பிரெஞ்சுக்கலைஞர் கேட்ட கடனும், மஞ்சள் நிற அறையும்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

 









மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம். 

நலமா? நேற்று தாங்கள் அறிமுகப்படுத்திய ஆப்த தோழர் ஆலிவர் போன் செய்து பேசினார். செஞ்சி கோட்டையில் எடுத்த புகைப்படத்திற்கு சொன்னபடி 200 ரூபாயும் கூடுதலாக அவருக்காக நூறு சேர்த்து 300 அனுப்பினேன். அவர் சொன்னபடி புகைப்படத்தை அனுப்பியே வைக்கவில்லை. மேலும் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. பிக்சல் குறைந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு சரி. 

பிறகு ஒரு நாள் இரவில் போன் செய்தார். அவரது பயோடேட்டாவை ஆங்கிலத்தில் எழுதி தரச் சொன்னார். அதற்கு நிறைய இலக்கண அறிவோடு சமகால வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும். எனவே, என்னால் ஆகாது என்று சொல்லிவிட்டேன். பிறகும் விடாமல் பேசியவர் திருவண்ணாமலைக்கு அடுத்து எப்போது வருவாய் என இழுத்து இழுத்தி பேசியவர். 500 ரூபாய் பணம் கேட்டார். நான் உடனே இல்லை என்று சொல்லிவிட்டேன். 

முன்னர் நீங்கள் சொன்னபடி, திருவண்ணாமலை வந்துவிட்டு உடனே சென்னைக்கு திரும்புவதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். தினசரி மதுவைக் குடிப்பது, நமது ஊரைப் பொறுத்தவரை குடிநோயை உருவாக்கும் என நம்புகிறேன். ஆலிவர் அண்ணா அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். சகோதரர் பற்றி எழுதிய நூல் அவரின் தோழி கவிதா கேட்டார். லிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டேன். அதில், அவர் சகோதரருக்கு எழுதிய கடிதங்களும் உள்ளன. 

ரஷ்மி பன்சலின் சித்திரம் பேசுதடி நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். தொழில்முனைவோர் பற்றிய நூல். தமிழ்மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது. 

அன்பரசு 

3.2.2022

---------------------------







மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம். 
நலமா? நேற்று  அறையை சுத்தம் செய்து மலிவான மஞ்சள் பெயின்டை அடித்துக்கொடுத்துள்ளார் வீட்டு ஓனர். வெள்ளை நிறம் இருந்தால், நன்றாக இருக்கும். அறையில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.  ஓனர் செலவு செய்வதால், மஞ்சள் நிறம். எனவே, பொருட்களை எடுத்து அறையின் மையத்தில் வைத்துவிட்டு வடபழனி சென்றேன். 


அங்கு, சக்திவேல் சாரின் அறைக்குச்சென்றேன். இருவரும் சேர்ந்து டிக் டிக் பூம் என்ற படத்தைப் பார்த்தோம். இசைக்கலைஞர் ஜொனாதன் லார்சன் என்பவரின் சுயசரிதைதான் படம். 35 வயதில் நோய் காரணமாக இறந்துபோனவர், அதற்குள் என்ன சாதித்தார் என்பதை படமாக நன்றாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து பாடல்களும் ரீமாஸ்டர் செய்யப்பட்டு, நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்டும் பயிற்சி எடுத்துக்கொண்டு சில பாடல்களை பாடியுள்ளார். 


அமிஷ் திரிபாதி எழுதிய சீதா மிதிலையின் போர்மங்கை நாவலைப் படித்து வருகிறேன். இவர் எழுதிய ராமச்சந்திரா நூல் தொகுப்பு நான்கு நூல்களைக் கொண்டது. நான் ஏற்கெனவே இரு நூல்களைப் படித்துவிட்டேன். கடசீல பிரியாணி படம் பார்த்தேன். சுயாதீனப்படம். அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கும் மகன்களின் கதைகளைக் கொண்ட கதை. அவல நகைச்சுவையோடு படம் எடுத்திருக்கிறார்கள். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். 
அன்பரசு 
21.2.2022

images- 
Pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்