பதற்றம் ஏற்படுத்திய இளம்பெண்ணின் ஷார்ட்ஸ்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

 









அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு, 

வணக்கம். 

நலமா? 

இன்று ராயப்பேட்டை முழுக்க ரத்தத்தின் ரத்தங்கள் நிறைந்துவிட்டனர். மழையிலும் கூட இந்த ஆட்களின் கூச்சலும் ரவுசும் குறையவில்லை. கரைவேட்டிக்காரர்கள் கொட்டும் மழையிலும் ஜபர்தஸ்தாக ஆர்பிஎல் வங்கி கீழ்த்தளத்தில் நின்று சில நொடிக்கு ஒருமுறை சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். 

இன்று ஆச்சரியமாக பள்ளி கால தோழர் ராஜ்குமார் போனில் அழைத்தார். இவர் மேட்ரை சின்னியம்பாளையம் எனும் ஊரில் வாழ்ந்து வந்தவர். எங்கள் அம்மாயி ஊருக்கு போகும் வழியில் உள்ள பாறைநிலம் அது. துணி வெளுப்பாளர்கள் வகுப்பைச் சேர்ந்தவர். குடும்பஸ்தரான இவர் எதற்கு திடீரென என்னை அழைத்தார் என்று எனக்கு புரியவில்லை.

 தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள அழைத்திருக்கிறார். பேசினார். பேச்சு எப்படி சென்றது என்றால் மயிலாப்பூரிலுள்ள குறுகலான தெருக்களிலிருந்து விரிந்த தெருக்களுக்கு போவதுபோலத்தான். 

மனைவி, மாதவிலக்கு, தம்பியின் வேலை, திருமணம், அவர் பெற்ற அரசு வேலை, குடும்ப கலாசாரம், சென்னைப் பெண்களின் டீஷர்ட் ஷார்ட் கலாசாரம் என சென்றது. இவர் பேசும்போது மழை பெய்துகொண்டு இருந்தது. 45 நிமிடங்கள் அடைமழையாக பேசியவருக்கு இறுதியில் நன்றி சொல்லி அழைப்பைத் துண்டித்தேன். 

தன்னறம் பதிப்பகம் உலகப் புகழ்பெற்றுவிட்டது. அதன் நூல் வெளியீடு டெலிகிராமில் கூட கிடைக்கிறது. ஜெயமோகன் எழுதிய தன் மீட்சி என்ற நூலை படித்தேன். எழுதுக நூலைப் போலவே இந்த நூலும் கேள்வி, பதிலாகவே அமைந்திருக்கிறது. நாம் பாசம் காட்டுபவர், நம் மீதும் அதே பிரியத்தை காட்டினால்தானே நன்றாக இருக்கும். தட்டும் கதவு திறக்கப்பட்டால்தானே திருப்தி ஆகிறது. 

ஆலிவர் அண்ணா, சிங்காரப்பேட்டை சென்று வந்தார் போல. தகவல் சொன்னார். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. தனக்கே தனக்கென்று பிரியமான உறவைத் தேடுகிறார் என நினைக்கிறேன். 







ஸ்கைலேப் என்ற தெலுங்கு படத்தை தமிழ் டப்பில் பார்த்தேன். ஊர்ப்பெயர்களை நிறைய மாற்றியிருக்கிறார்கள். சாதி வேறுபாடுகளை பொதுவான ஆபத்து எப்படி நீக்குகிறது என்பது முக்கியமான கதை. இதைத்தாண்டி, மருத்துவர், பத்திரிக்கையாளர் இருவரும் தங்கள் வாழ்க்கையை கிராமம் சார்ந்து எப்படி அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருந்தனர். படத்தை நிதானமாகவே பார்க்கவேண்டும். 

நன்றி

அன்பரசு 

18.1.2022 

Pinterest


கருத்துகள்