வியக்க வைக்கும் புறாக்களின் ஞாபகசக்தி!

 






நினைவுகளை மறக்காத பறவை!

தொன்மைக் காலத்தில், புறாக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்ததை பலரும் அறிவோம். புறாக்களை அக்கால மக்கள், தேர்வு செய்ததற்கு அதன் திசையறியும் திறன்தான் காரணம். ஒருமுறை பறந்த வழித்தடத்தை புறா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தானே? இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புறாவின் நினைவுகூரும் திறனை ஆய்வு செய்து வியப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் நினைவுகளை சோதிப்பது சவால் நிரம்பியது.

 “இப்படி நடைபெறுவது மிகவும் அரிதானது. ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட தேவைப்படும்போது, அதனைப் புறா மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது  ஆச்சரியப்படுத்துகிறது” என்றார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விலங்கியலாளர் டோரா பைரோ. 




2016ஆம் ஆண்டு தொடங்கி, புறாவின் நினைவுகள் பற்றிய ஆராய்ச்சியை பைரோ தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செய்து வருகிறார்கள். இவர்களின் ஆய்வுக்கட்டுரை, புரோசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் வீட்டில் வளர்க்கும் புறாக்களை 8 கி.மீ. தொலைவிற்கும் அதிகமாக தூரத்திற்கு பறக்க வைத்து சோதித்தனர். 

வழித்தடத்தை அறிய, புறாவின் உடலில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினர். இம்முறையில் 2016 முதல் 2020 வரையிலான காலகட்ட ஆராய்ச்சித் தகவல்கள் சேமிக்கப்பட்டன.  2016இல் ஒருமுறை பறக்கவிடப்பட்ட பிறகு புறாக்களை 2019இலும், 2020இலும் பறக்கவிட்டனர். இதில் பெரும்பான்மையான புறாக்களை  முன்னர் சென்ற வழித்தடத்தை பறக்க தொடங்கியபோதே அடையாளம் கண்டுவிட்டன. புறாவின் திசையறியும் திறன், மனிதர்களின் அறிவாற்றலுக்கு மிக அருகில் வளர்ந்துள்ளது புதிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக ஆய்வு வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


தகவல்

Scientific American

Bird memory 

Scientific American March 2022



 


கருத்துகள்