எதிர்கால இந்தியா 2047 - ஐஐடி மெட்ராஸ் - ரிசர்ச் பார்க் - கனவுகளும் சாத்தியங்களும்





பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்ரமணியன்

பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ்

தொழில்முனைவோர் புனீத் குப்தா

வர்னாலி தேகா, ஐஏஎஸ் 







 எதிர்கால இந்தியா 2047


சென்னை தரமணியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஆராய்ச்சி மன்றில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த மார்ச் 7 தொடங்கி 9ஆம் தேதிவரையிலான இமேஜினிங் (Imagining India 2047) இந்தியா 2047 என்ற கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஐ.ஐ.டி மெட்ராஸ் அமைப்பு ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், நேரம் தவறாமைதான்.

 நாங்கள் ஒன்பது மணிக்கு செல்லவேண்டிய நிகழ்ச்சி இது. ஆனால், நிகழ்ச்சி பற்றி தகவல் தெரிந்ததே பத்து மணிக்குத்தான். பிறகு, புரோகிராம் பார்த்து தகவல்களை கிரகித்து ஆசிரியரிடம் அனுமதி வாங்கி கிளம்ப பதினொரு மணி ஆகிவிட்டது. சக உதவி ஆசிரியர் காந்தி மகான் உதவிக்கு வந்தார். முதலில் ரயிலுக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால் காந்தி, பஸ்ஸிற்கு போகலாம் என்றார். ஏ1 பஸ்சில் ஏறி உட்கார்ந்தால் ஆமை போல மெல்ல ஊர்ந்தது. எனவே மயிலாப்பூர் குளத்தில் இறங்கினோம். உடனே ஓட்டமாக ஓடி, லோக்கல் ட்ரெயினில் ஏறினோம். ஏறும்போதே காந்தி, யுடிஎஸ் ஆப்பில் டிக்கெட்டை இருவருக்கும் எடுத்துவிட்டார். ரயில் மேடையில் நின்று பதினைந்து நிமிடம் கழித்துதான் ரயில் வந்தது. 

அந்த நேரத்தில் ஏற்பட்ட பதற்றத்தை என்னால் மறக்கவே முடியாது. பிறகு ரயில் ஏறி, திருவான்மியூர் சென்று இறங்கினோம். அங்கிருந்து ஆட்டோ பிடிக்க பார்த்தால், 80, 70 எனத்தொடங்கி 50 ரூபாய் வரையில் வந்தபிறகு ஆட்டோவில் ஏறினோம். எனக்கோ காந்தியிடம் கோபம். சீக்கிரம் போகலாம். கருத்தரங்கு நடந்துகொண்டிருக்கிறது என சொன்னேன். அவர் சிம்பிளாக கூகுள் மேப்பை பார்த்தபடி, இருங்க சார். பக்கத்தில் இருக்கிற  இடத்திற்கு எதற்கு இவ்வளவு காசு என கேட்டார். இறுதியாக ஆட்டோ பிடித்து உள்ளே போனால், அது நடந்துபோகும் தூரம்தான். ஆனால் இடம் தெரியாத காரணத்தினால் ஆட்டோவைப் பிடித்து போனோம். 

உள்ளே நுழைந்தால் அவ்வளவு பிரமாண்டம். மொத்தம் 11 ஏக்கர். ஐந்து கட்டிடங்கள். ஆராய்ச்சி, தொழில் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு என இணைந்து வேலை செய்கிறார்கள். 1300க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை மாணவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்றால் சும்மாவா?

ஐஐடி ரிசர்ச் பார்க் என்பது உண்மையில் தனி உலகம்தான். எங்கு சென்று எங்கு திரும்புவது என்பதற்கே நிறைய பயிற்சியும், நுட்பமான புத்தியும் தேவை. செக்யூரிட்டி அதிகாரியிடம் ஐ.டியைக் காட்டினோம் சரி என்றவர், பிறகு யோசித்து விசிட்டர் நோட்டில் பெயரை எழுதுங்கள் என்றேன். காந்தி, அப்போது அதான் கேமரா இருக்கே என்றார். சரி, அங்கே போய் எங்கள் மீது புகார் கொடுத்துறாதீங்க போங்க என்றார். 

உள்ளே போனால் வானுயர்ந்த கட்டிடங்களில் எது ஆர்.பி ஆடிட்டோரியம் என்று தெரியவில்லை. அங்கு தூய்மை பணியில் இருந்தவரிடம் கேட்டால், அவர் அந்த பக்கம் கைகாட்டினார். டி என்ற கட்டிடத்தை எட்டுவதற்குள் சிலரிடம் காந்தி விசாரித்தார். அங்குள்ள இளைஞர் டி எங்கிருக்கிறது என தெரியாது என்றார். இத்தனைக்கும் அவர் கடந்துவந்தது அந்தப் புறமிருந்துதான். பிறகு டி கட்டிடத்திற்கு சென்றோம். அங்கு மொத்தம் ஏழு மாடி இருந்தது. அதில் ஏற்கெனவே குர்தா அணிந்த ஒருவர் ஏறிவிட்டார். பட்டனையும் அழுத்திவிட்டார். காந்தி வேகமாக நுழைந்துவிட்டார். நான் ஏறுவதற்குள் கதவு மூடிக்கொள்ள பார்க்க குறுக்கே கை நுழைக்க, காந்தி கதவு திறக்கும் பட்டனை அழுத்தினார். லிஃப்ட்டுக்குள் நுழைந்தேன். குர்தா மனிதர் வலதுபக்கம் சற்றே சாய்ந்து நின்றார். அவரும் கருத்தரங்கிற்குத்தான் சென்றார் என்பதை புரிந்துகொண்டேன்.  கதவு திறந்து வெளியே வந்ததும் உள்ளே செல்வதற்கான என்ட்ரி 1, 2 என இரண்டு இருந்தது. பிரஸ் என்று சொன்னதும் இரண்டாவது நுழைவு வாயிலை காட்டினர். உள்ளே போக படிக்கட்டில் ஏறும்போது, தலை நரைத்த கோட் அணிந்த பெண் ஒருவர் கையில் கோப்புகளோடு கீழிறங்கினார். எனக்கு அவர்தான் ரீமா சாகா என்று தோன்றியது. அது சரிதான் என்பதை பின்னர் திரு. அசோக் ஜூன்ஜூன்வாலா மூலம் உறுதிசெய்துகொண்டேன். 


 

இதன் சிறப்பம்சம் நாற்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் , அதே எண்ணிக்கையிலான ஐஐடி பேராசிரியர்களோடு குழுவாக இணைந்துள்ளதுதான். இதே எண்ணிக்கையிலான தொழில்முனைவோர்களும், தொடக்கநிலை தொழில்முனைவோர்களும் இமேஜினிங் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  பிரமாண்டமாக அமைந்த டி பிளாக் கட்டடத்தில், புதிதாக அமைக்கப்பட்ட ஆர்.பி. கலையரங்கத்தில்  பல்வேறு மையப் பொருட்களில் அமைந்த சிந்தனைகளைப் பேராசிரியர்கள், தொழில்முனைவோர்  பகிர்ந்துகொண்டனர். 

ஆற்றல் மற்றும் ஜீரோ கார்பன் வெளியீடு, கல்வி, சுகாதாரம் பற்றிய தொழில்நுட்பங்கள், குடிநீர், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தகவல்தொடர்பு, போக்குவரத்து மற்றும் இயக்க சேவைகள், வீடுகள் மற்றும் நகரமயமாதல், கிராம மேம்பாடு மற்றும் வேளாண்மை, நிதி தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை 3 நாள் கருத்தரங்கில் பேசப்பட்டன. அவற்றில் சிலரின் கருத்துகள் இதோ...

ஆண்ட்ரூ தங்கராஜ், ஐ.ஐ.டி. மெட்ராஸ் பேராசிரியர் (மின்னணு பொறியியல்துறை)

”இளங்கலைப் பட்டம் பெற்ற பல்லாயிரம் மாணவர்கள் மேற்கல்வியை படிப்பதில்லை. இதற்கு அவர்களின் பொருளாதார நிலையும், ஆர்வமின்மையும் காரணங்களாக உள்ளன. இப்படி வேலை செய்யும் நிலையில் உள்ளவர்கள் படிப்பதற்கு அரசு டிஜிட்டல் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது எதிர்காலத் தீர்வாக இருக்கும்.

 தமிழக அரசு பெரியளவில் தஞ்சை, கோவை, மதுரை, சென்னை என பள்ளிகளை உருவாக்க வேண்டும். 2047இல் இப்படி உயர்கல்வி டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்டால், இன்றைக்கு படிக்கும் மாணவர்களை விட அதிக மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். குறைந்தபட்சம் 50 கல்வி நிறுவனங்களை  இணைத்து டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கலாம்.  அண்மையில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கிய பி.எஸ்சி புரோகிராமிங் படிப்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இணைந்துள்ளதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று பேசினார். 

புனித் குப்தா, தொழில்முனைவோர்

”இந்தியாவில் தற்போது நிதிசார்ந்த சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளன. வேலை செய்யும்போது மாதம்தோறும் கிடைக்கும் தொகை ஒய்வு பெற்றபிறகு கிடைக்காது. எனவே, மக்கள் நிதிசார்ந்த முதலீடுகளை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். நிதிக்கல்வி பற்றி விழிப்புணர்வின்றி பல கோடி மக்கள் இந்தியாவில் உள்ளனர்.

 2047க்குள் இந்திய மக்கள் நிதிக்கல்வி பற்றிய விழிப்புணர்வை பெறும்போது, டிஜிட்டல் நிதிசேவைகள் வளர்ச்சி பெறும். ரொக்கமாக அல்லாமல் டிஜிட்டல் வழியில் அதனை கையாளும் நம்பிக்கையை நிதி சேவைகளுக்கு தேவை வளர்ந்து வருகிறது” என்று பேசினார். 

வர்னாலி தேகா, ஐஏஎஸ் அதிகாரி

”இன்றைய இந்தியாவில், அரசு சேவைகள் டிஜிட்டல் முறையில்  கிடைக்கின்றன. இதன்மூலம் அரசு மையப்படுத்தலின்றி மக்களுக்கான சேவைகள் தடையின்றி கிடைக்கின்றன. அசாமின் கோல்பாரா (Goalpara), கோக்ராஜ்ஹர்( Kokrajhar) என்ற இரு பின்தங்கிய மாவட்டங்கள்  மத்திய அரசின் திட்டங்களால் வளம் பெற்றன. 

கோல்பாராவில் பசுமை தொழில்நுட்பம் மூலம் சாலைகள் உருவாக்கப்பட்டன. இங்கு ஊட்டச்சத்துக்கென போஷன் கிளப்புகள் (Swatchh health Poshan Club ) தொடங்கி, 1698 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான உணவுத்திட்டத்தை வழங்கினர். இதோடு, வித்யாசக்தி மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு கல்வி அறிவு கிடைத்து. கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில், நீர் தட்டுப்பாடு இருந்தது. அதனை அரசு சிறந்த நீர் மேலாண்மை திட்டங்களின்  மூலம் தீர்த்தது ” என்று பேசினார். 

நிகழ்ச்சி

ரிசர்ச் பார்க்கின் தலைவரான பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வாலா, பல்வேறு ஐடியாக்களை விளக்கியவர்கள் அனைவருக்குமே 12 நிமிடங்களை மட்டுமே வழங்கினார். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்களை தயவு தாட்சயண்யமின்றி கீழே இறங்கச்சொல்லி ஆங்கிலத்தில் சொன்னார். 

முழுக்க கறாராக இல்லாமல் சொல்லுவதை நகைச்சுவையாக சொன்னதுதான் முக்கியமானது. இதனால் நேரமாகும்போது, அசோக் சார் மேடையை நோக்கி வரும்போதே பலரும் புன்னகைக்க தொடங்கினர். ஒரு நிமிடம் பாக்கி வைத்து முடித்தால்தான் ஏதேனும் கேள்வி கேட்க முடியும். அதற்கேற்ப வேகமாக பேசி முடிக்கவேண்டும். 

அசோக் சாரின் பொருட்டு, மின்னல் வேகத்தில் பேசி முடித்தவர், ஐஏஎஸ் அதிகாரியான வர்னாலி தேகா. இவர் எந்த வேகத்தில் பேசினார் என்றால், அதை கவனிக்கும் நாம் ஸ்லைடைப் பார்த்து தகவல்களை உள்வாங்குவதற்குள் ரிமோட்டை இருமுறை மாற்றி தகவல்களை மாற்றிவிட்டார். இதனை கேள்வி பதில்  நேரத்தில் அவரே ஒப்புக்கொண்டார். ஆனாலும் என்ன? வேகமாக தான் சொல்ல வந்ததை சொல்லிச்சென்றுவிட்டார். இவர் பேசியதில், அசாம் மாவட்டத்தில் அரசு திட்டங்களை எப்படி சிறப்பாக செயல்படுத்தினோம் என்பதை விளக்கினார். 

இமேஜினிங் இந்தியா 2047இல் அடிப்படையான ஷரத்து, இ கவர்னென்ஸ்தான். அரசு திட்டங்களை எப்படி மக்களுக்கு தொழில்நுட்பம் மூலம் கொண்டு செல்வது என்பதைப் பற்றி நிறைய பேசினார்கள். ஐஐடி மெட்ராஸ் என்றாலே புதுப்புது கண்டுபிடிப்புகள்தானே? 



நன்றி

ஆர்.வெங்கடேஷ் - பட்டம் மாணவர் பதிப்பு பொறுப்பாசிரியர்

எம்.பி.காந்தி ராமன், உதவி ஆசிரியர், பட்டம்

சாய்ராம் ராதாகிருஷ்ணன், ஐஐடி மெட்ராஸ் - ஊடகம்

ரீமா சாகா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் , ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்

ஐஸ்வர்யா கணேஷ், தகவல் மற்றும் பொது மக்கள் தொடர்பு அதிகாரி


புகைப்படங்கள் 

1. பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்பிரமணியன்

2. பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ்

3. தொழில்முனைவோர் புனீத் குப்தா, கலைடோஃபின்

4. வர்னாலி தேகா, ஐஏஎஸ் அதிகாரி


புகைப்படங்களை வாங்குவதற்கு புரோடோகால் படி கடுமையாக போராட வேண்டியிருந்தது. பின்னே ஐஐடி மெட்ராஸ் என்றால் சும்மாவா? 

ஸ்ரீமதி.ஐஸ்வர்யா கணேஷ் அவர்களே புகைப்படங்களை மின்னஞ்சல் வழியே பெற்றுக்கொள்ள வழிவகை செய்தார். அவருக்கு சிறப்பு நன்றி. 


கருத்துகள்