நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறுதீவுகளின் சூழல் முயற்சிகள்!

 










சூழலைப் பாதுகாக்கும் சிறு தீவுகள்! 


அயர்லாந்தின் வடக்குப் புறத்தில் நிறைய தீவுகள் அமைந்துள்ளன. இதில் எல் வடிவில் அமைந்துள்ள தீவு, ரத்லின் (Rathlin). இங்கு மின்சார வசதி கிடைத்ததே, தொண்ணூறுகளில்தான். மூன்று  காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்று மூலம் ஆற்றல் சேகரிக்கப்பட்டது.  ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதனை பராமரிப்பதற்கான வசதிகளும் பழுதடைந்த பாகங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக, 2007ஆம் ஆண்டு ரத்லின் தீவு,  அயர்லாந்து நாட்டின் மின் அமைப்புடன் இணைக்கப்பட்டது.

2030ஆம் ஆண்டிற்குள் ரத்லின் தீவு, கார்பன் இல்லாத தீவாக மாறும் செயல்பாடுகளை செய்து வருகிறது. பிறரைச் சாராமல் தனக்கான செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டு செயல்படுவதுதான் ரத்லின் தீவின் முக்கியமான சாதனை. டென்மார்க்கின் சம்சோ (Samso), கிரீசின் டிலோஸ் (Tilos), தென்கொரியாவின் ஜேஜூ (Jeju) ஆகிய சிறு தீவுகள் அனைத்துமே தூய ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன. 

தீவுகள் சிறியவை. இதிலுள்ள மக்களும் குறைவு. இவர்கள் தங்களின் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதால் என்ன ஆகப்போகிறது என விமர்சனங்களும் உருவாகியுள்ளன.  இத்தீவுகளை பராமரிக்கும் நாடுகள், சூழலுக்கு உகந்த தன்மையில் மாறுவது முக்கியம். ஏனெனில் பரந்த நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சார்ந்த செயல்பாடு, வணிகம் ஆகியவற்றால் கார்பன் வெளியீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, வெப்பமயமாதல் பாதிப்புகளை (வெப்பம் அதிகரிப்பு, கடல்நீர்மட்டம் உயர்வு, அதீத மழைப்பொழிவு, புயல்) ஏற்படுகிறது. 

ரத்லின் தீவில், நேரடியாகவே தூய ஆற்றலுக்கான செயல்பாட்டில் இறங்கிவருகின்றனர். 300 கிலோவாட் ஆற்றல் கொண்ட காற்றாலைகளை நிறுவி வருகின்றனர். இதன்மூலம் தீவிலுள்ள 100 வீடுகளுக்கு எளிதாக மின்சாரம் அளிக்க முடியும். மேலும் குறைந்த கார்பன் வெளியீடு கொண்ட வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றனர். தங்கள் தேவைக்கு ஹைட்ரஜனையும் நீரிலிருந்து தயாரிக்கிறார்கள். உபரியாகும் ஹைட்ரஜனை பிற அமைப்புகளுக்கு விற்கின்றனர். கப்பல் பயன்பாட்டிற்கும் எரிபொருளாக ஹைட்ரஜனையே பயன்படுத்துகிறார்கள். 

டென்மார்க் நாட்டின் சம்சோ தீவில், 4 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அரசிடம் கடன் பெற்று 11  காற்றாலைகளை அமைத்துள்ளனர். இதில் வீட்டிற்கு மின்சாரம் கிடைக்கிறது. உபரியை விற்றுக் கிடைக்கும் பணத்தை வைத்து, அரசு கடனை அடைத்து வருகிறார்கள். கிரேக்கத்தில் உள்ள டிலோஸ் தீவில் காற்று மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள். சிறப்பான  மறுசுழற்சி நடவடிக்கையால், பூஜ்ய கழிவு என்ற தகுதியை தீவு அடைந்துள்ளது. 

சிறிய தீவுதான். மக்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் தலைமைத்துவம் தீவுகளின் தனித்துவமாக உள்ளது.  அந்த வகையில் இத்தீவு மக்களின் ஊக்கம், சூழலைக் காப்பாற்ற பிறரையும் இதே வழியில் செல்ல வழிகாட்டும் என நம்பலாம். 

தகவல்

BBC

https://www.bbc.com/future/article/20220131-the-worlds-tiny-islands-inspiring-green-action


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்