இமாலயப்பகுதிகளைப் பாதுகாக்கும் வேஸ்ட் வாரியர்ஸ் அமைப்பு!
கழிவு மேலாண்மையில் தடுமாறும் இமாலய மாநிலங்கள்!
இந்தியாவில் இமாலயப் பகுதிகளை உள்ளடக்கி பத்து மாநிலங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம். இங்குள்ள மலைப்பகுதிகளைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதனால் கிடைக்கும் வருவாய், மாநிலங்களுக்கு முக்கியமான பொருளாதார ஆதாரமாகும்.
இமாலயப் பகுதிகளில், தோராயமாக ஆண்டுக்கு 80 லட்சம் டன் கழிவுகள் தேங்கிவருகின்றன. நகரத்தில் தேங்கும் குப்பைகளைச் சேர்த்தால் அளவு இன்னும் கூடும். இதே வேகத்தில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை வந்தால் 2025ஆம் ஆண்டில், 24 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது.
இமாலய மாநிலங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா (Kangra), குலு (Kullu) ஆகிய மாவட்டங்களின் பள்ளத்தாக்கு பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் இங்கு வருகை தருபவர்களில் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பயணிகள், மலையேற்ற வீரர்கள் ஆகியோர்தான் அதிகம். வெளியிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகள், உணவுக் கழிவுகள் இங்குள்ள நிலம், நீர்,காற்றை மாசுபடுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளோடு கைகோத்து செயல்படுகின்றன.
இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தரம்சாலாவை மையமாக கொண்டு செயல்படுகிறது வேஸ்ட் வாரியர்ஸ் தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பு, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் என இரண்டு மாநிலங்களிலும் தூய்மைப் பணிகளைச் செய்துவருகிறது. மட்காத கழிவுகளைச் சேகரித்து, மறுசுழற்சியையும் செய்கிறது வேஸ்ட் வாரியர்ஸ் அமைப்பு.
மட்கும் கழிவுகளைத் தரம்சாலா நகர நிர்வாகம், சுதேர் கிராமத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு அனுப்புகிறது. இக்கழிவுகளிலிருந்து உருவாகும் டையாக்சின் (Dioxins), கார்பன் மோனாக்சைட் (Carbon monoxide), சல்பர் ஆக்சைட் (Sulfur oxides), டோலுயூன் (Toluene), பென்ஸேன் (Benzene) ஆகிய வாயுக்கள் காற்றை மாசுபடுத்தியுள்ளன. மழைப்பொழிவு குப்பைக்கிடங்கில் உள்ள வேதிப்பொருட்களை, ஆறுகளுக்கும், நிலத்திற்கும் கொண்டுபோய் சேர்த்தது. இதன் விளைவாக, அப்பகுதியில் குடிநீரின் தரம் கெட்டுள்ளது. தற்போது சுதேர் கிராம மக்கள், திறந்தவெளி குப்பைக் கிடங்கை எதிர்த்து போராடி வருகின்றனர்.
2016ஆம் ஆண்டு இந்திய அரசு, திடக்கழிவு மேலாண்மையில் புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக, இமாச்சலப் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, நடைமுறையில் உள்ளது. அரசு அமைப்புகள் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து கழிவுகளின் மறுசுழற்சி செயல்பாடுகளை வேகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில், இங்கு உருவாகும் கழிவுகளின் பிரச்னை குறைய வாய்ப்புள்ளது.
தகவல்
wastewarriors.org
கருத்துகள்
கருத்துரையிடுக