கட்டற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படும் எழுத்தாளர்கள்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

 










வினோத் அண்ணாவுக்கு, 

வணக்கம்.

நேற்று ஆலிவர் அண்ணாவோடு பேசினேன். அவர் தனக்குத்தானே கண்ணாடியில் பேசுவது போன்ற மனநிலையில் இருந்தார். தொடர்ச்சியாக எனக்கு எந்த வாய்ப்புமே தராமல் ஏதேதோ பேசினார். நான் அவருக்கு இன்ஸ்டால் செய்து தந்த டேட்டிங் ஆப்பை அழித்துவிட்டாராம். தனது தொழிலைப் பார்க்கப் போகிறாராம். அவர் சிங்காரப்பேட்டை போனார் என்று சொன்னேன் இல்லையா? அங்கு ஏதோ மந்திரித்து விட்டார்கள் போல. 

 தொடர்ச்சியாக அவரின் பழக்கப்படி இரண்டு இரவுகள் ஆல்கஹாலை வாய்க்குள் சரித்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறேன். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் தான் கோழிக்கறி சாப்பிட்டேன். அதுவும் உடல் எப்படி எதிர்வினை தருகிறதோ என்ற பதற்றத்தில்தான். இதனை மெல்ல உடலுக்கு பழக்கிக்கொள்ள நினைத்தேன். ஆனால் அது நினைத்தபடி வேலைக்காகவில்லை. நான் அலுவலகத்திற்கு நடந்து செல்வதால் பருப்பு, கீரையைப் பயன்படுத்தி வந்தேன். ஆனால் மெல்ல அதுமட்டுமே போதாது என்று புரிந்தது. செஞ்சியின் ராணி கோட்டை, ராஜா கோட்டை ஏறியபோது எனது உடல் தடுமாறத் தொடங்கியது. மெல்ல கால்கள், தொடை, கணுக்கால் என அனைத்துமே நடுங்கத் தொடங்கியிருந்தது. 

சாதாரணமாகவே எனக்கு நோய் வந்தால் குணமாக தாமதம் ஆகும். எனவே, கறி சமைத்தால் உடலுக்கு புரதம் கிடைத்து வலி குறையும் என நினைத்தேன். முதலில் பிரியாணி மாறி வாங்கிக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் ஆலிவர் அண்ணா, நாம சமைப்பது போல வருமா என சொல்லி இழுத்தார். முதல்முறை சமைக்கிறேன் என்று சொல்லி பீதி கொடுத்தாலும், சமைத்தபோது அட்டகாசமாக இருந்தது. எந்த சூழ்நிலையிலும் ஆலிவர் அண்ணாவோடு அவரது அக்கா துணையாக இருந்தார். அவர் யார் என்று கேட்டபோது, என்னைப் பற்றி அடிக்கடி அக்கறையாக விசாரிப்பாங்க என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். அதற்கு அத்தாட்சியாக, அவர் கொடுத்தனுப்பிய நார்த்தங்காய் ஊறுகாயைக் காட்டினார்.  பாகுந்தி என்றேன். 

செஞ்சி கோட்டைக்கு போனோம் அல்லவா? அங்கு தமிழர்களை விட கேரள ஆட்களே அதிகம். அதிகம் புழங்கியது அவர்கள்தான். மலையில் ஏறுவதுதான் மனவலிமைக்கு சவாலானது. மற்றபடி நிறைய இடங்களில் கல்மண்டபங்கள் சிதிலமடைந்து நின்றன. இளம்பெண்கள், இளைஞர்கள் குழுக்களாக வந்து மலையேறிவிட்டு மகிழ்ச்சியாக கீழிறங்கிச் சென்றனர். இதில் காதல் ஜோடிகள்தான் அதிகம். சிரிப்பும் வெட்கமுமாக பெண்கள் சுழன்றனர். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. 

அன்பரசு 

18.1.2022

-----------------------------






அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். 

எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் வீடியோ பார்த்தேன். கடந்த காலத்தைப் பற்றி பேசும்போது உணர்ச்சி பீறிடல்களுக்கு இடையில் பேசினார். தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவர் பேசுவது இயல்பாக இருந்தது. ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. ஆனால் எடிட்டிங் பணி செம்மையாக இல்லை. சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் ஒருவர் அழும்போது காட்சியை கருப்பு,  வெள்ளையாக மாற்றுவார்கள். அதைப்போல எதற்கு எழுத்தாளரின் ஒளிப்பதிவில் செய்யவேண்டும் என்று எனக்கு புரியவில்லை.  படத் தொகுப்பாளர் தனக்கான ஊக்கத்தை சீரியல்களிலிருந்து பெறுகிறார் என நினைக்கிறேன். அவருக்கு அதற்கான நிறைய வாய்ப்புகள் கிடைக்க பேரிறையை வேண்டுகிறேன். 

கட்டற்ற உணர்ச்சி, நிலையற்ற உணர்ச்சி என இருவகை இயல்புகளை கொண்ட எழுத்தாளர்களை ஜெயமோகன் கூறுகிறார். எழுத்தாளர் தேவிபாரதி, கட்டற்ற உணர்ச்சிகளைக் கொண்டவராகவே பார்க்கிறேன். இவர் எழுதிய நாவல்களைப் படித்தது இல்லை. காலச்சுவடில் இவரின் சில கட்டுரைகளைப் படித்துள்ளேன். வெகு நாட்களுக்கு பிறகு நேற்றுதான் சத்யா என்ற காய்கறி கடையில் பழங்களை வாங்கினேன். உங்களிடம் வாங்கி வந்த கடிதங்கள் இனிமேல்தான் பிளாக்கில் பதிவிட வேண்டும். பின்னாளில் இவற்றை தொகுத்து நூலாக்குவேன் என நினைக்கிறேன். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். 

நன்றி!

அன்பரசு

21.1.2022

 


கருத்துகள்