விவசாய கருவிகளை வடிவமைக்கும் விவசாயி!

 









விவசாய கருவிகளால் புகழ்பெற்ற விவசாயி!

கர்நாடகத்தின் தார்வாடிலுள்ள அன்னிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர் நாடாகட்டின். இவர், விவசாயிகளுக்கு பயன்படும் 24 விவசாய கருவிகளைக் கண்டுபிடித்துள்ளர். கிராமத்தில் சக விவசாயிகள் இக்கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.   

அப்துல்,  சிறுவயதிலிருந்தே புதுமையாக யோசித்து வருபவர். பள்ளி செல்லும்போது, அதிகாலையில் நேரமே எழ முடியாமல் தவித்தார். இதற்காக,  அலாரம் கடிகாரத்துடன் நீர் பாட்டிலை இணைத்து கருவியை உருவாக்கினார்.  அலாரம் ஒலிக்கும்போது, அதனை உடனே எழுந்து நிறுத்தாதபோது நீர்பாட்டிலிலுள்ள நீர் முகத்தில் கொட்டும். இப்படி ஒரு கருவியை அப்துல் கண்டுபிடித்தபோது அவரின் வயது 14 தான். 

இந்த நுட்பமான முறையில்தான் அதிகாலை எழுந்து படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றார்.  அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் விவசாய பட்டப்படிப்பு படிக்கும் கனவை கைவிட்டார். 1974ஆம் ஆண்டு முதல் குடும்பத்திற்கு சொந்தமான  60 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். படிப்பைக் கைவிட்டாலும் கருவிகளை ஊக்கத்துடன் உருவாக்கி வந்தார்.  

வேளாண்மை பணியோடு, அருகிலிருந்த சக விவசாயிகளிடம் பேசினார். பணிகளுக்கு  என்ன கருவிகள் தேவை என்பதை அறிந்தார். பிறகுதான், ஒரே நேரத்தில் விதை மற்றும் உரத்தை நிலத்திற்கு வழங்கும்படியான கருவி, கரும்பு விதைப்பு கருவி ஆகியவற்றை தானே உருவாக்கினார்.   மகாராஷ்டிரத்தில் கரும்பு விதைப்புக்கு தேவையிருந்ததால், இக்கருவியை உருவாக்கி விற்றார். விவசாயிகளின்  பாராட்டுகளால் அப்துலின் கருவிகள் மெல்ல புகழ்பெற்றன. 

1985ஆம் ஆண்டு இவரது நிலப்பகுதியில் கடுமையான நீர்த்தட்டுப்பாடு இருந்தது. எனவே, தனது நிலத்தில் ஆறு குளங்களை வெட்டினார். இதில் மழைநீர் பெய்ய கிடைத்த நீரைக் கொண்டு, நிலத்திலுள்ள பயிர்கள், 600 புளிய மரக்கன்றுகளையும் பராமரித்தார். இப்படி வளர்ந்த புளியமரங்கள் ஏராளமாக காய்த்தது. அதில், காய்ந்த புளியைக் கொண்டு அப்துலின்  குடும்பத்தினர் ஊறுகாயை தயாரித்து விற்றனர். புளியிலிருந்து விதைகளை எடுப்பது கடினமாக இருந்தது. சில ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து   புளியிலிருந்து விதைகளை நீக்கும் கருவியைத் தயாரித்து சாதித்தார் அப்துல். 

விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் தேசிய இன்னோவேஷன் பௌண்டேஷன்  அமைப்பின் நிதியுதவி, அப்துலுக்கு கிடைத்துள்ளது. மாநில அரசும் பல்வேறு நிதி உதவிகளை விவசாய கருவிகளின் ஆராய்ச்சிக்கு அளித்து வருகிறது. ”நான் விவசாயிகளின் கஷ்டங்களை எனது கண்டுபிடிப்புகள் மூலம் தீர்க்க விரும்புகிறேன். அடுத்த விவசாய புரட்சி இந்த முறையில்தான் நடைபெறும்” என்றார் அப்துல். விஷ்வசாந்தி விவசாய, தொழில்துறை ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறார். 2022ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பெருமைக்குரிய பத்ம ஸ்ரீ விருதையும் வென்றுள்ளார் அப்துல்.

தகவல்

The better india 

Barefoot scientist whose unique farm innovations won him the padma shri (Yosita rao)

https://www.thebetterindia.com/275198/barefoot-scientist-farmer-innovations-help-farmers-increase-yield-wins-padma-shri/

கருத்துகள்