வாசிப்பு பழக்கத்தை மாணவர்களின் மனதில் விதைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

 





ஆசிரியர் உமா மகேஸ்வரி






வாசிக்கும் பழக்கம் என்பது மாணவர்களுக்கு இன்று அவசியமானது. அதிலும் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாகிக்கொண்டு இருக்கும் நிலையில், அவர்களது கற்பனைத் திறனை வளர்க்க வாசிப்பு உதவுகிறது. இதற்கு சில ஆசிரியர்கள் எப்போதும் உதவி வருகின்றனர். கூடவே அதனை வளர்க்கவும் மாணவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி ஒருவர்தான் ஆசிரியர் உமா மகேஸ்வரி. இவர் குரோம்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இங்கு வகுப்பில் மாணவர்களுக்கென தனி நூலகத்தை உருவாக்கியிருக்கிறார். 

மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட அவர்கள் நூல்களை வாசிப்பது, அதை பற்றி மதிப்பீடுகளை முன் வைப்பதற்கும் கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறார். இது மாணவர்களுக்கு நூல்களின் மீது அக்கறை செலுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக, அரசுப் பள்ளி மாணவி விமானத்தில் செல்லும் வாய்ப்பையும் நூல் வாசிப்பு வழங்கியிருக்கிறது. திரைப்பட நிறுவனம் ஒன்று உங்கள் கனவு பற்றி கட்டுரை எழுதுங்கள் என்று சொல்லி நடத்திய போட்டியில் மாணவி வெற்றி பெற்று முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்து திரும்பியிருக்கிறார். 

2005ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் ஜன்செட்டிபாளையம் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் உமா மகேஸ்வரி வேலை செய்து வந்தார். அங்குதான் நூல்களை வாசிக்க மாணவர்களுக்கு ஊக்கம் தரத் தொடங்கினார். அங்கு காலைக்கதிர் என்ற மாத இதழ் வந்துகொண்டிருந்தது. அதில் மாணவர்களுக்கான ஏராளமான அறிவியல் சோதனைகள் வந்தன. அவற்றை வாங்கி வந்து மாணவர்களுக்கு கற்றுத்தந்து அதனை செய்ய வைத்தார் உமா. இது மாணவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை பெருமளவு ஊக்குவித்தது. 

2018இல்தான் குரோம்பேட்டை அரசுப்பள்ளிக்கு வந்தார் உமா. இங்கு தனது சொந்த செலவில் தும்பி, யாதும் என்ற இதழ்களை சந்தா கட்டி மாணவர்களுக்கு வாசிக்க  கொடுத்தார். இது மாணவர்களின் கல்வி அறிவை சிறப்பாக வளர்க்க உதவியிருக்கிறது. மேலும் ஆசிரியர் உமாவின் ஈடுபாட்டால், பெற்றோர்களும் தங்களிடமுள்ள நூல்களை வகுப்பு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கத் தொடங்கியுள்ளனர். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

நிருபமா விஸ்வநாதன்

Image - Magzter


கருத்துகள்