அன்பளிப்பு நூல் திட்டத்தை தொடங்கிய மாவட்ட நீதிபதி!
அன்பளிப்பு நூல்களால் உருவாகும் வாசிப்பு பழக்கம்!
பீகாரின் புர்னியாவில் மாவட்ட நீதிபதியாக ராகுல் குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். இவர், நூல்களை அன்பளிப்பாக வழங்கும் அபியான் கிதாப் தான் (‘Abhiyan Kitab Daan’) திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். நூலகத்திற்காக, மக்கள் தங்களிடமுள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் இது.
இத்திட்டம், கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ராகுல்குமார், சிறியளவில் தொடங்கினார். இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பில் பெரிய திட்டமாக வளர்ந்துள்ளது. இதனால், மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராம, நகர்ப்புறங்களிலும் நூலகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வரலாறு, புவியியல், போட்டித்தேர்வு, இலக்கியம் என பல்வேறு துறை சார்ந்து ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்களை உள்ளூர் மக்கள் வழங்கியுள்ளனர். இதனை மேலும் மேம்படுத்த ராகுல்குமார் மேசை, புத்தக அலமாரி, நாற்காலிகளை வாங்கித் தர திட்டமிட்டுள்ளார்.
”கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் வயது வேறுபாடின்றி நூலகத்தால் பயன் பெறலாம். நூல்களை வாங்கிப் படிக்க முடியாத ஏழைமக்கள், நூலகத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு அறிவை வளர்த்துக்கொள்ளலாம் “ என ராகுல்குமார் ஐ.ஏ.எஸ் கூறினார். நூலகங்களிலுள்ள அனைத்து நூல்களின் பெயர்களையும் தொகுத்து வலைத்தளத்தில் பதிவிடவும் ராகுல்குமார் முயன்று வருகிறார். தற்போது புர்னியா மாவட்டத்திலுள்ள 15 நூலகங்களில் சிறப்பாக செயல்படும் நூலகத்திற்கு, நூல் மேலாண்மைக்கென கணினி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் நூலகர்களுக்கான நிர்வாக பயிற்சியும் விரைவில் வழங்கப்படவிருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக