அறையில் மலராக பூக்கும் பூஞ்சை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

 











அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வரும் வாரத்தில் நாளிதழ் வேலைகள் தொடங்கவுள்ளன. தீபாவளி  அன்று தாமதமாக எழுந்தேன். இப்போது நான் இருக்கும் மூன்றாவது மாடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் நான்கு பேர்கள்தான் இருந்தோம். இப்போது பக்கத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை குளியலறை, கழிவறையைப் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு 7 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று விடுகிறேன். 

அந்திமழை இதழைப் படித்தேன். பெண்களின் மனத்தைப் பற்றி சிறப்பிதழாக செய்திருந்தார்கள். எழுத்தாளர் கலாப்ரியா எழுதியிருந்த கட்டுரை நன்றாக இருந்தது. நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டால் வாழ்க்கை மிக பரபரப்பாக மாறிவிடும். இப்போதே ஓரளவு எழுதி வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தில் அருகர்களின் பாதை  நூலை வாங்க வேண்டும். தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் அலுவலகத்தில் உள்ள கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றோம். அங்கு சென்றபோது ஊழியர்கள் பலரும் தீபாவளிக்கு ஊருக்கு போய்விட்டனர் என கூறிவிட்டனர். 



சமணர்களின் கோவில்களுக்கு செய்யும் பயணம்தான் நூலின் மையம். திருவண்ணாமலையில் இந்த நூலை புகைப்படக்காரர் வினோத் அண்ணாவின் வீட்டில் படித்தேன். அங்கேயே 60 பக்கங்களை படித்துவிட்டேன். சமண தலங்களைப் பற்றிய நூலை முன்னமே படித்திருப்பீர்கள். ஜானகிராமம் என்ற நூலை இப்போதுதான் இணையத்தில் இருந்து தரவிறக்கினேன். இனிதான் அதனைப் படிக்க வேண்டும். 

அன்பரசு

4.11.2021

---------------------------

அன்பு நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டிலும் அனைவரும் நலமாக இருக்க வேண்டுகிறேன். இன்றுதான் காலையில் அருகர்களின் பாதை - ஜெயமோகன் நூலை படித்து முடித்தேன். பயணக்கட்டுரை நூல். சமணர்களின் கோவில்களுக்கு ஒரு மாதப்பயணமாக சென்றுவரும் ஜெயமோகன் குழுவினரின் அனுபவங்கள் தான். இதனை அவ்வப்போது தனது வலைத்தளத்தில் எழுதி வந்திருக்கிறார். இப்போது அவற்றை தொகுத்து தனி நூலாக தொகுத்திருக்கிறார்கள். 




நான் தங்கியுள்ள அறை முழுக்க மழை நீரால் நனைந்துவிட்டது. தலைக்கு மேலே நீர் கசிந்து சுவர் முழுக்க பரவுகிறது. இதனால் மின் விசிறியை இயக்கினால் அறையில் துருவக்குளிர் பரவுகிறது. சுவர்களின் போதாக்குறைக்கு பூஞ்சை பூத்து வருகிறது. என்ன கட்டுமானமோ தெரியவில்லை. 

இயற்கை பற்றிய பக்கத்தை இந்த ஆண்டு எனக்கு கொடுத்திருக்கிறார்கள். எனவே, அதுதொடர்பான நூல்களை இனிமேல்தான் வாங்கி படிக்கவேண்டும். சில நூல்களை இணையத்தில் தரவிறக்கித்தான் படிக்க வேண்டும். 

வேடிக்கையான முறையில் விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சீப் டிசைனர் கூறினார். அல்லாதபோது வேலை காலி...

நன்றி!

அன்பரசு

13.11.2021

--------------------------

Pinterest


கருத்துகள்