நிலநடுக்க பொது எச்சரிக்கை அமைப்பின் முன்னேற்றம்!
நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்!
ஒரு நாட்டின் பரப்பில் நடைபெறும் தட்பவெப்பநிலை மாற்றங்களை அரசு அமைப்புகள் துல்லியமாக கண்காணிக்கின்றன. அமெரிக்காவின் நாசா அமைப்பு, பல்வேறு செயற்கைக்கோள்கள் மூலம் மாகாணங்களில் ஏற்படும் நிலப்பரப்பு ரீதியான மாற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்கிறது. இதனோடு தேசிய கடல் மற்றும் சூழல் அமைப்பும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும்(USGS) இணைந்து பணியாற்றுகின்றன. தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன.
கூடுதலாக, அமெரிக்க அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. இதனால், அடிப்படை அறிவியல் கேள்விகளுக்கும், கடினமான சவால்களை பற்றிய ஆய்வுகளை செய்யமுடிகிறது. தற்போது நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் நுட்பங்கள் (Earthquake Early Warning EEW)வேகமாக முன்னேறி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசும், தனியாரும் இணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுதான். இதன்மூலம் நிலநடுக்கத்தால் பலியாகும் ஏராளமான மக்களைக் காப்பாற்ற முடியும்.
நிலநடுக்கம் ஏற்படும் நிலநடுக்கவெளி மையத்தில் (Epicenter) நிலநடுக்க சென்சார்களை பொருத்துகின்றனர். இதன் மூலம் மெல்லிய நிலநடுக்கம் முதல் கடுமையான நிலநடுக்கம் வரை அறியலாம். மெல்லியது என்றால் சில நொடிகள் எச்சரிக்கையும், கடுமையான நிலநடுக்கம் எனில், சில நிமிடங்களுக்கு எச்சரிக்கையும் வரும். 1906ஆம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடங்கி, 1960இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பு வரை தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தை அறிவிக்கும் பொது எச்சரிக்கை அமைப்பு, 1991ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் உருவாக்கப்பட்டது. சீஸ்மோமீட்டர்களை மெக்ஸிகோ நாடு, தனது நகரில் பயன்படுத்தியது. பிறகு அல்காரிதம் உருவாக்கப்பட, நிலநடுக்கத்தின் தகவல்கள் தொகுக்கப்பட்டன. இதனால் எங்கு, எப்போது நிலநடுக்கம் உருவாக வாய்ப்புள்ளது என்பதை ஆய்வாளர்கள் முன்கூட்டியே கணித்தனர். இத்தகவல்களை சில நொடிகளில் இப்போது பெற முடியும் என்பது தொழில்நுட்ப சாதனை தான்.
மெக்ஸிகோவில் நிலநடுக்க பொது எச்சரிக்கை முறை நிறுவப்பட்டபிறகு, 16 ஆண்டுகள் கழித்து தான், அதில் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்க எச்சரிக்கைத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு தான் தைவான், தென்கொரியாவில் நிலநடுக்க முன்னெச்சரிக்கை அமைப்பு மேலும் மேம்பட்டது.
2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஷேக்அலர்ட் என்ற அரசு நிறுவனம், நிலநடுக்கம் பற்றிய எச்சரிக்கையை எளிதாக ஸ்மார்ட்போன் வழியே அறியும்படி மாற்றியிருக்கிறது. கலிஃபோர்னியா மாகாண நிர்வாகம், ஷேக்அலர்ட் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறது. இதிலேயே நிலநடுக்க எச்சரிக்கைகள், தகவல்களைப் பெற முடிகிறது. எச்சரிக்கை வழங்கும் அல்காரிதம்கள் , உலகளவில் புவியியல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
2020ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியது. அரசு மற்றும் தனியார் அமைப்பு முயற்சியாக இத்திட்டம் உருவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன், கலிஃபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்க எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.
2021ஆம் ஆண்டு நியூசிலாந்து, கிரீஸ், துருக்கி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர், நிலநடுக்க எச்சரிக்கையை உலகில் எப்பகுதியில் இருந்தாலும் பெறமுடியும். மேலும் இதற்கேற்ப போக்குவரத்து, சாலை ஆகிய கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும்போது, நிலநடுக்க சேதங்களை வெகுவாக தவிர்க்கலாம்.
தகவல்
science.org
கருத்துகள்
கருத்துரையிடுக