மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் - உணவை ஐம்புலன்களால் உள்வாங்கி உண்ணும் முறை!

 

 





கவனம் ஒருமித்த உணவு உண்ணும் முறை – மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங்

காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு உண்கிறோம். ஆனால் உணவை எந்தளவு கவனித்து உண்கிறோம் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. இதனால், ஒரு வாரத்தில் என்னென்ன வகையான உணவுகளை எப்போது, எந்தளவில் சாப்பிட்டோம் என்று தாளில் எழுதச்சொன்னால் நினைவுபடுத்த முடியாமல் தவித்துப்போய்விடுவோம்.

இதற்கு காரணம், சாப்பிடும்போது டிவி அல்லது ஓடிடியில் படம் பார்ப்பது, ஸ்பாடிபையில் பாடலை ஒலிக்கவிட்டு சாப்பிடுவது, நூல்களை படித்துக்கொண்டே சாப்பிடுவது  என நிறைய கவனத்தை சிதைக்கும் விஷயங்கள் உள்ளன.

 இதன் விளைவாக, உணவு உண்ணும் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, உணவின் அளவு கூடி, நாளடையில் உடல்பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோய், இதயநோய் பிரச்னைகள் எழுகின்றன.

கவனம் ஒருமித்த உணவுமுறையில் உணவை எப்படி சாப்பிடுவது?, தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு அதன் வாசனையை முகர்ந்து பார்ந்து மிக நிதானமாக அதை உண்ணவேண்டும். இந்த நேரத்தில் ஒருவர் உணவைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். ஐம்புலன்களாலும் உணவை உணர்ந்து சாப்பிட்டால், அதிக உணவை சாப்பிட வேண்டியிருக்காது. பசியும் சில கவள உணவிலேயே தீர்ந்துவிடும்.

முதலில் உணவை குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடும் வழக்கம் இருந்தது. இன்று வேலை பரபரப்பு காரணமாக, தனியாக அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டே அல்லது வேறு ஏதோ சிந்தனைகளை மனதில் நினைத்துக்கொண்டே சாப்பிடுகின்றனர். இதனால் உணவின் இயல்பு, உணவின் அளவு, அதை எந்தளவு மென்று சாப்பிட்டோம் என்பது கூட சாப்பிடுபவர்களுக்கு தெரியவில்லை. இப்படி மெல்லாமல் விழுங்கிச் சசாப்பிடும் உணவு, இரைப்பைக்கு சென்று செரிமானம் ஆகாமல் உடலைக் கெடுக்கிறது. உணவு விஷமாவது இப்படித்தான்.

 கவனம் குவித்த உணவு முறை, ஒருவரின் பசிக்கு ஏற்றபடி உணவின் அளவை கணக்கிட்டு சாப்பிடுவது… இந்த வகையில் சாப்பிடுவதற்கான உணவுவகைகளை நீங்கள் இணையத்தில் தேடிப்பெறலாம். எப்படி சாப்பிடுவது என்பதையும் விளக்கமாக கூறியிருப்பார்கள். பசியைக் கட்டுப்படுத்தி, என்ன உணவுப்பொருளை, எந்த அளவில் சாப்பிடுவது ஆகியவற்றையும் வரையறை செய்யலாம். இதன்மூலம் உடல்நலம் கெடாது.

தன்னுணர்வுடன் உணவை உண்ண முயன்றால், அதன் மீதான வேட்கையை எளிதாக கட்டுப்படுத முடியும். பசியைக் கட்டுப்படுத்துவது முக்கியமான அம்சம். இந்த வகையில் கொழுப்பு நிறைந்த உடல்நலனைக் கெடுக்கும் உணவு வகைகளை எளிதாக கட்டுப்படுத்தி குறைக்கலாம். ஒருவரின் உடல் எடை கட்டுக்குள் வரும். மனதின் எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவற்றுக்கு பெரும் ஆற்றல் உள்ளது. மகிழ்ச்சியாக, சோகமாக இருக்கும்போது ஒருவர் சாப்பிடத் தொடங்கினால் இயல்பான அளவை விட உணவு கூட வாய்ப்புள்ளது. கவனம் குவித்த உணவுமுறையில், நிதானமாக உணவை ருசித்து, வாயிலிட்டு மென்று சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒயினை சுவைத்து பார்ப்பதை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதேபோலத்தான் உணவை முகர்ந்து பார்த்து நிதானமாக சிறு விள்ளல்களாக சாப்பிட வேண்டும். பார்வை, ஒலி,வாசனை, உணர்வு, சுவை என நிதானமாக உள்வாங்கி உண்ண வேண்டும்.

சாக்லெட் பிராண்டை  வாங்கி உண்கிறீர்கள் என்றால், ஏன், எதற்கு என்ற  கேள்விகளைக் கேட்கவேண்டும். ஊட்டச்சத்து, சுவை, ஆகியவற்றுக்காக அதை சாப்பிடுகிறோமா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். அனைத்து உணவு பொருட்களுக்கும் இதே கேள்விகளைக் கேட்டு பதில் பெறுவது அவசியம்.

உணவு, பூமியிலிருந்து பெறப்படுகிறது. நிலத்தில் விளைவிக்கப்படும் தானியங்களிலிருந்து உணவு உருவாகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கு பெறுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் நீங்கள் நன்றி கூறி, உணவை உண்ணவேண்டும். உணவு பரிமாறப்பட்டபிறகு இறைவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்திப்பது போன்ற முறைதான். இதெல்லாம் மனப்பூர்வமாக உங்களுக்கு இணக்கமாக இயல்பில் இருந்தால் செய்வது நல்லது. சொல்லிவிட்டார்களே என நிர்பந்தத்தில் செய்தால் வாழ்க்கையில் எந்த விளைவும் ஏற்படாது.

 டைம் வார இதழில் மார்கம் ஹெய்ட், அலிஷா சைபெர்ட்ஸ் ஆகியோர் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

image - wikimedia commons

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்