உடன்கட்டை ஏறும் கொடூரத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய்!

 





சதி - உடன்கட்டை ஏறும் பழக்கம்





ராஜாராம் மோகன்ராய்


இந்திய வரலாற்றில் ராஜாராம் அளவுக்கு எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அண்மையில் தெலுங்கில் வெளியாகி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்ட ஷியாம் சிங்கா ராய் படம் கூட ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்த தன்மையை தழுவி எடுக்கப்பட்டிருந்த படம்தான். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாரோடு சேர்ந்து முயன்றார் ராஜா. 

கணவர் இறந்தபிறகு மனைவியை நெருப்பிட்டு கணவரின் தகனமேடையில் உயிரோடு எரிப்பதுதான் சதி எனும் பழக்கம். இந்த கொடூரத்தால் நிறைய பெண்கள் வாழ நினைத்தும் வேறுவழியின்றி படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குழந்தை திருமணமும், சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் சமூகத்தில் புழக்கத்தில் இருந்தது. இதனை ராஜாராம் மாற்ற நினைத்து போராடினார். 

வங்காள மாகாணத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்தவர், ராம் மோகன் ராய். இவர், ஹூக்ளியில் உள்ள ரத்னாகர் நகரில் பிறந்தார். இந்து குடும்பத்தில் பிறந்த ராய், சமஸ்கிருதம், பெர்சியன், ஆங்கிலம், அரபி, லத்தீன், கிரேக்கம் என நிறைய மொழிகளைக் கற்றவர். இவருக்கு இளம் வயதில் துறவியாகும் ஆசையே இருந்திருக்கிறது. தனது துறவி ஆசையை பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் உடனே பதற்றமானார்கள். மேலும் அவருக்கு ஒன்பது வயதில் திருமணம் செய்து வைத்துவிட்டனர். வளர்ந்துவரும்போது சிறந்த படிப்பாளியாகவும், நிர்வாகியாகவும், அரசியல்வாதியாகவும் மாறினார். ஆனால் இன்று அவரை பலரும் நினைவில் கொள்வது சமூக சீர்த்திருத்தவாதியாகத்தான். 2022 ஆம் ஆண்டு ராய் பிறந்து 250 ஆண்டுகள் ஆகிறது.

உலகம் முழுவதும் உள்ள மதங்களை பற்றி ஆய்வு செய்தவர், மதங்களின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். பேச்சு, எழுத்து, செயல்பாடு என மூன்றிலும் இதற்கான அறிகுறிகளை நீங்கள் பார்க்கலாம். 1823 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜம் இயக்கத்தைத் தொடங்கினார். தன் ஆயுள் முழுவதும் கடவுளை விக்கிரக வடிவில் வணங்குவதையும், அதற்கு செய்யப்படும் சடங்குகளை எதிர்த்து வந்தார். 

மொகாலய பேரரசர் இரண்டாம் அக்பர் இவருக்கு ராஜா பட்டத்தை வழங்கினார். மன்னரின் பரிந்துரைப்படி சதி எனும் உடன்கட்டை பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்திற்கு சென்றார். இவரது தீவிரமான பிரசாரத்தினால் 1833ஆம் ஆண்டு சதி பழக்கம் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. இதன் வெற்றி தந்த மகிழ்ச்சியில், வரதட்சணை, குழந்தை திருமணம், பலதார மணம் ஆகியவற்றை எதிர்த்து பிரசாரம் செய்தார். 

1816ஆம் ஆண்டு ராய், ஆங்கிலப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். சம்பத் கௌமுதி என்ற நாளிதழ் ஒன்றையும் தன் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினார்.  1822ஆம் ஆண்டு மிராத் உல் அக்பர் என்ற பத்திரிக்கையை பெர்சிய மொழியில் தொடங்கினார்.  1833 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று மூளைக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார். இவரது உடல் ஸ்டேப்லெடன் குரோவ்ஸ் எனுமிடத்தில் புதைக்கப்பட்டது. 1843ஆம் ஆண்டு மீண்டும் ராயின் உடலை எடுத்து அர்னோஸ் வேல் கல்லறைத்தோட்டத்தில் புதைத்தனர். 

டெல் மீ வொய் இதழ் 

படம் - இந்தியா டுடே 





கருத்துகள்