31 வயதில் 120 பேர்கொண்ட குழுவுக்குத் தலைவர்! - ஜோஹோ பள்ளியின் சாதனைக் கதை
ஸ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ |
பொதுவாக தமிழ்நாட்டில் சாதித்து பெரிய இடங்களுக்கு நகர்பவர்கள், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். விவசாயிகள், வீட்டுவேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். இந்தியளவில் எடுத்துக்கொண்டால், பஞ்சாப்பின் புதிய முதல்வரின் அம்மா, பள்ளிக்கூடத்தில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்தவர், செய்து வருபவர்தான்.
செய்யும் வேலையை புனிதப்படுத்துவதற்காக சொல்லவில்லை. சாதிரீதியாக, திறன் ரீதியாக நிறைய வேறுபாடுகள் இங்குள்ள மனிதர்களுக்கு இடையே உள்ளது என்பதை கூறவே முந்தைய பாரா.
பார்த்திபனுக்கு வயது 31. ஜோகோ நிறுவனத்தின் மேனேஜ் எஞ்சின் என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். புரோடக்ட் மேனேஜராகப் பணி. இந்தப் பணியில்தான் 120 பேரைக் கட்டி மேய்க்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபனுக்கு இருந்த கனவு, கட்டுமானக் கலைஞர் ஆவதுதான். ஆனால் அவரது குடும்பம் இருந்த பொருளாதார நிலையில் அது சாத்தியமில்லை என விரைவில் தெரிந்துகொண்டார். நான்கு பேர் கொண்ட குடும்பம், மாதம் அப்பா சம்பாதிக்கும் 3 ஆயிரத்தில்தான் நடந்து வந்தது. ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள், வருமானப் பற்றாக்குறையால் அங்கிருந்து வெளியேறி அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களது தந்தைக்கு நீரிழிவு நோயும் இருந்தது கண்டறியப்பட்டது.
அப்போது அரசுப்பள்ளிகளுக்கு ஜோகோ நிறுவனம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துடன் வந்திருக்கிறது. இவரது சகோதரர் அதில் தேர்வு எழுதி சேர்ந்துவிட்டார். சகோதரரைப் பின்பற்றி பார்த்திபனும் அதில் உள்ளே நுழைந்துவிட்டார். பிறகுதான் போலாரிஸ் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப்பிற்கான தேர்வு எழுதி அதில் வெற்றிபெற்றிருக்கிறார். அரசுப்பள்ளி வகுப்புகளோடு வாரம் ஒருமுறை போலாரிஸ் நிறுவனம் உள்ள அண்ணாசாலைக்கு சென்று விளையாட்டுகள், புரோகிராமிங் என பல்வேறு விஷயங்களை பார்த்திபன் கற்றார். அதுவரை கணினியை இயக்கிய அனுபவமே அவருக்கு கிடையாது. ஜோஹோ பள்ளியில் அறுபது மாணவர்களைக் கொண்டு கணினி வகுப்புகளை நடத்தினர். அனைத்துமே பிராக்டிக்கலான வகுப்புதான். பார்த்திபனுக்கு முதலில் ஹெச்டிஎம்எல் மொழியைக் கற்றுக்கொடுத்தனர். பிறகு, ஆங்கிலம், கணிதம், செமினார் என வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் ஆங்கிலத்தில் கருத்துகளை பரிமாறிக்கொள்ள வாரம்தோறும் ஒரு படத்தையும் திரையிட்டு வசனத்தை புரிந்துகொள்வது பற்றி விவாதித்துள்ளனர்.
ஜோஹோபள்ளியில் படித்தவர்களுக்கு அவர்களுடைய திறனை வளர்த்துக்கொள்ள பல்வேறு பிரிவுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பார்த்திபனுக்கு முதல் வேலையாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கான மென்பொருளை வடிவமைப்பதை கொடுத்தனர். பணி எளிதாக இல்லை. கூகுளில் பல்வேறு விஷயங்களைத் தேடிப் படித்து புரோகிராமிங்கை ஜாவாவில் எழுதி நிறைவு செய்திருக்கிறார்.
ஜோஹாவின் அலுவலக சூழலில் யாரையும் சார், மேடம் என கூப்பிடக் கூடாது என கூறியிருக்கிறார்கள். இதற்கு அனைவரையும் சமமாக கருதுவதே முக்கியம் என நிர்வாகம் கூறியிருக்கிறது. மேலும் ஆங்கிலத்தில் எழுதுவது, பேசுவதை மூத்த அதிகாரிகள் சோதித்து, தங்களது கருத்துகளை சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனால்தான் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த இளைஞர் ஜோஹோவில் சிறப்பான பணியைப் பெற முடிந்துள்ளது. சாதிக்க முடிந்துள்ளது. நடைமுறைக்கு ஏற்ற வகையில் கல்வியைப் படித்து கல்வியைப் புரிந்துகொண்டால் சரிதான் என மாணவர்களுக்கு அறிவுரைகளை சொல்லுகிறார்.
ஜோஹோ பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர, தகுதித்தேர்வு எழுதவேண்டும். அதில் தேறியவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
ஜோஹோ பள்ளியைப் போலவே தேர்வு எழுதி சேரும் நிறுவனங்களாக ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் வலைத்தளங்களில் இதுதொடர்பாக விவரங்கள் உள்ளன. அவற்றைப் பெற்று படிப்புகளில் சேருவதற்கான விதிகளை அறியலாம்.
லிஃபி தாமஸ்
hindu downtown
கருத்துகள்
கருத்துரையிடுக