வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

 






pinterest








முருகானந்தம்

அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம். 

நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும். 

இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள். 

அன்பரசு

22.8.2021

----------------------




pinterest


அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? அக்.2 முதல் பட்டம் இதழ் தினசரி வரும், தொடங்கும் என ஆசிரியர் கூறினார். அதுவரை பாடம் சார்ந்து எழுத வேண்டியுள்ளது. நகுலன் சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவரது கதைகளில் சொல்லுவதை விட சொல்லாத விஷயங்களை உணர்ந்து யோசிக்கும்படி இருக்கிறது. இதுதான் இவரின் சிறப்போ என நினைக்கிறேன். 

பிரெட்டி அக்லி என்ற கொரிய தொடரைப் பார்த்து வருகிறேன். இதில், அக்கா தீவிர சுயநலமானவள். தனது வளர்ச்சிக்காக பிறரது வாய்ப்புகளைக் கூட பறித்துக்கொள்ளத் தயங்காதவள். இவளது தங்கை, பிறரைக் காயப்படுத்தாமல் நடந்துகொள்பவள். தலையில் வழுக்கை விழுந்ததற்காக கவலைப்பட்டு விக் வைத்துக்கொண்டு வேலை செய்து வருகிறாள். இந்த இருவரின் முரண்பாடான வாழ்க்கைதான் கதை. கொரிய மக்களின் கதை, வாழ்க்கை, சோஜூ, நூடுல்ஸ், கிம்சி ஆகியவை எப்போதும் இருக்கும். மனிதர்களின் உணர்ச்சி என்று பார்த்தால் நம்முடைய மக்களைப் போன்றதுதான் அவர்களுடைய வாழ்க்கையும். பெரிய மாறுபாடு இல்லை. நன்றாக எடுத்திருக்கிறார்கள். 



pretty ugly korean drama


விகடனில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாறு பற்றி எழுத்தாளர் வெண்ணிலா தொடர் ஒன்றைத் எழுதுகிறார். முக்கியமான தொடராக மாறும் என நினைக்கிறேன். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். 

நன்றி!

அன்பரசு

3.9.2021

-------------------

அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் பணிபுரிகின்ற மாணவர் பத்திரிகை விரைவில் தாய் பத்திரிகை போல மாற அதிக காலம் ஆகாது என நினைக்கிறேன். இப்போதே வரலாறு பற்றிய நூல்களில் நிறைய மாற்றங்களை செய்து இந்துத்துவ ஆட்களுக்கு ஏற்றபடி மாற்றி வருகிறார்கள். அதாவது எழுதுபவர் என்ன எழுதினாலும், உதவி ஆசிரியர் அதனை உள்வாங்கி இந்துத்துவ தன்மையில் மாற்றவேண்டும் என்பதுதான் திட்டம். இந்தி திணிப்பு அல்ல, இந்தி அறிமுகம் என்று எழுதவேண்டுமாம். அரசு அறிமுகப்படுத்திய சட்டத்தை சிலர் எதிர்த்தனர் என மாற்றி எழுத வேண்டும். நல்ல திட்டம் அல்லவா?



pinterest


எழுத்து வழியாக மத சிறுபான்மையினர் மீது வெறுப்பு வளர்க்கும் விதமாக செய்கிறோமோ என்று கூட தோன்றுகிறது. உலகளவில் இந்துகள் பற்றிய ஆன்லைன் மாநாடு நடந்தது பற்றி பிரன்ட்லைனில் கட்டுரை ஒன்றைப் படித்தேன். கட்டுரை நிறைய தகவல்களோடு எப்படி மாநாட்டில் பங்களித்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்பதையும் பதிவுசெய்திருந்தது. 

இந்தியா 75 என்ற பெயரில் டைம்ஸ் ஆப் இந்தியா ஞாயிறுதோறும் கட்டுரைகளை வெளியிட்டது. முக்கியமான சம்பவங்களை கட்டுரையாக்கி வருகின்றனர். நேரம் கிடைக்கும்போது இதனை மொழிபெயர்க்க வேண்டும். சில கட்டுரைகளை மொழிபெயர்த்து பிளாக்கில் எழுதி வருகிறேன். நேரமும் உழைப்பும் கூடி வந்தால் இதனை மின்னூலாக்கி வெளியிடலாம். 

அன்பரசு

12.10.2021


 


கருத்துகள்