ஆன்மிக அனுபவ தரிசனம் தரும் அருகர்களின் பாதை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்
ஜெயமோகனின் அருகர்களின் பாதை நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய கட்டுரை நூல். ஐந்து மாநிலங்கள் வழியாக செய்த பயணம் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். புனைவு அளவுக்கு படிமங்கள் கிடையாது. ஐந்து மாநிலங்கள் வழியாக சமண ஆலயங்களைத் தரிசித்து செல்லும் பயணம், சந்தித்த மனிதர்கள், கோவில் சிற்பங்கள், அதன் வர்ணனை என அசத்தலாக இருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் |
இங்கு மழை தூறலாக கனமழையாக என பல்வேறு வடிவங்களில் நாள் முழுவதும் சொட்டிக்கொண்டே இருக்கிறது. நேற்றிலிருந்து இன்றுவரை கூரையிலிருந்து விழும் மழைநீரின் ஒலி, சிற்சில வேறுபாட்டுடன் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஈரமான காற்று எப்போதும் ஒருவித பிசுபிசுப்பான தன்மையைக் கொடுக்கிறது. வெளியே குளிர்ச்சி, சட்டைக்கு உள்ளே புழுக்கம் என வித்தியாசமான சூழல் இருக்கிறது. நேஷனல் புக் டிரஸ்டில் புத்தகங்களை வாங்க அருகிலுள்ள தாமரை பப்ளிஷர்ஸை அணுகி உதவி கேட்டேன். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாகும் என்று சொன்னார்கள். வேலை செய்யும் இதழுக்காக சில நூல்கள் தேவைப்படுகின்றன. பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழை வாங்க நினைத்துள்ளேன். பார்ப்போம்.
நன்றி!
அன்பரசு
8.11.2021
----------------------
த.சக்திவேல், பத்திரிகையாளர் |
அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
பிரன்ட்லைனில் உபீந்தர் சிங் பேட்டியைப் படித்தேன். அசோகா பல்கலைப் பேராசிரியர் இவர். முன்னாள் பிரதமர் மன்மோகனின் மகளும் கூட. தொன்மை இந்தியா பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். அது தொடர்பான கேள்விகளுக்கு சிறப்பாக வரலாறு சார்ந்து பதில் சொல்லி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதனை சுருக்கமாக பிளாக்கில் மொழிபெயர்க்க திட்டமிருக்கிறது.
இன்று எனது முன்னாள் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கிடைத்த நண்பர்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. குங்குமம் சக்தி சாரோடு நித்யாமிர்தம் கடைக்கு சென்றேன். அங்கு, முந்திரி அல்வா வாங்கி சாப்பிட்டோம். வேறுவழியே இல்லை. மயிலாப்பூரில் நிம்மதியாக உட்கார்ந்து பேச எந்த இடமுமே இல்லை.
தேவன் எழுதிய கல்யாணி என்ற நூலை வாங்க அல்லயன்ஸ் பதிப்பகம் சென்றேன். ரெண்டு வாரங்கள் கழித்து வாங்க என்றுசொல்லிவிட்டார்கள். கேட்டலாக் கேட்டதற்கு இணையத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இணையத்தில் அத்தனை நூல்களையும் பார்த்துவிட்டுத்தான் போனேன். அச்சில் உள்ள, கடையில் கிடைக்கும் நூல்களைப் பற்றிய தகவல்கள் அதில் இல்லை. நன்றி!
சந்திப்போம்.
அன்பரசு
17.11.2021
கருத்துகள்
கருத்துரையிடுக