடங்களாக 12 இடங்கள் அறியப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்களிடம் வாக்கெடுப்புகள் நடத்தி, 2024 ஆம் ஆண்டு இதில் முதன்மையான இடங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
தகவல்
new scientist
Hunting the anthropocene's dawn
new scientist jan 29,2022
https://news.columbia.edu/news/marshall-islands-nuclear-radiation-chernobyl
கருத்துகள்
கருத்துரையிடுக