பரிணாம வளர்ச்சியில் தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு!

 








தொன்மை தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு!

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒயிட்ஃபிளை என்ற பூச்சி  மரபணு ஒன்றைப் பெற்றது. இதனை  தொன்மையான தாவரம் ஒன்றிலிருந்து பெற்றதாக தாவரவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால் இத்தாவரம் எதுவென இன்னும் கண்டறியப்படவில்லை. BtPMat1  என்ற மரபணுதான் ஒயிட் ஃபிளை பூச்சிக்கு மாறிய மரபணு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது தாவர நச்சு வகையைச் சேர்ந்தது. ஆனாலும் பூச்சியை பாதிப்பதில்லை. 

BtPMat1 என்ற மரபணு, தாவரத்திலிருந்து பூச்சி இனத்திற்கு மாறியுள்ளதை சீனா மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றிய செய்தி செல் இதழில் வெளியாகியுள்ளது. ஹரிஸோனல் ஜீன் டிரான்ஸ்பர் (HGT)முறையில் மரபணு மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த முறையில் நடைபெறும் மரபணுமாற்றம் பாக்டீரியா இனங்களிலிருந்து தாவரம் மற்றும் விலங்குகளுக்கு நடப்பது இயல்பானதுதான்.   நச்சு கொண்ட தாவரங்கள், தங்களிடமுள்ள உணவைக் காக்க நச்சை சுரக்கிறது. இச்சமயத்தில் ஒயிட்ஃபிளை பூச்சியை நச்சு பாதிக்காமல் காப்பாற்றுவது  தாவர மரபணுதான். 

இப்பூச்சியிடமிருந்த தாவர மரபணுவை நீக்கி சோதித்தபோது, உணவிலுள்ள நச்சு காரணமாக பூச்சி இறந்துவிட்டது. இதைக் கண்டுபிடித்தவுடன் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் இந்த மரபணுவைக் குறிவைத்து தங்களது பொருட்களை தயாரிக்க தொடங்கிவிட்டன. “தாவர மரபணு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூச்சிகளிடம் வந்திருக்கவேண்டும். இது வைரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. நாம் நினைக்கும் காலத்திற்கு  முன்னரே தாவரங்களிடமிருந்து பூச்சிக்கு மரபணுமாற்றம் நடந்திருக்கிறது” என்றார் ஸ்விட்சர்லாந்தின் நியூசாடெல் பல்கலைக்கழகத்தின் வேதியியல் சூழலியலாளரான  டெட் டர்லிங்க்ஸ். 

தற்போது டர்லிங்க்ஸ் குழு, பூச்சிகளிடம் மற்றொரு தாவர மரபணுவும் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம் தாவரங்களிடமிருந்து பூச்சிகளுக்கு மரபணுக்கள் மாறுவது ஆச்சரியமான செய்தி அல்ல என்று புரிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் இதுபற்றி நடைபெறும் ஆராய்ச்சிகள் மூலம் இதன் பயன்கள் பற்றி தெரியவரும். 

தகவல்

discover jan feb 2022 magazine


   


கருத்துகள்