ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா

 








ஹே சினாமிகா

இயக்கம்

பிருந்தா

இசை 

கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு 

ப்ரீத்தா

கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம் 

மதன் கார்க்கி





நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை..


மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள். 

மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை உள்ளது. 

ஆனால் மௌனாவுக்கு அவன் பேசுவது பிடிக்கவில்லை. இதனாலேயே அவனை எப்படியாவது குற்றம் சொல்லி பிரிய நினைக்கிறாள். இதற்காக என்ன செய்வது என நினைக்கும்போதுதான் பாண்டிச்சேரி செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. சரி, யாழனிடமிருந்து விடுதலை கிடைக்கிறது என பாட்டு கூட போடுகிறார்கள். கெட்ட ஆட்டம் போடுகிறார் மௌனா. ஆனால் யாழன் மனைவி தனியாக சமையல் கூட செய்யத் தெரியாமல் இருப்பாளே என பிரியம் அதிகமாகி, பாண்டிக்கு போட்ட பேண்ட் சட்டையுடன் வந்துவிடுகிறான். இவனை எப்படி கழற்றி விடுவது என விரக்தியாகும் மௌனா, உளவியல் வல்லுநரான மலர்விழியின் உதவியை நாடுகிறாள். நீயே அவனை காதலி அதை வைத்து உங்களுக்கு உறவிருக்கிறது என வழக்கு தொடுத்து நான் விவாகரத்து பெற்றுவிடுகிறேன் என்கிறாள். 

மலர்விழி ஆண்களை கடுமையாக வெறுப்பவள். அதற்கான காரணங்கள் படத்தின் முக்கியமான இடத்தில் வருகிறது. ஆனால் யாழனுடன் பழகும்போது அவள் அனுபவிக்கும் உணர்வு வேறு மாதிரியாக தோன்றுகிறது. அவனுக்காகவே அவள் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தது போலத் தோன்றுகிறது. யாழன் அவளை அவனைப் போன்ற ரசனையுள்ள பெண்ணாகவே பார்க்கிறான். ஆனால் மலர்விழி மெல்ல அவனுடைய உலகில் பெய்யும் மழையாகிறாள். கணவரைப் பிரிய திட்டமிட்டாலும் இருவரையும் சேர்த்து பார்க்க பார்க்க நெருடலாகிறது மௌனாவுக்கு. 

இந்த நேரத்தில் யாழனுக்காகவே இசை வானொலியில் வேலை கூட தேடித்தருகிறாள் மௌனா. அதில் பேசிப் பேசியே யாழன் புகழ்பெறுகிறான். இதனால் சென்னைக்கு மீண்டும் செல்லும் சூழ்நிலை. இதை மௌனா எப்படி பார்த்தாள் என்பதுதான் முக்கியமான காட்சி!

பேசுவதுதான் பிரச்னை என்ற வாதம் படத்தில் எடுபடவில்லை. இதைத்தாண்டி யாழன் மனைவி மீது வைத்துள்ள அன்பை பற்றி யாருமே பேசுவதில்லை என்பது குறை. 

எல்லாவற்றையும் நன்றாக யோசித்து பேசும், செயல்படும் யாழன், தன் சுதந்திரம் தேடும் மனைவியை பிரிவதா இல்லையா என்பதை வானொலியில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது, சரியான வழி அல்ல. 

அவர் ரேடியோவில் நடத்தும் களம் நிகழ்ச்சியும் கதைக்கு பெரியளவு உதவவில்லை. காஜலை இறுதியில் சந்திப்பதற்காகவே அதனை செய்கிறார் போல.






துல்கர் சல்மான், பல்வேறு வித தலைமுடி அலங்காரத்தில் வருகிறார். அதிதி ராவ், காஜல் என இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  காதல் படத்தில் அத்தனை காட்சிகளும் பளிச்சிடும் வின் பார் பாத்திரங்கள் கணக்காக ஜொலிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா.

கோவிந்த் வசந்தா, உடனே பாடல் ஹிட் ஆகவேண்டுமென இசை அமைக்கவில்லை. நிதானமாக கேட்டால் பாடல்களை மீண்டும் கேட்கலாம். தோழி பாடல் சிறப்பாக எழுதி, பிரதீப்குமாரால் பாடப்பட்டிருக்கிறது. படத்தை நினைக்கும்போது நினைவுக்கு வரும் பாடல் இதுதான். 

மென்மையான காதல் படத்தை எதிர்பார்த்தால், பிருந்தா அதில் குறைவைக்கவில்லை. ஆனால், படத்தில் பாத்திரங்களின் இயல்பும், தன்மையும் செயற்கையாகிவிட்டன.



மெக்ஸிகோ வெர்ஷன் ---


https://www.youtube.com/watch?v=HLgi9QlBE0c


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்