பங்குச்சந்தையும் அகண்டா திரைப்படமும்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

 












புகைப்படக் கலைஞர் வினோத் அவர்களுக்கு, வணக்கம். 

குடியரசு தினத்தன்று நாளிதழ் விடுமுறை என்பதால், சற்றே ஆசுவாசம் கிடைத்துள்ளது. இன்று வடபழனியிலுள்ள அறைக்கு சென்று மோகன்ராஜ் அண்ணாவைப் பார்த்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்தேன். அவர், இப்போது ஷேர் மார்க்கெட்டில் ஏதோ முதலீடு செய்து அது பற்றி படித்துக்கொண்டிருக்கிறார். முதலில் பேசும் அனைத்து விஷயங்களையும் ஷேக்ஸ்பியர் பற்றி இணைத்துப் பேசுவார். இப்போது பங்குச்சந்தையோடு இணைத்துக்கொண்டிருக்கிறார். இதில் வெற்றியடைந்தால் அவரது பொறியியல் படித்த மனைவி, குழந்தை ஆகியோர் சென்னை வருவார்கள் என நினைக்கிறேன். 

ஃபாரம் மால் போய் ஜாலியாக சுற்றிவிட்டு வந்தோம். அண்ணன் ஆர்கானிக்காக மாறிவிட்டார். எங்கு சென்றாலும், கல் உப்பு, பனம் கற்கண்டு என வாங்கிக் குவிக்கிறார். நான் மிகச்சில பொருட்களையே வாங்கினேன். தன்மீட்சி - ஜெயமோகன் நூலை படித்தேன். எழுத்து, கருத்தியல், பொது மனநிலை, கல்வி, தொழில், செயலூக்கம் என பல்வேறு விஷயங்களை நூலில் ஜெயமோகன் பேசியிருக்கிறார். அவரது வலைத்தளத்தில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்புதான் நூல். மின்னல் முரளி படம் பார்த்தேன். விபு என்ற பாத்திரத்தில் குரு சோமசுந்தரம் தனது மனதில் உள்ள வலியை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருந்தார். 

நன்றி!

அன்பரசு

26.1.2022

-----------------------------









மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம். நலமா?

புத்தக அட்டை பற்றிய தங்களது கருத்தை ஏற்கிறேன். தமிழில் எழுத சரியான எழுத்துரு கிடைக்கவில்லை. எனவே அனைத்து தலைப்புகளும் மேற்கத்திய வடிவில் அமைத்தாலும் கூட சரியாக வருவதில்லை. எனவே, சில மாற்றங்களை செய்தேன். இபுக் கவர் வேலைக்காகவில்லை என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். 

எழுத்தாளர் தேவி பாரதி அவர்களுக்கு விருது வழங்கியதோடு ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருப்பது நிச்சயமாக நல்ல முயற்சி. அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த ஸ்டாலின் தங்களது சகோதரர் என்று யூகிக்கிறேன். நிகழ்ச்சியில் உங்களது உழைப்பும், புகைப்படமும் பேசப்பட்டது. சந்தோஷம்தான்.  கிடைக்கவேண்டிய நேரத்தில் அன்பும் அங்கீகாரமும் கிடைப்பது அரிதுதான். 

ஆலிவர் அண்ணா, தனது பயோடேட்டாவை ஆங்கிலத்தில் எழுதி தரச்சொன்னார். டேட்டிங் சைட்டில் பயோவை எழுதுவதும், வேலைக்காக தனது பயோவை எழுதித்தருவதும் ஒன்றா என்ன? எனக்கு பீதியாகிவிட்டது. குக்கூ அமைப்பில்தான் ஏராளமான இலக்கிய செம்மல்கள் இருக்கிறார்களே? ஆனால் என்னிடம் எதற்கு உதவி கேட்கிறார்?  என்பிகேவின் அகண்டா படம் பார்த்தேன். படத்தின் இசைக்கு சோனி டிவியே காய்ச்சல் கண்டுவிட்டது. என்ன சவுண்டு? தெலுங்குப்படம் இல்லையா? அகோரி சாமியார்தான் நாயகன். சூலாயுதம் கொண்டு குத்தி, கத்தி கொண்டு தலையை அறுத்து வீசி திகில் கிளப்புகிற படம் இது. சண்டைக் காட்சிகளில் நானே என் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். நன்றி! 

அன்பரசு 

31.3.2022 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்