உருகும் பனி அதிகரிக்கும் வெப்பம்!

 









ஆண்டிஸ் மலைத்தொடரில் உருகும் பனி!


தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் நீர்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் 27 சதவீதம் உருகியுள்ளது. இதனால், மக்கள் நீருக்கு தவிக்கும் நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அன்டார்டிகா, க்ரீன்லாந்து, இமாலயம் ஆகிய பகுதிகளிலும் செய்த ஆய்வில் பனிப்பாறைகள் 37 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். 

மேற்சொன்ன இடங்களில் பனிப்பாறைகள் அடர்த்தியாக இருந்தால், அது நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். ஆனால் அவை மெலிந்தால், குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும். “ இப்போது பனிப்பாறைகள் பற்றி வெளியாகியுள்ள தகவல்தொகுப்பு, நீராதாரங்கள் விவகாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும்” என்றார் பிரான்சிலுள்ள கிர்னோபில் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோமைன் மில்லான். இமாலயப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவது குறைந்தது, அங்கு வாழும் மக்களுக்கு சாதகமான செய்தி. மற்றொருபுறம், ஆண்டிஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகத் தொடங்குவது ஆபத்தான விஷயமாக உள்ளது. 

 எட்டு லட்சத்து 10 ஆயிரம் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பார்த்து, உலக  நாடுகளிலுள்ள பனிப்பாறைகளின்   தன்மையை பிரான்ஸ் ஆய்வுக்குழு ஆராய்ந்துள்ளது. இதற்கு 400 நாட்கள் தேவைப்பட்டது.  தற்போது செய்யப்பட்ட ஆய்வு, பனிப்பாறைகள் உருவாகி கடலில் சேர்ந்து அதன் மட்டத்தை 26 செ.மீ. உயர்த்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், முந்தைய ஆய்வில் நாம் நினைத்ததை விட வேகமாக பனிப்பாறைகள் உருகியுள்ளன என்பது உறுதியாகிறது. 

இதேவேகத்தில் பனிப்பாறைகள் உருகினால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. இந்த ஆய்வு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பான சென்டினல் 1பியைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.  கடந்த டிசம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ள  இச்செயற்கைக்கோள், பனிப்பாறைகள் உருகுவதைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றியது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தகவல்

New scientist 

Andes peak water looms (Adam vaughan)

New scientist 12.2.2022

பின்டிரெஸ்ட்



கருத்துகள்