மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து!
கோவாவின் மாநில பட்டாம்பூச்சி!
உடலில் கருப்பு வரிகளைக் கொண்ட பேப்பர்கைட் (paperkite) எனும் பட்டாம்பூச்சியை கோவா அரசு, மாநில பட்டாம்பூச்சியாக தேர்ந்தெடுத்துள்ளது. இதனை மலபார் ட்ரீ நிம்ப் (malabar tree nymph ) என குறிப்பிடுகிறார்கள் . இதன் செல்லப்பெயர், பேப்பர்கைட். கோவாவில் ஐந்தாவது ஆண்டாக பறவைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை கோவாவின் வனத்துறை நடத்தியது. அதில் பங்கேற்ற மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், பேப்பர்கைட் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தார்.
பேப்பர்கைட் பட்டாம்பூச்சி, 120 முதல் 154 மி.மி. நீளம் கொண்ட இறகைக் கொண்டது. அழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரி என உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN),தனது பட்டியலில் இதனை அறிவித்துள்ளது. பேப்பர்கைட் பட்டாம்பூச்சி நிம்பாலிடே (Nymphalidae)எனும் குடும்பத்தைச் சேர்ந்தது.
அழியும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக கோவா அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் இப்பட்டாம்பூச்சியின் வாழிடம் பாதுகாக்கப்படும் முயற்சிகள் தொடங்கும் வாய்ப்புள்ளது. வனத்துறை உருவாக்கிய குழுவில் சூழல் வல்லுநர்கள் பலர் இடம்பெற்று கூறிய கருத்துகளின் படி, பேப்பர்கைட் பட்டாம்பூச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பங்கேற்ற மாநில பல்லுயிர்த்தன்மை வாரியத்தைச் சேர்ந்த உறுப்பினர் பிரதீப் சர்னோகடம், சூழலியலாளர் பாரக் ரக்னேகர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
குழுவினரின் கருத்துகளைக் கேட்ட கோவா அரசு, பொது வாக்கெடுப்பு ஒன்றை மக்களுக்காக நடத்தியது. அதிலும் பேப்பர்கைட் பட்டாம்பூச்சிக்கு 64 சதவீத வாக்குகள் கிடைத்தன. கோவாவுக்கு முன்னதாகவே ஆறு மாநிலங்கள் (மகாராஷ்டிரம், கேரளம், உத்தரகாண்ட், கர்நாடகம், தமிழ்நாடு, அருணாசலப் பிரதேசம்) மாநில பட்டாம்பூச்சியை தேர்ந்தெடுத்துள்ளன. அந்த வரிசையில் ஏழாவது மாநிலமாக கோவாவும் இப்போது இ ணைந்துள்ளது.
ஆதாரம்
malabar tree nymph is goa state butterfly
the goan network
panaji
படம் - பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக