வழக்குரைஞர் பத்மலட்சுமி ஜெயாமோகன், கேரளா





கேரளத்தில் சாதித்த முதல் பால்புதுமையின வழக்குரைஞர்

கேரளத்தில் தினக்கூலி தொழிலாளரான மோகன் என்பவரின் மகள், பத்மலட்சுமி ஜெயாமோகன். இவர், பால்புதுமையின இனக்குழுவைச் சேர்ந்தவர். தான் யார் என்பதை அடையாளம் கண்டு பெற்றோருக்கு முதலிலேயே கூறிவிட்டார். பிள்ளை கூறியதைக் கேட்டு அவர்களும் அடித்து உதைக்காமல் ஆதரவாக இருந்த  காரணத்தால் இப்போது வழக்குரைஞராகி இருக்கிறார்.

இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பத்மலட்சுமியின் பெற்றோர், தனது மகளின் இயல்பை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டதுதான். தங்களது மகளைப் பற்றி அறிய அதுதொடர்பாக இணையத்தில் நிறைய தேடி அறிந்துகொண்டனர். கூடுதலாக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றிருக்கின்றனர்.

பெற்றோர் இந்தளவு ஆதரவாக இருந்தாலும் சுற்றமும், நட்பும், கல்விக்கூடமும், சமூகமும் அந்தளவு கரிசனம் காட்டவில்லை. இயல்புக்கு மாறான வினோதம் என்று பல்வேறு விஷ வார்த்தைகளை வசைகளை சொல்லி திட்டினாலும் இணையத்தில் உள்ளவர்கள் எதிர்மறை தன்மையை உருவாக்கினாலும் பத்மலட்சுமி ‘’நான் அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளப்போவதில்லை ஒருவர் வேலையில்லாமல் இணையத்தில் உளறிக்கொட்டுவதையெல்லாம் தான் கேட்டு கவலைப்படவேண்டுமா?’’  என தனது மேம்பாட்டில் உறுதியாக இருந்திருக்கிறார்.

பத்ம லட்சுமி பொது வழக்குரைஞர் அனுமதித் தேர்வு எழுத வழக்குரைஞர் அப்துல் ஹக்கீம் உதவியாக இருந்திருக்கிறார்.  எர்ணாகுளத்தில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் உட்கார்ந்து படித்திருக்கிறார். ‘’அமைதியான இடம், தொந்தரவு இல்லை என்பதால் அங்கு உட்கார்ந்து படித்தேன்’’ என்று கூறுகிறார்.

வழக்குரைஞர் ஆனாலும் தான் கல்வி கற்பதில் சராசரிக்கும் கீழேதான் என வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் பத்ம லட்சுமி. அண்மையில்தான் கேரள வழக்குரைஞர் ஆணையத்தில் வழக்குரைஞராக பணியாற்ற தனது பெயரை பதிவு செய்திருக்கிறார்.

 பத்மலட்சுமி குடும்பத்தில் மூன்று பிள்ளைகள். தந்தை மோகன், மூவருக்கும் கல்வி பயில நிறைய கஷ்டங்களைப் பட்டிருக்கிறார். பத்மாவின் வழக்குரைஞர் படிப்புக்கு தன்னார்வலர்கள் பலரின் உதவியைப் பெற்றிருக்கின்றனர்.

2018ஆம் ஆண்டு, தேசிய மனித உரிமை கமிஷனின் ஆய்வுப்படி, 96 சதவீத பால்புதுமையினர் இனக்குழுவினருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. 92 சதவீத பால் புதுமையினருக்கு, பொருளாதார சுதந்திரமும், அதில் பங்களிக்கும் வாய்ப்பும் அரிதாக உள்ளது. தமிழ்நாட்டில், தலித் சாதியைச்  சேர்ந்த பால்புதுமையினரான பெண், மேலதிகாரியால் சாதி , பாலினம் சார்ந்த துன்புறுத்தால் பாதிக்கப்பட்டு தனது பணியை கைவிட்டது நினைவுக்கு வருகிறதா? இதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.

பத்மலட்சுமி தனது வாழ்வில் நெடுக நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர் சொன்ன வார்த்தைகள் அதற்கேற்பவே உள்ளன. ‘’என் பெற்றோர் அசாதாரணமானவர்கள். எனது அப்பாவால் பிறரின் வலியை மனப்பூர்வமாக உணர முடியும். நான் அவர்களைப் போல அசாதாரணமான மனிதர்களாக கருதப்பட வாழ விரும்புகிறேன். சாதாரண மனிதர்களாக அல்ல’’

பால் புதுமையின இனக்குழுவினருக்கும் பெண்களுக்கு உள்ளதைப் போல வல்லுறவு தடுப்பு சட்டங்கள் தேவை என பத்மலட்சுமி கருதுகிறார். உண்மையான சவால்கள் எதிர்காலத்தில் அவருக்கு நிறைய காத்திருக்கின்றன. 


பிரியா ரமணி

இந்து

ஆங்கிலக்கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

படங்கள் - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ்கிளிக்

கருத்துகள்