வெறுப்பு, பழிவாங்கும் வெறி ஆகியவற்றால் உருவாகும் மகத்தான நாயகன்! - அல்டிமேட் சோல்ஜர் - ரோக்

 













அல்டிமேட் சோல்ஜர்

மங்கா காமிக்ஸ்

சீனா

ரீட்எம்.ஆர்க்

வயது வந்தோருக்கு மட்டுமே.....

அரசின் ரகசிய அமைப்பில் வேலை செய்தவர் ஜெடோ. ஆனால், அவர் திடீரென தன் சக நண்பர்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினரான மனைவி ஸ்மைல் ரோஸ், ரோக் என்ற மகன் என இருவருமே துரோகிகள் என ஊராரால் தூற்றப்படுகிறார்கள். அடித்து உதைக்கப்படுகிறார்கள். ரோக் சிறுவனாக இருந்தபோதும், ஊர் மக்களால் சக வயதுடைய சிறுவர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். யாரும் சிறுவனை எதற்காக அடிக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. அந்தளவு மக்களின் மனதில் வன்மம் பெருகி வளர்கிறது.

ரோக் சிறுவனாக இருந்தாலும் அவனது அப்பா பற்றி பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் அவரின் செயலால் அம்மா கஷ்டப்படுவது பற்றித்தான் அதிகம் நினைக்கிறான். எனவே, அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவேனும் வலிமையாகவேண்டும் என நினைக்கிறான். இதனால் ஆன்ம ஆற்றல் உள்ளவர்களுடன் முரட்டுத்தனமாக மோதுகிறான். காயம்பட்டாலும் கூட எழுந்து நின்று அவர்களை பீதியூட்டுகிறான். இதற்கு காரணம், அவன் மனதில் மக்கள் மீது எழும் வெறுப்புதான். என்னை ஏன் தேவையில்லாமல் வெறுப்பேற்றுகிறீர்கள்? என அவன் நினைக்கும்போதுதான் அவன் சக்தி வெளிப்படுகிறது.

இப்படி ஒருநாள், சக சிறுவனுடன்  சண்டை போடுகிறான். அதுகூட அந்த சிறுவன் வம்படியாக பேசியதால் உருவானதுதான். ரோக் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. சிறுவனை அடித்து வீழ்த்துகிறான். அவ்வளவே, கொல்வதில்லை.  ஆனால் எதிர்பாராதவிதமாக, தோற்ற்றுப்போன சிறுவன் தனது வலிமை வாய்ந்த அண்ணனை கூட்டிக்கொண்டு வந்து ரோக்கை கொல்ல நினைக்கிறான். அந்த நேரத்தில் காயம்பட்டு வீழும் ரோக்கை தேசத்தின் ஐந்து ஹீரோக்களில் ஒருவரான பீனிக்ஸ் வந்து காப்பாற்றுகிறார்.

ரோக்கை லோஜி கல்லூரியில் சேரச் சொல்லி அனுப்பிவைக்கிறார். இந்த கல்லூரி, வன்முறையான ஆட்கள் படிக்கும் இடம். எந்த நாட்டிற்கும் சேர்ந்த இடமல்ல. இங்கு நாட்டில் தேடப்படும் குற்றவாளிகள் வாழ்கிறார்கள். இங்குதான் ரோக் சென்று சேர்கிறான். அவனது அப்பா, ஜெடோ இந்த கல்லூரியில் படித்துத்தான் பிறகு அரசின் ரகசிய அமைப்பில் சேர்கிறார். அவர் தோர்ன் என்ற அமைப்பில் இயங்கி வந்து பிறகு அதிலிருந்து காணாமல் போகிறார்.

ரோக் லோஜி கல்லூரியில் வந்து சேர்வதற்கான தேர்வை எதிர்கொள்கிறான். தேர்வில், காலில் ஓலைச்சுருள் கட்டப்பட்டுள்ள காக்கைகளை பிடிக்கவேண்டும். பிடித்து சுருளை சேகரிக்கவேண்டும். சேகரிக்கும் சுருளைப் பொறுத்து மாணவனாக சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஒன்று, நீங்கள் காகங்களை பிடிக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும். அல்லது அப்படி பிடித்த காகங்களின் சுருள்களை வைத்திருப்பவர்களை அடித்து மண்டையைப் பிளந்து கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெற வேண்டும். அப்படித்தான் தன்னை விட மிக வலிமையான உடல் கொண்ட பயில்வானை அடித்து நுட்பமாக வீழ்த்துகிறான் ரோக்.

அப்போதுதான் நமக்கே அவனின் வலிமை தெரிகிறது. இந்த காட்சிக்கு முன்னரே, பயில்வான் கல்லூரியில் சேர வந்த மாணவனை நசுக்கி கொல்கிறான். அதை ரோக் பார்க்கிறான். ஆனால் அவன் எதற்கும் பயப்படுவதில்லை. களத்தில் இறங்கி இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான்.

இரண்டாவதாக ஒரு ஆளை அடித்து வீழ்த்தும்போது மூன் பிளேட் என்பவர் வந்து ரோக்கை தாக்குகிறார். ஒருகட்டத்தில் அவனது உடல் முழுவதும் ஏராளமான வாள்கள் துளைத்துக் கிடக்கிறது. மயங்கி வீழ்ந்த சூழலிலும் ரோக் எழுகிறான். காரணம், அவனது போர் ஆன்மா. அவனது உடலில் உள்ள போர் ஆன்மா, மிக வலிமையானது. அதன் பெயர் மாலிஸ். முழுக்க வெறுப்பை மட்டுமே உண்டு செரித்து அதன் வலிமையில் வாழ்கிறது.

இதனால் அதன் தாக்குதல் என்பது ரோக் சுயநினைவில்லாத சூழலில் கூட தடைபடாமல் நடைபெறுகிறது. அதைக் கண்டு மூன் பிளேட் கூட தடுமாறுகிறார். அவர் வேறு யாருமில்லை. ஜெடோவின் இரு மாணவர்களின் ஒருவர்தான்.

அவருக்கு ரோக்கின் போர் ஆன்மாவைத் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது. அதேசமயம், தகுதியில்லாத பலவீனமான மாணவர்களை விட்டு வைக்காமல் தனது சக்தியால் கொன்று போடுகிறார். அவர் நாடு முழுவதும் தேடப்படும் ஏ ரேங்க் கொலையாளி.

இருவரின் கொலைவெறித்தனமான சண்டையை கல்லூரி டீன் காயா வந்துதான் தடுத்து நிறுத்துகிறார். பிறகு, மூன் பிளேடுதான் ரோக்கின் ஆசிரியராக மாறுகிறார். கூடவே, ஸாய் வாங் என்ற புகழ்பெற்ற குடும்ப வாரிசும் ரோக்கின் கூடவே புதிய மாணவராக சேருகிறார். அவருக்கு, தனது சகோதரர்களைக் கடந்து  வலிமையானவராக மாறும் தேவை உள்ளது. அவர் அமைதியாக வாழ நினைத்தாலும் அவரது குடும்பம் அவரை பலவீனமானவர் என்று சொல்லி அவமானப்படுத்துகிறது. ரோக், ஸாய் வாங் என இருவரும் சேர்ந்து வேலை செய்யும் சூழல் உருவாகிறது.

ரோக் சிறுவயது முதலே வெறுப்பை அதிகம் சந்தித்து வளர்ந்தவன். அவன் வெளியே போனால் சண்டை போட்டு அடிபட்டு உதைபட்டு குற்றுயிராகத்தான் வருவான். அந்தளவு அவன் அப்பாவின் துரோகி பெயருக்காக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

அவமானம், வம்புச்சண்டை, ஒருகட்டத்தில் ஊர் தலைவரின் மகன், ரோக்கின் அம்மாவை வல்லுறவு கூட செய்ய முயல்கிறான். எனவே, தன்னை எதிர்ப்பவர்களை பற்றி கவலையே படாமல் எதிர்த்து அடித்து உதைத்து மெல்ல வலிமை பெறுகிறான் ரோக்.

கல்லூரியில்,  அவனுக்கு ஸாய் வாங் நல்ல நண்பனாக இருப்பான் என நம்புகிறான். ஆனால், அவன் ரோக்கை தோற்கடித்தால் சக்தி வாய்ந்த ஆயுதத்தை தருவதாக ஆசிரியர் மூன் பிளேடு ரகசியமாக கூறுகிறார்.  இதனால் ஸாய் வாங், ரோக்கை தாக்குகிறான். அந்த தாக்குதல் ரோக்கிற்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘’நண்பனாக இருப்பாய் என நினைத்தால் கொல்ல நினைக்கிறாய். ஆனால் நீ என்னோடு சண்டை போட நினைத்தால் இனி நான் தடுக்கப் போவதில்லை’’ என்று கூறுகிறான். அவனது போர் ஆன்மாவின் ஆக்ரோஷத்தைப் பார்த்து ஸாய் வாங் தடுமாறுகிறான். உலகையே அழித்தொழிக்கும் வன்மம், போர் ஆன்மாவான மாலிஸில் நிறைந்திருக்கிறது.

உண்மையில் ரோக், ஸாய் வாங் ஸாங் ஆகியோருக்கு இடையில் சிறுவயதில் நட்பு உருவாகி வந்திருக்கிறது. ஆனால் அதை ரோக் மறந்துவிட்டாலும் ஸாய் வாங் மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறான். ரோக் மெல்ல வலிமையாகி உயர்ந்து நிற்கும்போது வாய் சாங் தாழ்வுணர்ச்சியால் பயப்படுகிறான். தன்னை விட எப்படி அவன் வலிமையாகிறான் என்பதே அவனுக்கு புரிவதில்லை. சூழல் அழுத்தம் காரணமாக கோபம் அதிகமாகும்போது ரோக்கின் போர் ஆன்மாவான மாலிஸ் சிலிர்த்து எழுகிறது. அதன் அடிப்படையே கட்டற்ற கோபம்தான். விழித்து எழுந்தால் முழுக்க அழிவுதான். ஸாய் வாங்கைப் பொறுத்தவரை ரோக்கை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் அப்படி பார்த்து சண்டையிடுமாறு அவன் ஆசிரியரே தூண்டுகிறார். இந்த அழுத்தம் அவனை பெரிய மனப்போராட்டத்தில் தள்ளுகிறது. யாரையும் தேவையின்றி, கொல்லவேண்டுமென நினைப்பதில்லை.  

ஸாய் வாங், ரோக் ஆகியோருக்கு இடையில் இருக்கும் நுட்பமான வேறுபாடு ஒன்று உள்ளது. 3ஏ எனும் பலவீனமான குழுவை அழிக்குமாறு ஆசிரியர் மூன் பிளேடு கூறும்போது  ரோக் அந்த வேலையைச் செய்ய செல்கிறான். அவன் அங்கு உள்ளவர்களை அடித்தாலும், எழ முடியாமல் அடித்து வீழ்த்துகிறான். கொல்வதில்லை. ஆனால், ஸாய் வாங்கைப் பொறுத்தவரை அவன் ஒருவருக்கு எதிராக களமிறங்கி அடித்தால். எதிரியைக் கொன்றுவிட்டே அந்த இடம் விட்டு நகருகிறான். 3ஏவிற்கு எதிராக சண்டைக் காட்சிகள், சிறப்பாக ஓவியம் வரையப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த காட்சியில் சண்டைகளை நேருக்கு நேர் பார்ப்பது போல இருக்கிறது.

கதை ஸாய் வாங், மூன் பிளேடு, ரோக் என மூவரைச் சுற்றியே நடக்கிறது. முக்கியமாக ரோக்தான் இதில் முக்கியமானவன். அவனது போர் ஆன்மாவை எப்படியாவது திருடிக்கொள்ள நிறைய முயற்சிகள் நடைபெறுகின்றன. ஸாய் வாங்கின் சகோதரன் கூட ரோக்கை கொன்று ஆன்ம ஆற்றல் கல்லை எடுத்தால் நீ வலிமையாகி விடலாம் என்று கூறுகிறான். ஆனால், ஸாய் வாங் அதை ஏற்பதில்லை.

 ரோக்கின் அவனது வாழ்க்கையே  சோகமானது. அவனது அம்மா, நண்பர்கள், காதலி, ஆசிரியர், வழிகாட்டி என நினைப்பவர்கள் மெல்ல காணாமல் போகிறார்கள் அல்லது அழிக்கப்படுகிறார்கள். இப்படி நேரும்போது அவன் நிலைகுலைந்து வெறுப்பிலும் விரக்தியிலும் வீழ்கிறான். அந்த நேரத்தில்தான் அவனது போர் ஆன்மா கண் விழிக்கிறது. அவனது ஆன்மாவை தன் வசப்படுத்தி முழு உலகையும் அழிக்க நினைக்கிறது.

லோஜி கல்லூரியில் ரோக்குடன் சேர்ந்து இன்னும் மூவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள். இதில்தான், லோஜி கல்லூரியின் பெருமை பலருக்கும் தெரிய வருகிறது. இறுதிப்போட்டியில் ரோக், ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வலிமையான குடும்ப வாரிசை ச்ந்திக்கிறான். அவனை அடித்து வீழ்த்திய வேகத்தில் ஒட்டுமொத்த தற்காப்புக்கலை விளையாட்டு மைதானமே உடைந்து நொறுங்குகிறது. அந்தளவு ரோக்கின் போர் ஆன்மா மாலிஸ் வலிமை பெற்றதாக இருக்கிறது. இதனால், போட்டியை நடத்திய அதிகாரி தவிர மற்ற எல்லோருமே பீதி அடைகிறார்கள். அவருக்கு ரோக்கின் போர் ஆன்மாவை ஆராய்ச்சி செய்து ஆயுதங்களை தயாரிக்கும், ஹியூமனாய்டு மனிதர்களை உற்பத்தி செய்யும் நோக்கம் இருக்கிறது. இதற்காக மறைமுகமான திட்டங்களை போடுகிறார். ஆனால், இதற்கு உதவி செய்ய நாட்டின் தேசிய ஹீரோ பீனிக்ஸ் மறுத்து விடுகிறார். இதனால் அவரை, ரோக்கை வைத்தே மடக்க அரசு அதிகாரி திட்டம் தீட்டுகிறார்.  

உண்மையில் ரோக் மனிதனா, அசுரனா, அவனது பிறப்பின் ரகசியம் பற்றி கதை விளக்குகிறது. அதில்தான் நாம் நிறைய எதிர்பாராத திருப்பங்களை அறிகிறோம். பிறர் எப்படியோ, வெறுப்பை தனது சக்தியாக கொண்டு எப்படி ரோக் எதிரிகளை வெல்கிறான் என்பதை கடல் அருகே உள்ள சிறையில் நாம் பார்க்க முடிகிறது. ஆன்ம ஆற்றலை உறிஞ்சும் தன்மை கொண்ட சுவர்கள் இருந்தாலும் மனதிலுள்ள சக்தியுடன், போர் ஆன்மாவின் சக்தி இணைந்தவுடன் நடக்கும் விஷயம் யாருக்கும் ஆச்சரியமளிப்பது. தன்னை விட பலமடங்கு சக்தி வாய்ந்தவர்களை தூக்கிப் போட்டு மிதிக்கிறான் ரோக். அந்தளவு வலிமையாக மாறுகிறான். சக்தியை இழந்த நண்பர்களைக் காக்கிறான். நண்பன் ஸாய் வாங்கை உருக்குலைத்தவர்களை சல்லி சல்லியாக அடித்து நொறுக்குகிறான். இந்த சித்திரவதை காட்சி படிப்பவர்களுக்கு பெரும் பீதி ஏற்படுத்துவது.

போர் ஆன்மாவின் உருவத்தை சிவப்பும் கறுப்பு நிறமும் கலந்து வரைந்து ஒருவித திகில் தன்மையை அளித்திருக்கிறார் ஓவியர். படிப்பவர்களும் ரோக்கின் பல்வேறு வேதனைகளை எளிதாக அடையாளம் கண்டு அவனது வெறுப்பின், கோபத்தின் காரணத்தை அறிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.

ரோக் கடைசி வரை தனது நண்பர்களை முக்கியமானவர்களாக நினைக்கிறான். குறிப்பாக தன்னை கொல்ல நினைத்தாலும் தன்னோடு சண்டை போட துடிக்கும் ஸாய் வாங்கிற்கு ஆபத்து என்றால் உடனே காப்பாற்ற நினைக்கிறான். கதையில் இந்த விஷயம் முக்கியமானதாக உள்ளது.  ஸாய் குடும்பத்தின் மீது வன்மம் கொண்டுள்ள லிங் னா என்ற இளம்பெண்தான் ரோக்கின் காதலி. இவர்கள் இருவரும் சேர்ந்து பீஸ் ஹார்பர் போகும் வழியில் சண்டைபோடும் சம்பவங்கள் சிறப்பாக உள்ளன.

அல்டிமேட் சோல்ஜர் காமிக்ஸ் முழுக்கவே தீவிர சண்டை பிரியர்களுக்கானது. இதனால் பல்வேறு காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. கத்திகள் பறக்கின்றன. தலை துண்டாகிறது. எலும்புகள் நொறுங்குகின்றன.

வெறுப்பு மூலமே நாயகன் ரோக் சக்தி பெறுகிறான் என்பதால், அவனைத் தூண்டிவிடும் வசைகளும் அதிகம். அதை அவன் எதிர்கொண்டு தனது எதிரிகளை எமலோகத்திற்கு அனுப்பி வைக்கிறான். ரோக், தனது நண்பர்களை தொந்தரவு செய்யாதவர்களை ஏதும் செய்வதில்லை. ஆனால் அப்படி தொட்டவர்களை நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அடித்து நொறுக்கி உருக்குலைத்து கொல்கிறான்.

கதையின் ஒருகட்டத்தில் சக்தி வாய்ந்த ஏஞ்சல் குடும்பம் நடத்தும் தற்காப்புக்கலை போட்டியின் இடையே சிட்டி லார்டு வீட்டில் நடைபெறும் விருந்து  சண்டைக்காட்சி அப்படிப்பட்ட ஒன்று. பலரும் பீதியில் உறைந்து விடுவார்கள். அந்தளவு ரத்தம் அந்த சண்டையில் ஆறாக ஓடுகிறது. ரோக்தான் இதிலும் முன்னிலை பெறுகிறான். சிட்டி லார்ட், தனது எதிரிகளைக் கொன்று அவர்களை இறைச்சியாக்கி சமைத்து உண்ணும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக, இளம்பெண்களை… இந்த சந்திப்பில் தனது தோழியான பழங்குடிப்பெண் கொல்லப்பட ரோக்கிற்கு கோபம் உச்சம் தொடுகிறது. சிட்டி லார்டை அடித்து, உடல் பாகங்களை பிய்த்து அவரது வாயில் திணித்து தின்ன வைக்கிறான். மரணபயத்தை ஏற்படுத்தும் காட்சி இது.  

கதையின் போக்கில் ரோக் மூன்று கடவுள்களில் ஒருவராக மாறுகிறார். அழியாத கடவுள்களுடன் சண்டை போடும் சம்பவங்கள் இனிமேல்தான் நடைபெறும்  என நினைக்கிறேன். இதுவரையில் அவரது சாகசமான தனிமையான வாழ்க்கையைப் பார்த்ததே மகிழ்ச்சியாக உள்ளது. கதை முடிவுறவில்லை. அப்படியே தொடர்கிறது. ரோக்குடன் மோதுபவர்களுக்கு அவர்களின் கடந்தகாலம் நினைவுக்கு வருமாறு ஆன்ம ஆற்றல் தாக்குதலை ரோக் நடத்துகிறார். இதனாலேயே பலரும் திகைத்து நின்று சண்டையில் தோற்றுவிடுகிறார்கள்.  இந்த காட்சி கோஸ்ட் ரைடர் படத்தின் காட்சியை நினைவுபடுத்துகிறது. ஆனால் என்ன, காமிக்ஸில் இந்த காட்சியை நன்றாக விளக்கிக் கூறி படங்களை வரைந்திருக்கிறார்கள்.

வாழ்க்கை, பாதுகாப்பு, அழிவு என மூன்று கடவுள்களாக மூன் பிளேடு, ஸாய் வாங், ரோக் ஆகியோர் மாறுகிறார்கள்.  வாய்ப்பிருப்போர் வாசியுங்கள். 

கோமாளிமேடை டீம் 

------------------------


Ultimate Soldier
最终魂意
Author(s) : Mokf ,
Status : Ongoing

https://www.mangaupdates.com/series/e1chsn4/ultimate-soldier

கருத்துகள்