ஒன்றை உயர்த்த பிறிதொன்றை தாழ்த்த வேண்டியதில்லை! - வினோத் பாலுசாமிக்கு எழுதிய கடிதங்கள்
மதிப்பிற்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.
நலமாக உள்ளீர்களா? அலர்ஜி பற்றிய நூலை மீண்டும் எழுத முயன்று வருகிறேன். சிறு புத்தகம்தான். அதிகமாக எழுத நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை. மார்ச் மாத இதழ் வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எதுவுமே தெரியாத பிறவி பைத்தியங்களுடன் சேர்ந்து வேலை செய்வது கடினமாக மாறிவருகிறது. இருந்தாலும் பொருள் இருந்தால்தான் தானே அறம் செய்யமுடியும்? எனவே, பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் சொன்னபடி ரமேஷ் வைத்யா சார், அதை கஷ்டப்பட்டு எழுதியதாக சொன்னார். நன்றாக எழுதக்கூடியவர் என எனது எடிட்டர் சொல்லுவார். மனம் ஒன்றினால்தான் வேலை செய்வார். இல்லையெனில் கீழிறங்கி டீ குடிக்கப் போய்விடுவார்.
அம்மாவுக்கு தைராய்டு சுரப்பி வேலை செய்யவில்லை. இத்தனை தொல்லைகள் இருந்தாலும், அவள் உளவியல் பிரச்னைகளால் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இனி கட்டாய ஓய்வு எடுத்தேயாகவேண்டும். மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. நான் திருவண்ணாமலை வர நினைத்தேன். ஆலிவர் அண்ணாவின் நூலையும் உங்களது நூல்களையும் திரும்ப கொடுத்துவிட்டால் கடன் முடிந்தது.
உங்களது ஆபீசில் - ஸ்டூடியோவில் சிறிதுநேரம் இருந்துவிட்டு கிளம்பிவிடுவேன். பயப்பட வேண்டாம். கற்பகத்தின் செல்வன் - அசோக் கொடுத்த சுட்டியானை இதழ்களை தெரிந்தவர்களுக்கு கொடுத்து வருகிறேன்.
அன்பரசு
25.2.2022
-----------------------
மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம். நலமா?
இன்று பட்டம் இதழின் சிம்மக்குரலோன் பாலபாரதி வேலையை விட்டு விலகிவிட்டார். அதாவது அதிகாரப்பூர்வமாக ... கேக் வெட்டி போட்டோ எடுத்து பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவை எப்போதும் போல மனோபாலா ஒருங்கிணைத்தார். அலர்ஜி காரணமாக கேக்கை என்னால் சாப்பிட முடியவில்லை. நான் ஒன்றிய அரசின் விருதுபெற்ற எழுத்தாளருடன் சில மாதங்களாக நான் பேசவில்லை.
அதிகாரத்தில் உள்ளவர்களோடு எப்பாடு பட்டேனும் நெருக்கமாகிவிடுவது அவரின் வழக்கம். வீழ்ந்துவிட்ட இடதுசாரி ஆளுமைகளில் அவரும் சேருகிறார். ஆட்டிசம் தொடர்பான சிந்தனையாளர்களின் முதன்மையானவர். இப்போதுதான் அவரது பணிவிலகலுக்கான வாழ்த்துச்செய்தியை அனுப்பினேன். அவரும் இமோஜிகளை அனுப்பினார். இன்னொரு நிறுவனத்தில் தனது பணியை வெற்றிகரமாக தொடர்வார் என நம்பலாம். இந்த இடத்தில் இந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டது.
புத்தக திருவிழாவில் தும்பி அரங்கிற்கு செல்லாதது பற்றி பேசினீர்கள். உங்களது நூலை தன்னறம் பதிப்பித்துள்ளது. அதற்காக ,நீங்கள் அங்கு செல்லலாம். ஆனால் நான் எதற்கு அங்கு செல்லவேண்டும்?
அங்கு சென்று ஆணவம் கொண்ட தொப்பி முரடர்களிடம் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. இயல்வாகை இப்படித்தான் தொடங்கி நடந்தது. சிவராஜ் அண்ணனின் நோக்கம் மாறும்போது, புதிய நிறுவனம் உருவாகும். பழைய நிறுவனம் கைவிடப்படும். அல்லது வேறு ஒருவருக்கு கைமாறும். நூல் பதிப்பு நிறுவனம், தொடர்ச்சியாக இயங்கட்டும். பார்ப்போம். உங்களுக்கு பிடித்த ஒன்றை உயர்த்திச்சொல்ல பிறிதொன்றை தாழ்த்திப் பேச வேண்டியதில்லை வினோத் அண்ணா!
அன்பரசு
28.2.2022
கருத்துகள்
கருத்துரையிடுக