கனடாவில் பன்மைத்தன்மையைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் அமைப்பு!

 


















பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயிகளின் குழு! 

நூற்றாண்டுகளுக்கு முன்னர், தனித்துவமான பழங்கள், காய்கறிகளை எளிதாக பெறமுடியும்.  அன்று காய்கறி, பயிர் விதைகளை எளிதாக விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட முடியும். ஆனால் இன்று தொழில்துறை வேகமாக முன்னேறியுள்ளது. பணப்பயிர்களை அதிகம் விளைவிக்கும்  நிலையில், பாரம்பரிய விதைகளை காண்பது குறைந்துவிட்டது. உலகெங்கிலும் சிலர் பாரம்பரிய விதைகளைக் காக்க தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர். 

வட அமெரிக்காவில் உள்ள 90 சதவீத பழங்கள், காய்கறிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுக்க  75 சதவீத பயிர்களில் பன்மைத்தன்மை அழிந்துவிட்டது அறிவியல் உண்மை. விதைகளை காக்கும் பணியில்  இயற்கை பேரிடர்கள், பூச்சிகளின் தாக்குதல் என சில சவால்கள் உள்ளன. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் ஆகிய நகரங்களில் 1980களில் விவசாயிகள் ஒன்றுபட்டனர். பாரம்பரிய விதைகளை காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.  இச்செயல்பாட்டில், தொடக்கத்தில் நூறு விவசாயிகள் பங்கேற்றனர். 

அக்காலகட்டத்தில் பெரு விவசாய நிறுவனங்கள், உள்நாட்டு விதை நிறுவனங்களை கையகப்படுத்தி வந்தன. அதன்மூலம், உள்நாட்டில் அதிக விலைக்கு விற்கும் பயிர்களை விளைவிக்கும் நிர்பந்தம் உருவானது.  இதன் விளைவாக, மெல்ல பாரம்பரிய விதை ரகங்கள்  புறக்கணிக்கப்பட்டன. ஆண்டுதோறும் பாரம்பரிய விதை ரகங்கள் விளைவிப்பது குறைந்தது. இதைப் பார்த்த கனடா விவசாயிகள், அவற்றைக் காக்க கைகோத்தனர். இவர்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தேவையான விதைகளை அஞ்சல் உறை வழியாக அனுப்பத் தொடங்கினர். 

விதைகளைப் பாதுகாக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது. பிறகு, இவர்களின் முயற்சியால் 1995ஆம் ஆண்டு சீட்ஸ் ஆப் டைவர்சிட்டி என்ற தன்னார்வ அமைப்பு உருவானது. கனடாவின் பாரம்பரிய தாவர அறிவைப் பாதுகாத்து தொடர்வதே இந்த அமைப்பின் லட்சியம். 

பத்தாண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளின் அமைப்பினர், விதை நூலகம் ஒன்றை உருவாக்கினர்.  இதில், 2,900 விதை வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான நிதிநல்கையை விவசாயிகளே வழங்குகின்றனர். கோடைக்காலத்தில் பயிர்களை விளைவிக்க விரும்பும் விவசாயிகளுக்கு விதைகளை நூலகத்திலிருந்து எடுத்து அனுப்பி வைக்கின்றனர்.  கிடைப்பதற்கு அரிய விதைகளை மட்டும் அனுபவம் பெற்ற மூத்த விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். 

அறுவடை முடிந்தபிறகு, புதிய பயிர் விதைகளை விவசாயிகள் வாட்டர்லூ எனும் நகரிலுள்ள விதை நூலகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இதனை காய வைத்து, எடையிட்டு சோதித்து  சேகரிப்பில் சேர்த்துக்கொள்கின்றனர். 2007ஆம் ஆண்டு தொடங்கி விதைகளை விவசாயிகளுக்கு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

“இப்போது விதை நூலகத்தை எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்த்து வருகிறேன். எதிர்காலத்தில் இதே பணியை மற்றொருவர்  தனது வாழ்க்கையாக்கிக் கொள்வார்”  என்றார் விதை நூலகத்தின் இயக்குநரான  பாப் வைல்ட்ஃபாங்.  விதை நூலகம் வாட்டர்லூ, குலெப் எனும் இரு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. 


 தகவல்

Readers digest

seed savers (serena renner)

RD march 2022


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்