பூதம் நீட்டிய நாக்கின் பெயர் - ட்ரோல்டுங்கா
பூதத்தின் நாக்கு!
நார்வே நாட்டில், 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப்பகுதி இது. இதனை அடையாளப்படுத்துவது அந்தரத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் பாறைத்துண்டு ஒன்று. ட்ரோல்டுங்கா (Trolltunga) என்பதற்கு, ஸ்வீடிஷ் மக்களின் மொழியில் பூதத்தின் நாக்கு என்று பொருள். நார்வே நாட்டின் தெற்குப்பகுதியில் ஏரியும் மலைப்பகுதியும் அமைந்துள்ளது. மேகமூட்டமான, ஈரப்பதமான குளிர்ந்த தட்பவெப்பநிலையே இங்கு காணப்படுகிறது.
பாறை அல்லது மலைத்திட்டில் நின்று கீழே பார்த்தால் அழகான காட்சிகள் தெரியும். ஆனால் அதற்கு நிறைய துணிச்சல் தேவை. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இடம் ட்ரோல்டுங்கா என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். தொன்மைக் காலத்தில், நார்வேயில் பனிப்பாறை நகர்ந்து வந்தது. அதிலிருந்து உருகிய நீர் பாறைகளின் பரப்பில் உறைந்தது. பின்னாளில், இவை ஏற்படுத்திய மாற்றங்களால் பாறைகள் உடைந்து ட்ரோல்டுங்கா மலைப்பகுதி உருவானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள புற்கள், தாவரங்களை ரெய்ன்டீர் (Reindeer)எனும் கலைமான் இனத்தைச் சேர்ந்த விலங்கினம் உண்கிறது. ட்ரோல்டுங்கா பகுதியைப் பற்றிய நிறைய புனைவுக் கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, இருட்டில் மட்டும் வெளியே வரும் பூதம். பகலில் சூரிய வெளிச்சத்தில் வெளியே வர, அப்படியே கல்லாகிவிட்டது என்று கதை கூறப்படுகிறது.
ட்ரோல்டுங்காவிற்கு மலையேற்றம் செய்ய உலக நாடுகளிலிருந்து ஏராளமான சாகசப் பயணிகள் வருகிறார்கள். 27 கி.மீ. தொலைவை முழுமையாக ஏறி முடிக்க தோராயமாக 12 மணி நேரம் தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ட்ரோல்டுங்கா மலைப்பகுதி, பனி நிறைந்து காணப்படும்.
ட்ரோல்டுங்கா மலைப்பகுதியை ஃபியோர்ட்ஸ் (Fjords) என புவியியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு நீளமான குறுகிய மலைப்பகுதிகளுக்கு நடுவில் நீர்ப்பரப்பு அமைந்துள்ளது. இப்படி யு வடிவிலான பள்ளத்தாக்கு அமைப்பை ஃபியோர்ட்ஸ் எனலாம். உலகில் இந்த முறையில் நார்வே, கனடா, சிலி, நியூசிலாந்து, க்ரீன்லாந்து ஆகிய நாடுகளில் மலைப்பகுதிகள் அமைந்துள்ளன.
நார்வேயின் தெற்குப்பகுதியில் ஜெராக்போல்டன் (Kjeragbolten) என்ற மலைப்பகுதி புகழ்பெற்றது. இங்கு இரண்டு மலைப்பகுதிகளுக்கு நடுவில் ஒரு பாறைத்துண்டு அமைந்துள்ளது. இதன், உயரம் 984 மீட்டர் உயரமாகும்.
தகவல்
Amazing earth book
கருத்துகள்
கருத்துரையிடுக