தலைக்கு மேலே கூரை இல்லை! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

 










அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். 

நலமா? 

உங்களின் நிலைமை அறியாமல் தங்குவதற்கு இடம் கேட்டு சங்கடப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் மனதில் உள்ளதை உடனே சொல்லிவிட்டேன். இனிமேல் நான் திருவண்ணாமலை வந்தால் விடுதியில் தங்கிக்கொள்கிறேன். தங்களைப் பார்க்கும் வாய்ப்பு திகைந்தால் பார்க்கிறேன். இதனை தங்களது பணிச்சூழலைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம். சென்னையில் இப்போதைக்கு நிறைய வேலைகள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் தங்க முடியாது. குறைந்த விலை கொண்ட பட்ஜெட் விடுதியை நீங்கள் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு திருவண்ணாமலை மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான இடம். ஆனால் உங்களுக்கு அதுதான் வாழிடமே. இரண்டிற்குமான வேறுபாட்டை உணரவில்லை. இனிமேல் தவறு நேராது. 

கடிதம் எழுதுவது பற்றி இணையதளம் ஏதாவது இருக்கிறதா என தேடினேன். chitthi exchange,Mumbai chapter என பல்வேறு கடிதம் எழுதும் வலைத்தளங்கள் இருப்பதை இந்து நாளிதழில் எழுதியிருந்தனர். இது ஆச்சரியமான செய்தி. 

மயிலை காபி என்ற கடையில் டீ  குடித்தேன். குங்குமத்தில் வேலை செய்யும் நண்பர் சக்தி அங்கு கூட்டிப்போனார். ஒரு டீ 25க்கு விற்கிறார்கள். காபிடேவின் கேப்ஷனைக் காப்பியடித்து மயிலைக் காபிக்கு கீழே போட்டிருந்தார்கள். சிறப்பான தொடக்கம்தான் இல்லையா?

அன்பரசு 

7.1.2022


--------------------------------------------------------







அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். 

நலமா? சென்னையில் மீண்டும் லாக்டௌன் தொடங்கிவிட்டது. விடுமுறை தினமான ஞாயிறு இந்தளவு அமைதியாக இருந்ததே இல்லை. இன்று தீனி என்ற படத்தை போனில் பார்த்தேன். நின்னிலா நின்னிலா என்ற தெலுங்குப்படத்தின் தமிழ் டப் இது.  குண்டான சமையல்கலைஞர் தேவ். இவர் லண்டனில் உள்ள அமரா என்ற உணவகத்திற்கு வேலைக்கு போகிறார். அங்கு தனது அபாரமான சமையல் திறனால் பாராட்டு பெறுவதோடு ஹோட்டலையும் வேறு நிலைக்கு கொண்டு செல்கிறார். 

இத்தோடு தேவ்வின் கடந்தகால கதையையும் சொல்கிறார்கள். சமையல் படம் என்பதால் பார்த்தேன். அசோக் செல்வன், நித்யாமேனன் இரண்டுமே பேருமே அசத்தலாக நடித்துள்ளனர். துப்பறியும் சாம்பு -2 நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு பக்கங்களைத் தாண்டிவிட்டேன். வங்கியில் கிளர்க்காக வேலை பார்க்கும் சாம்பு ஐயர் எப்படி துப்பறிவாளராக மாறுகிறார் என்பதே மையக்கதை. 

கடந்த சனி , ஆபீஸ் போனேன். அங்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த நூல்களை அலுவலக செக்யூரிட்டி அண்ணன் எடுத்து வைத்திருந்தார். அதனை எடுத்துக்கொண்டு வந்தேன். வினோத் மேத்தா பற்றிய நூல் மட்டும் அமேஸானின் கையிருப்பில் இல்லை. சற்று தாமதமாக வரும். இவை எவற்றும் இலவச டெலிவரி கிடையாது. அனைத்துக்குமே காசு கொடுத்து வரவைத்தேன். 

பிரெஞ்சு கலைஞர் ஆலிவர் அண்ணாவை போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. செஞ்சி கோட்டையில் எடுத்த புகைப்படங்களை அவரிடமிருந்து பெற வேண்டும். அவர் பார்வைக்கு உற்சாகமாக இருந்தாலும் மனத்தளவில் சோர்வாகவே இருக்கிறார். பார்ப்போம். நன்றி

அன்பரசு

16.1.2022 

Pinterest

கருத்துகள்