ஐஐடி சென்னை ஆராய்ச்சி மன்றில் - எதிர்கால இந்தியா 2047 - செய்தி சேகரிப்பும் பயணக்குறிப்பும்

OZY




 









ஏழாம் தேதி சற்று தாமதமாக தரமணிக்கு சென்றோம். எப்படி என்பதை முதல் பகுதியில் கூறியிருந்தேன். தேநீர் நேரம் முடிந்து கருத்தரங்கம் மதிய உணவு நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது நான் தவறவிட்டது முக்கியமான பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சி பற்றியது. அதனை அடுத்த நாள்தான் இணையத்தில் தேடிப்பார்க்கும்போதுதான் தெரிந்தது. 

கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் என்ன சொன்னார் என்று ஒருவழியாக ஆராய்ந்து பார்த்ததில், அவர் எண்ணெய் குழாய்கள் அரிக்கப்படுவது பற்றி ஆராய்ந்து சொன்னார். அதாவது அல்ட்ராசோனிக் அலைகள் மூலம், குழாய்களை ஆராய்ந்து அதன் அரிப்பைக் கண்டுபிடிப்பது என விளக்கமாக சொன்னார். மிகவும் முக்கியமான குழப்பமானதாகவும் எனக்குத் தோன்றியது. இதனை நாளிதழுக்கு எழுதும்போது, தேர்வு செய்யவில்லை. 

ஒன்பதாம் தேதி காலையில் அலுவலகத்திற்கு வரவில்லை. நேராக அறையில் குளித்து முடித்து மலம் கழித்துவிட்டு, மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டேன். அங்கு வந்த ரயிலில் ஏறினேன். ஏறிய பெட்டியில், சிவப்பு நிற சுடிதார் அணிந்த பெண் என்னை உற்றுப் பார்த்தார். நான் அதற்குப் பிறகு  அவரைப் பார்க்கவே இல்லை. கஸ்தூரிபாய் நகரில் இறங்கினார். ரயில் நகரும்போது அவர் படிக்கட்டில் இறங்குவதைப் பார்த்தேன். தோளில் ஒரு பேக், கையில் ஒரு பை என தடுமாறியபடி சென்றார். 

எந்த இடத்திற்கும் காலதாமதமாக செல்லாமல் இருப்பது என்பது முக்கியமானதாக நான் கருதுகிறேன். இதற்காக செய்யும் விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. நேரம் தவறக்கூடாது, யாரையும் காத்திருக்க வைக்க கூடாது என்பதை முக்கியமாக நினைக்கிறேன்.  முந்தைய இரவே காந்தியிடம் சற்று முன்னே வரச்சொல்லிவிட்டேன். அவர் முதலில் தயங்கினார். ஆனால் எனக்கு பேராசிரியர் அசோக்கைப் பார்த்துப் புரிந்துகொண்டதில் அவர் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்துகிறார் என தெரிந்தது. சரியான நேரத்திற்கு சென்றால் முழு நிகழ்ச்சியையும் பார்த்து விடலாம் என நினைத்தேன். நாங்கள் உள்ளே செல்லும்போது, கருத்தரங்கு அரங்கில் திரு.அசோக் பேசத் தொடங்கிவிட்டார். அவர் வேகத்திற்கு அங்குள்ள மிகச்சிலரே பிரசன்டேஷனுடன் தயாராக இருந்தனர். பிறர், அரங்கிற்கு வரவேயில்லை. சீக்கிரம் தயாராகுங்கள் என பேராசிரியர் மிரட்டிக்கொண்டிருந்தார். 

உண்மையில் அங்கு நடந்தது , அடுத்த பத்து அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கான தொழில்திட்டம். ஐஏஎஸ் அதிகாரிகள், தொழில்முனைவுக்கான சிந்தனை கொண்டவர்கள், தொழில்முனைவோர் என பலரும் ஒன்றாக கூடி பேசிக்கொள்வதற்கான இடம்தான் சிம்போசியம் எனும் இக்கருத்தரங்கு.

பல்வேறு கருத்துகளை கூறுவதற்கான நேரம் 12 நிமிடங்கள்தான். அதையும் மிச்சம் செய்தவர்கள்,  ஏதேனும் கேள்வி உண்டா என கேட்டனர். அதையும் முழுதாக செலவிட்டவர்கள், உடனே மேடையில் மைக்கை கழற்றிக்கொடுத்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான். 

ஆர்பி ஆடிட்டோரியத்தில் 500 பேர் அமர முடியும். அதில் அரைப்பங்கு நிறைந்துவிட்டது. நாங்கள் சென்று பின்புறமாக இருந்த பச்சை இருக்கைகளில் அமர்ந்தோம். அதற்குப் பிறகுதான் ஐஸ்வர்யா கணேஷ், பளிச்சென்ற நவீன உடையோடு முகம் நிறைய புன்னகையும் நிறைய வாசனையோடும் வந்து முன்புறமாக உட்கார்ந்தார். பின்னர் ரீமா மேடமின் உதவியாளர் எங்கள் பின்புறமிருந்த இருக்கையை நிரப்பினார். 


காந்திராமனுடன் ஐஐடி மெட்ராஸ் ஆர்பி


எங்கள் இருக்கை அருகே படிக்கட்டு அமைந்திருந்தது. அதில் ஒரு விசேஷமிருந்தது. வரிசையாக இருந்த படிக்கட்டில் ஒன்றில் மட்டும் பிளாஸ்டிக் விளிம்பு இல்லை. அனேகமாக உடைந்து போயிருக்கலாம். இதனால் எங்களைத் தாண்டி அமர வந்தவர்களில் பத்தில் ஆறுபேர் அந்த படிக்கட்டை அறியாமல் கால் வைத்து தடுமாறி விழப்போனார்கள்.  நிகழ்ச்சியோடு இது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 

நான் இதை தேநீர் இடைவேளையின்போது சொன்னால் காந்தி அதை உடனே மறுத்தார். நாங்கள் வரிசையில் நின்று சாண்ட்விச்சை வாங்கும்போது இருபது நிமிட இடைவேளை மிகவும் குறைந்துவிட்டது. நான் கழிவறையில் சிறுநீரைக் கழிக்க அதிக நேரம் செலவழித்துவிட்டேன். 

பந்தியில் சோறு தின்ன நிற்பது போல கழிவறையில் ஒருவர் சிறுநீர் கழித்தவுடன் அந்த இடத்தைப் பிடிக்க பலர் முதுகுக்கு பின்னால் நின்றபடியிருந்தனர். மேலும் அங்கேயே பலர் வழியை மறைத்தபடி பேசிக்கொண்டிருந்தனர். வேகமாக போய் டீ குடிக்கவேண்டுமே என்ற பதற்றத்தில் நான் கையை கழுவிவிட்டு டிரையரை அழுத்த நினைத்து, ஹேண்ட்வாஷ் லிக்யூட்டை அழுத்திவிட்டேன். அதனை கழுவிட்டு டிஷ்யூ பேப்பரை தேடினால், அதை மறைத்துக்கொண்டு ஒருவர் தனது எதிர்கால ஐடியாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். 

எப்படியோ சமாளித்து தேநீர் கொடுக்கும் உணவு ஹாலுக்கு சென்றேன். நாங்கள் இருவரும் வந்த லிப்டிற்கு வலதுபுறத்தில் உணவு பரிமாறும் அறை இருந்தது. அங்கும் க்யூதான். வரிசையில் நின்று சாண்ட்விட்சை வாங்கி டீ கப்பை நிரப்பிக்கொண்டு ஜன்னலைப் பார்த்த மாதிரி இருந்த இடத்திற்கு சென்றோம். அங்கு அக்னிகுல் ஸ்ரீநாத் ஜன்னலில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அவரது டம்ளரில் இருந்த குச்சியைப் பார்த்தவுடன் நான் தவறு செய்துவிட்டேன் என முடிவுக்கு வந்துவிட்டேன். ஆம் . சர்க்கரையை தனியாக வாங்க வேண்டும். சரி, பரவாயில்லை என சாண்ட்விட்சை சாப்பிட்டேன். பிறகு பால் திக்காக இருந்த சர்க்கரை அணுவளவும் இல்லாத டீயைக் குடித்தேன். 

காந்திக்கு பெரிய ஏமாற்றமாகிவிட்டது. எனக்காக பிஸ்கெட்டை கொண்டுவந்தேன் என்று சாப்பிடு சாப்பிடு என கட்டாயப்படுத்தினார். என்னால் முடியாது என ஒற்றை வார்த்தை சொன்னதில் சமாதானமாகி, எப்போதும் போலவே அவரே சாப்பிட்டு விட்டார். நான் ஸ்ரீநாத் ரவிச்சந்திரனிடம் பேசலாம் என நினைத்தேன். கருத்தரங்கில் பேசியவர்களின் அவர் மட்டுமே, மேக் இன் இந்தியா பற்றி பேசினார். மேலும் மேற்குலக ஐடியாக்களை காப்பியடிக்கும் நிறுவனங்களை கடுமையாக கிண்டலடித்தார். அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தேன். பரவாயில்லை அவரைப் பார்க்கவும் பேசவும் வாய்ப்பு கிடைத்ததே என மகிழ்ச்சியாக இருந்தது. நேரம் ஆகிவிட்டது என அப்போதே, பேராசிரியர் அசோக்கின் சீடர் அனைவரையும் விரட்டத் தொடங்கிவிட்டார். நாங்களும் வேகமாக கூட்டத்தை பின்தொடர்ந்தோம். 

முதல் பேச்சாளராக கிருஷ்ணகுமார், கண்டுபிடிப்பு என்றால் என்ன என விளக்கம் கொடுத்தார். நிறைய ஆராய்ச்சி செய்து பிரசன்டேஷன் தயாரித்திருந்தார். எனவே, அதைப் புரிந்துகொள்வது காந்திக்கு மட்டுமே சாத்தியம் என நினைத்தேன். நினைத்தது போலவே காந்தி நோட்டில் ஏராளமாக எழுதிக் குவித்துக்கொண்டிருந்தார். 

அனில்குமார், சாமுன்னதி  நிறுவனம் நிறுவனங்களுக்கு அளித்த கடன் தொகை, டிஜிட்டல் முறையில் எப்படி விவசாயிகளை ஒருங்கிணைக்கிறது என விளக்கிப் பேசினார். ஷரித் தாஸ், மெக்கானிக்கல் எஞ்சினியர். அவர் மைக்ரோப்ளூயிட்ஸ் பற்றி பேசி விளக்கம் கொடுத்தார். ஆனால் அதிக நேரம் எடுத்துக்கொண்டுவிட்டார். இதனால் சாப்பிடும் நேரத்திற்கான இடைவேளை குறையத் தொடங்கியது. 

ஸ்டெல் ஆப்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சித் முகுந்தன் பேசத் தொடங்கியபோது, புரஜெக்டரில் குளறுபடி தொடங்கியது. இந்த சிக்கல் சாப்பிடும் இடைவேளை வரை நீடித்தது. இடையில் ஆன்லைனில் வேறு ஆட்கள் வந்து கேள்விகளைக் கேட்டனர். இப்படி கேள்வி கேட்பதை பற்றி திரு.அசோக்கிற்கு கூறவில்லை என்பதால்,  அவர் அதிர்ச்சியடைந்து பிறகு சமாளித்துக்கொண்டார். 

 ஜிதேந்திர சோனி முழுக்க இந்தியில்தான் பேசினார். அவர், ராஜஸ்தானில் செய்த வளர்ச்சி பணிகள், சிலிகோசிஸ் நோயைத் தடுத்தது. மக்களிடம் பணம் பெற்று பள்ளிகளுக்கு மின்சார வசதி செய்தது ஆகியவற்றைப் பற்றி விளக்கி சொன்னார். அவர் சொல்லாத இன்னொரு விஷயம். அரசுப்பணியோடு பத்து நாவல்களை எழுதியிருக்கிறார் ஒரு நாவலுக்கு யுவ புரஷ்கார் விருதும் வாங்கியிருக்கிறார். சமூகப்பணிகள் மீது ஆர்வம் கொண்டவர். அறுபது ஆண்டுகளாக ராஜஸ்தானின் நாக்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சாலையை மீட்டிருக்கிறார். அதனை மக்களுக்கானதாக மாற்றியிருக்கிறார். இவர் தனது செயல்களை சொன்னபோது உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தளவு மன உளைச்சல்களை இவர் சந்தித்திருக்க வேண்டும் என பணிமாற்ற சிக்கல்கள், மிரட்டல்கள் கூட வந்திருக்கிறது. ஆனால் அத்தனையையும் சமாளித்திருக்கிறார். 

ஆச்சரியமான அதிகாரி.... 

நான் அப்போது மனதில் நினைத்தேன். கொஞ்சம் ஞாபக சக்தி இருந்தால் இப்படி ஏதோ ஒரு நல்ல விஷயம் செய்திருக்க முடியுமோ? என்று. இந்த ஆதங்கள் வாழ்க்கை முழுக்க தொடர்வதுதான். எனவே, மனநிறைவோடு கைதட்டினேன். இப்போதைய வேலை செய்தியை எழுதி ஆசிரியருக்கு அனுப்புவதுதான். ரைட் என மதிய உணவை அங்கேயே ஜெயின் கவுன்டரில் முடித்துக்கொண்டேன். காந்தி, கோழிக்கறித்துண்டுகளை பல்வேறு நிறத்தில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். எல்லோரும் அங்கு ஸ்பூனில் சாப்பிட ஒருவர் மட்டும் ப்ளூடூத் ஹெட்செட்டோடு விரலால் கறி சாப்பிட்டார். இந்த இளைஞரை நான் முதல் நாள் தொடங்கி பார்த்து வருகிறேன். அவர் தனக்கு எப்படி முடியுமோ அப்படி சாப்பிட்டு வருகிறார். 

எனக்கு அசைவம் ஒத்துக்கொள்ளாது என்பதால் ஜெயின் கவுன்டரில் உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். இறுதியாக, பாசிப்பயறு அல்வா சாப்பிட்டு உணவை முடித்துக்கொண்டேன். பிறகு ரீமா மேடமைப் பார்த்தேன். அவர் டெல்லியில் இஎம்பிஐ வணிக பள்ளியில் படித்துவிட்டு வந்தவர். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் வராது. எனவே, தமிழ் தெரிந்த இன்னொருவரை அழைத்து என்ன சொல்கிறான் என கேட்டார். நான் போட்டோ அனுப்ப சொன்னேன். அப்புறம் என்ன அவரின் கீழ் பணியாற்றும் ஐஸ்வர்யா அப்போதுதான் சோற்றில் கைவைத்து வாயில் உணவை அரைத்துக்கொண்டிருந்தார். அவரை அழைத்ததும் உடனே என்னைப் பரிதாபமாக பார்த்தார். ரீமா அதற்கெல்லாம் பயப்படவில்லை. சீக்கிரம் இவன் கேட்கிற போட்டோவை அனுப்பிவை என பஞ்சாயத்தை முடித்துவைத்தார். பிறகு அன்று மாலையே ஐஸ்வர்யா கணேஷ் புகைப்படத்தை கொடுத்தார். நான் இரவு ஏழு மணி வரை உட்கார்ந்து கட்டுரை எழுதி ஆசிரியருக்கு அனுப்பி வைத்தேன். அக்கட்டுரை தினசரி நாளிதழுக்கான திருத்தங்களோடு அடுத்தநாள் வெளியானது. அதனை முறைப்படி ஐஸ்வர்யா மேடமுக்கும், சாய்ராம் சாருக்கும் அனுப்பிவைத்தேன். 

ஐஸ்வர்யா கணேஷ்

 











புகைப்படங்கள் மேலிருந்து கீழாக..

பேரா.எல். கண்ணன்

தொழில்முனைவோர் ரஞ்சித் முகுந்தன்

பேரா. ஷரித் தாஸ்

ஹிதேந்திர சோனி ஐஏஎஸ்

ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், அக்னிகுல்

தொழில்முனைவோர் எஸ்ஜி அனில்குமார்

பேரா.ஆர். கிருஷ்ணகுமார்

புகைப்பட உதவி

ஐஸ்வர்யா கணேஷ்

கன்டென்ட் பிஆர் எக்சிகியூட்டிவ் - ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்

ரீமா சகா, மார்க்கெட்டிங் ஹெட்

ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்

சாய்ராம் ராதாகிருஷ்ணன்

ஐஐடி மெட்ராஸ் 


கருத்துகள்