மாஃபியா கேங்கின் கொலை முயற்சியைத் தடுத்து காதலியைக் காக்கும் ராணுவ அதிகாரி! மிஸ்டீரியஸ் லவ் - சீன டிவி தொடர்

 














மிஸ்டீரியஸ் லவ் (2021)

சீன டிவி தொடர்

பதினாறு எபிசோடுகள்

ருவான் நினான் சூ என்ற நாடக நடிகைக்கும், ராணுவ வீரனுக்கும் உருவாகும் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.

ருவான் என்ற நாடக நடிகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி கனவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில், ருவான் மாஃபியா கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை, அந்த குழுவில் கருப்பு ஆடாக இருந்த ராணுவ அதிகாரி லீ, காப்பாற்றுகிறார். அதேசமயம் கப்பலில் நடைபெறும் விபத்தில் அவர் இறந்துபோகிறார். அதாவது, ருவான் அப்படி நினைத்துக்கொள்கிறார்.

 ருவானுக்கு, ராணுவ அதிகாரி தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் அவரை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த பூச்செடியை தொட்டியில் வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கிறார். இறந்துபோய்விட்டார் என மனது சொன்னாலும், அதே மனதின் இன்னொருபகுதி அப்படி நடந்திருக்காது என கூறுகிறது.

பின்னாளில் ருவான், தனது வெய் குழுவினரின் நாடகத்திற்காக முன்னணி விளம்பர மாடல் ஒருவரை அழைக்கப் போகும்போது அவருக்கு பாதுகாவலராக இருப்பவர், ராணுவ அதிகாரி லீ சாயலில் இருப்பதைப் பார்க்கிறாள்.

ஆனால்,அவர் தனக்கும் ருவானுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல நடந்துகொள்கிறார். விஐபிகளுக்கு பாதுகாவலராக இருக்கும் அவரது பெயர் லீ டெங். உண்மையில் லீக்கும் லீ டெங் என்ற இருவருக்கும் உள்ள தொடர்பு என்ன, இருவரும் ஒருவர்தானா, ருவானின் காதல் என்னவானது, லீ டெங்கின் வாழ்க்கையில் உள்ள மர்மம் என்ன என்பதை நிதானமாக பதினாறு எபிசோடுகளில் சொல்லி முடிக்கிறார்கள்.

லீ, லீ டெங் என்ற பாத்திரங்களில் நடித்துள்ள நாயகனுக்கு முகபாவனைகள் எல்லாம் பெரிதாக கிடையாது. ருவானை மிரட்டுவது போல பார்ப்பது, முடிந்தவரை பேசாமல் இருப்பது, தீவிரமாக சண்டை போடுவது என நிறைய பணிகள் உள்ளன. அதனால், நடிப்பது என்பதை ருவான் என்ற நாயகியும் அவளது தோழியும், பார்த்துக்கொள்கின்றனர்.  இதில், காதல், பொறாமை, குடும்ப பாசம், நண்பனின் குடும்பத்தை பாதுகாப்பது, டேட்டிங் என நிறைய சமாச்சாரங்களை பேசியிருக்கிறார்கள்.  

கப்பல் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட மாஃபியா குழுவில் பலரும் இறந்துபோகிறார்கள். அதிலிருந்து தப்பிய சிலர், லீயைக் கொல்ல சீனாவுக்கு வருகிறார்கள். அவனைப் பிடிக்க ஒரே துருப்புச்சீட்டு, ருவான்தான். எனவே, அவளது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகிறது.

அவளை லீ டெங் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே பெரும்பாலான காட்சிகளாக இருக்கிறது. நாயகனை புத்திசாலியாக காட்ட நாயகியின் இயல்பான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் காட்சிகளைக் கூட மெல்ல குறைத்திருக்கிறார்கள்.

அனேகமாக ருவானை கள்ளங்கபடமற்ற இயல்பு கொண்டவராக உருவாக்க நினைத்திருக்கலாம்.  ருவானின் பெற்றோர் வரும் காட்சிகள் நகைச்சுவை இல்லாத குறையைத் தீர்க்கின்றன. எப்படியாவது மகள் பிளைண்ட் டேட் போயாவது ஒருவனை திருமணம் செய்துகொள்வாளா என அவர்கள் ஏங்குகிறார்கள். இந்த நிலையில் லீ டெங், ருவானின் வாழ்க்கையில் வர ருவானின் பெற்றோருக்கு மகிழ்ச்சியாகிறது.  இதை அவர்கள் தங்கள் உடல்மொழி வழியாக வெளிப்படுத்துவது நன்றாக இருக்கிறது.

நாயகனை விட அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஜியாங் ஹோ, தன் மன உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துபவராக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு காதலியாக ருவானின் பணக்கார தோழி வருகிறார். தனது உணர்வுகளை வெளிப்படையாக கொட்டிவிடும் பாத்திரம். அழகான ஆண் என்றால் வீ சாட் எண் கேட்கும் அளவுக்கு காதல் பைத்தியமாக இருக்கிறார். ஜியாங் கோவை காதலிக்கத் தொடங்கி அவரது மகளின் அன்பை பெற முயலும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

தொடரின் இறுதியில் வரும் சண்டைக்காட்சி பெரிதாக ரசிக்கும்படி இல்லை. லீ டெங்குடன் இருக்கும் பெண்களை மட்டும் கொன்றுவிடும் திட்டத்துடன் வரும் மாஃபியா கேங்கின் கிராஸ் போ வில்லி, உடை, நடை தவிர நடிப்பில் எதையும் சாதிக்கவில்லை. அவர் ஏன் லீ டெங்கை விரட்டுகிறார், ருவானை கொல்ல நினைக்கிறார் என்பதை விளக்கமாக சொல்ல முயன்றிருக்கலாம். அவரது காதல் காரணமும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

தொடரில் நடைபெறும் லீ டெங் தொடர்பான சம்பவங்களில் காவல்துறை தலைகாட்டுவதே இல்லை. இறுதியாக அவர்களை வரவைத்து எண்ட் கார்ட் போட்டிருக்கிறார்கள். நகருக்குள் மாஃபியா கேங் வந்து பல்வேறு மோசமான வேலைகளை செய்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி காவல்துறைக்கு எந்த தகவலும் தெரியவில்லை. நாயகன் லீ டெங் பென் ட்ரைவிலுள்ள தகவலை டீகிரிப்ட் செய்துகொடுத்ததும் குற்றவாளிகளை பிடிக்கிறார்கள். என்ன ஒரு சாமர்த்தியம்? நாயகனின் கால்ஷீட்டை வாங்க இயக்குநர் அரும்பாடு பட்டிருப்பார் போல. நிறைய காட்சிகளில் அவரை யாராவது ஒருவர் போற்றிப் பிலாக்கணம் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். காட்சிக்கும், வசனத்திற்கும் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா இயக்குநர் சார்?

ருவானுக்காக பார்க்கலாம். வேறு எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

கோமாளிமேடை டீம்

நன்றி யூட்யூப்

------------------------------

Director: Ming Yan
Screenwriter: Zhong Zu Yao
Genres: Action, Thriller, Romance, Drama

கருத்துகள்