12G பஸ்சில் சில ஆண்டுகளுக்குப் பிறகு இனிய பயணம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்
அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா?
ஜனவரி 3 இதழ் வருவதற்கான எழுத்துவேலைகள் தொடங்கிவிட்டன. கிறிஸ்மஸிற்கு கூட அலுவலகத்தில் விடுமுறை விடவில்லை. வேலை செய்யும் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை. 50 இதழ்கள் வெளிவர வாய்ப்புள்ளது. மேன்ஷனில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 10க்கும் மேல் போய்விட்டது. எனவே, சமையல் செய்வதை நிறுத்திவிட்டேன். கொஞ்சம் வயிற்றுக்கு பொருந்தி வரும் உணவகங்களில் சாப்பிட்டுவருகிறேன்.
தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்து வருகிறேன். மாஃபியா கும்பலால் பாதிக்கப்படும் பெண் ட்ரேஸி எப்படி திருடி ஆகிறாள், அவளது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா என்பதுதான் கதை. முழுக்க வெளிநாடுகளில் நடக்கிறது. 361 பக்கங்கள் படித்திருக்கிறேன். ரொமான்டிக் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். படத்தில் பெரிதாக எதிர்பார்த்து பார்க்க ஏதுமில்லை. காதல் காட்சிகளை மட்டும் கவனம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். வேறொன்றும் இல்லை. சிறிய பட்ஜெட் படம்.
நன்றி!
அன்பரசு
9.11.2021
---------------------------
அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமா?
திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் நாவலைப் படித்து முடித்துவிட்டேன். இறுதி அத்தியாயம் சார்லஸ் டிக்கன்ஸின் வரிகளோடு முடிந்தது. பிரன்ட்லைனில் ஜியா அஸ் சலாம் என்ற நிருபரின் கட்டுரையாளரின் நேர்காணல் படித்தேன். இவர் தான் பேட்டி காண்பவரிடம் சிறப்பாக பேசி கேள்வி கேட்டு பதில்களை வாங்கி அற்புதமாக எழுதுகிறார்.
டிச.17, 2021 இதழில் அரசியல் ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஜாப்ரலெட் என்பவரின் நேர்காணல் வந்துள்ளது. இப்போது அதைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். வணிக இதழ்கள் இதுபோன்ற நேர்காணல்களை வெளியிட பயப்படுவார்கள். கேள்விகள் நேரடியாக பளிச்சென இருக்கிறது. நூல் பற்றிய கேள்விகளோடு பொதுவான கேள்விகளையும் நிருபர் கேட்டிருக்கிறார். கேள்விகளின் தேர்வு சிறப்பாக உள்ளது.
இன்று நெசப்பாக்கம் சென்றேன். சாலை தோண்டிப் போடப்பட்டு விகாரமாக கிடக்கிறது. வெகுநாட்களுக்கு பிறகு 12 ஜி பஸ்சில் ஏறி, ஆழ்வார்ப்பேட்டை வந்து இறங்கினேன். பயணம் இனிமையாக இருந்தது. நான் சக்திவேல் சாரைப் பார்க்க போனேன். அவர், நெசப்பாக்கத்தில் கருப்பட்டிக்காப்பி வாங்கிக் கொடுத்து விடைகொடுத்தார். காலை உணவாக சாலி கிராமத்தில் உள்ள அன்ன விருட்ஷம் உணவகத்தில் சாப்பிட்டோம். அந்த உணவகத்தில் புதிதாக தொடங்கிய தடுமாற்றம் உள்ளது. அதை சரி செய்தால், உணவகம் சிறக்கும்.
நன்றி!
அன்பரசு
-----------------------
கருத்துகள்
கருத்துரையிடுக