தண்ணீரைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டி! அனுபம் மிஸ்ரா -காந்தியவாதி, சூழல் செயல்பாட்டாளர்
தண்ணீர் குரு - அனுபம் மிஸ்ரா |
மகாராஷ்டிரத்தின் வார்தா நகரில் பிறந்த ஆளுமை இவர். புகழ்பெற்ற இந்தி கவிஞர் பவானி பிரசாத் மிஸ்ராவின் மகன். ஆனால் அப்பாவின் வழியில் எதையும் செய்யாமல் தனக்கான செயல்பாட்டை தீர்மானமாக வகுத்துக்கொண்ட மனிதர்.
நீர்சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு முறைகளை தன் ஆயுள் முழுவதும் பிரசாரம் செய்தார். எப்படி மெல்லிய குரல் கொண்ட காந்தியின் கருத்து பல கோடி மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல்தான் தனது செயல்பாடு வழியாக தனது பெயரை மக்களை சொல்ல வைத்தார்.
வறட்சியில் பாதிக்க ஏராளமான மாநிலங்களுக்கு களப்பணியாக சென்றார். அங்கு சென்று, அம்மக்கள் தொன்மைக் காலத்தில் என்னென்ன முறையில் மழைநீரை சேமித்தார்களோ அதனை அடையாளம் கண்டார். இதனை ஆய்வு செய்வதோடு, நூலாகவும் எழுதினார். இப்படித்தான் எட்டு ஆண்டுகள் ஆய்வு முடிவில் ராஜஸ்தான் நீர்நிலைகள் பற்றி நூல் ஒன்றையும் எழுதினார். நூல் எழுதுவதும் அதனை வெளியிடுவதும் முக்கியம் அல்ல. அதில் முக்கியமான வேறுபாடு, ஆங்கிலம் தெரிந்தாலும் கூட மக்களுக்கு விஷயத்தைச் சொல்லுவதற்கு ஏதுவாக இந்தியில் அனைத்து நூல்களையும் எழுதினார்.
தான் எழுதிய அனைத்து நூல்களையும் கிரியேட்டிவ் காமன் உரிமை உள்ளது அல்லவா? அதுபோல இலவசமாக சமூகத்திற்கென கொடுத்துவிட்டார். அதனை யார் வேண்டுமானாலும் எடுத்து மொழிபெயர்க்கலாம். பதிப்பிக்கலாம். இவரது இந்த செயல்பாடு காரணமாக ஏராளமான மக்கள் நீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு பெற்றனர். இதன் வழியாக 5 ஆயிரத்திற்கும் மேலான குளங்கள், ஏரிகள் புனரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தன.
தனது செயல்பாட்டிற்கான ஊக்கத்தை காந்தியிடம் இருந்து பெற்றார். தனது சமஸ்கிருத முதுகலைப் படிப்பை முடித்தவர், சிப்கோ இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டார். காந்தி அமைதி பௌண்டேஷனில் பணிக்கு சேர்ந்து செயல்படத் தொடங்கினார். அப்போது சிப்கோ இயக்கத்தில் இயங்கி சாண்டி பிரசாத் இவருக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டினார்.
சிப்கோ இயக்கத்தைப் பற்றிய ஆங்கில நூலை எழுதி தொகுத்தார். இதன் வழியாகத்தான் இந்தியாவில் நடைபெற்ற சூழல் இயக்கத்தின் போராட்டம் பற்றி உலகம் அறிந்தது. பிறகு, அதே இயக்கத்தின் செயலாளராக செயல்பட்டார். காந்தி மார்க்கம் என்ற காலாண்டு இதழின் ஆசிரியராக பணியாற்றினார். சிப்கோ இயக்கத்தின் போராட்டத் தாக்கம் அனுபம் மிஸ்ராவை நிறையவே மாற்றியிருந்தது. இதன்பிறகுதான், குடிநீர் பற்றி கவலைப்பட தொடங்கினார்.
அதன் பின்னாலுள்ள அரசியல் பற்றியெல்லாம் வெளிப்படையாகவே பேசியுள்ளார். அவர் பெற்ற ஜம்னாலால் பஜாஜ் விழாவில் இதுபற்றி விமர்சித்திருக்கிறார். அவருக்கு அரசியல் செயல்பாடு வழியாக நீர் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். குடிநீர் காக்கும் செயல்பாட்டை செய்துகொண்டிருந்தபோது அனுபமின் உடல்நிலையும் சிக்கலாகி கொண்டே வந்தது. ஆம் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அதன் அறிகுறி, பாதிப்புகளைக் கடந்துதான் குடிநீர் காக்கும் விஷயங்கள் அனைத்தையும் செய்து வந்தார்.
ஓவியம் - திரு.மகேஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக