சிகரெட் துண்டுகளால் ஏற்படும் மாசுபாடு! - அதிகரிக்கும் விழிப்புணர்வும், மறுசுழற்சியும்....
பெருநகரங்களைப் பார்த்தால் நிச்சயம் அலுவலகங்களுக்கு வெளியில் டீக்கடைகள் இருக்கும். அவற்றில் டீயோடு சிகரெட்டைப் பிடித்தபடி உலகை முன்னேற்றும் சிந்தனையுடன் பலர் நின்றிருப்பார்கள். சில கடைகளில் குப்பைத்தொட்டிகளை வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலானோர் சிகரெட்டை புகைத்து முடித்தவுடன் அதனை கீழே போட்டு காலால் ஒரு தேய்ப்பு கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதைக்கூட செய்ய வேண்டாம் என நினைக்கும் மென் மனத்தினரே மனிதர்களில் அதிகம்.
இப்போது தேய்த்து எறியப்பட்ட சிகரெட் துண்டுகளில் புகைபிடிக்கும் பகுதியைப் பார்த்திருப்பீர்கள். இதில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் எளிதில் மண்ணில் மட்காது. இதை நிறையப் பேர் அறியாமல் தரையில் வீசிவிட்டு மிடுக்காக பீம்லா நாயக்காக நடந்து வருகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் சிகரெட் கழிவுகளில் 7 ஆயிரம் வேதிப்பொருட்கள், நச்சுகள் இருப்பதாக கூறியிருக்கிறது.
சிகரெட் பட்களில் காகிதமும், ரேயானும் கலந்துள்ளது. இவை நீர்நிலையில் சேர்க்கப்படும்போது, உப்புநீர், நன்னீரில் உள்ள மீன்களை கொல்வதற்கு 50 சதவீத வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்காவில் உள்ள ட்ரூத் இனிஷியேட்டிவ் அமைப்பு கூறியுள்ளது. இதனை 96 மணிநேரத்தில் சாத்தியப்படுத்துவதுதான் முக்கியமானது.
2020ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாணையம் சிகரெட் பட்களைப் பற்றிய விதிமுறைகளை வகுத்து கொடுக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கேட்டது. ஆனால் வாரியம் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் அப்படியே கைவிட்டுவிட்டது.
நிரித் தத்தா என்ற சூழலியலாளர் இதுபற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறார். கடந்த ஆண்டு நிரித், சிகரெட் பட்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்வதற்கு அனுப்பும் பிரசார திட்டமான பட் ரஷ் என்பதை செய்தார். தகவல்தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய நிரித், ஒருகட்டத்தில் சிகரெட் பட் பற்றிய மாசுபாட்டிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.
சிகரெட் பட், செல்லுலோஸ் அசிட்டேட்டால் ஆனது. இதனை பலரும் அறிவதில்லை. பருத்தியால் ஆனது. எளிதாக மண்ணில் மட்கிவிடும் என நினைக்கிறார்கள். இதனால் இக்கழிவுகள் எளிதாக ஆறு, கடல் ஆகிய பரப்புகளில் சேர்ந்து அதனை மாசுபடுத்துகின்றன என்பது நிரித்தின் கருத்து.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் நிரித் சிகரெட் பட்களை பொறுக்கி நகரங்களை சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினார். பிறகு, இந்த திட்டம் பெங்களூரு, டெல்லி, மும்பை என விரிந்திருக்கிறது. இவரது திட்டத்தால் ஈர்க்கப்பட்ட நவி மும்பையைச் சேர்ந்த ரமியா ஆர் பிள்ளை, சிகரெட் பட்களை சுத்தப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக நிரித்தின் திட்டத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? சிகரெட்டை முழுமையாக எதிர்ப்பது போலத்தானே? ஆனால் அங்குதான் நிரித் மீனாக நழுவுகிறார். சிகரெட்டிற்கான லாபி பெரிது. நான் சிகரெட் துண்டுகளை எறிவது மாசுபாட்டை உருவாக்குகிறது. அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். இதுபற்றிய தகவல்களை சேகரித்து தகவல்தளம் உருவாக்கப் போகிறேன் என்கிறார். இதன் விளைவாக ஒன்றிய அரசு புதிய கொள்கை உருவாக்கும் என்கிறார்.
பட் பலோட் என்ற அமைப்பு, சிகரெட் பட்களை தனியாக சேகரித்து அதனை மறுசுழற்சி செய்துவருகிறது. அதிகளவு நச்சுப்பொருட்கள் கொண்ட இவற்றை எப்படி மறுசுழற்சி செய்து என்ன பொருட்களை உருவாக்க முடியும். தலையணை மற்றும் பிளாஸ்டிக் ஆஸ்ட்ரே செய்கிறார்கள். ஆஸ்ட்ரே உருவாக்கினால்தான் அதில், சாம்பல் காற்றில் பரவாமல் சிகரெட்டை குடிப்பவர்கள் குடிக்க முடியும். நாமும் காற்று மாசுபாடு பிரச்னை இல்லாமல் சுதந்திரமாக இருக்கமுடியும்.
புதிய இந்தியாவில் உருவாகும் செயல்பாட்டாளர்கள், யாரையும் எதையும் நிறுத்த சொல்லுவதில்லை. நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலைகளை செயல்பாடுகளை செய்யுங்கள். நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலையை செய்கிறோம் என செயல்படுகிறார்கள். நீங்கள் செய்யும் விஷயங்களால்தான் எங்களுக்கு அடையாளமே கிடைக்கிறது என பரஸ்பர புரிதல் உருவாகிவிட்டது.
இந்து ஆங்கிலம் Mar 13,2022
சிந்து நாகராஜ்(Sindu Nagarai The Hindu)
கருத்துகள்
கருத்துரையிடுக