ஆர்டர் செய்த ஹேர் ஆயிலுக்கு பதிலாக மும்பை கேங்ஸ்டரின் துப்பாக்கி பார்சலில் வந்தால்... ஹீரோ - தெலுங்கு

 













ஹீரோ

தெலுங்கு

இசை ஜிப்ரான்

இயக்கம் ஶ்ரீராம் ஆதித்யா

 

மகேஷ்பாபு குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் நாயகன் நடித்த படம். அர்ஜூன் சினிமா ஹீரோவாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவரது நண்பர் சத்யா, ராப் பாடகர். அர்ஜூன் தனது வீட்டுக்கு அருகில் குடிவரும் சுப்புவை (நிதி அகர்வால்) வலுக்கட்டாயமாக காதலிக்கிறார். பின்னர் அவரும் வேறு ஆப்சனின்றி சம்மதிக்கிறார். சுப்பு, கால்நடை மருத்துவராக இருக்கிறார். எங்கே, அர்ஜூனின் அப்பா வேலை செய்யும் இடத்தில்தான். படம் தொடங்கி அரைமணிநேரம் ஜாலியாக செல்கிறது. அதற்குப் பிறகுதான் கதையே தொடங்குகிறது.

அர்ஜூனுக்கு சினிமா ஹீரோவாகும் வாய்ப்பு தள்ளிப்போகிறபோது, தலைமுடி வேறு கொட்டுகிறது. இதை அவரது காதலியே சொல்லி வருத்தப்படுகிறார். இதனால், வெண்ணிலா கிஷோர் டிவியில் விளம்பரம் செய்யும் சீன ஹேர் ஆயிலை வாங்க ஆர்டர் செய்கிறார் அர்ஜூன். 

ஆனால், அவருக்கு வரும் பார்சலில் துப்பாக்கி இருக்கிறது. இதனால் பதற்றமாகும் நாயகன், அவரது ராப் பாட்டு நண்பனைக் கூட்டிக்கொண்டு வந்து நிலையை சொல்லுகிறார். ஆனால் அவர் அப்போதுதான் மதுபானக்கடையிலிருந்து வருவதால், துப்பாக்கி என்பதே அவருக்கு ஹேர் ஆயில் பாட்டில் போல தெரிகிறது. இருவருக்கும் நேரும் களேபரத்தில் துப்பாக்கி குண்டு, செக்ஸ் சாடிஸ்டும் காம காளையுமான இன்ஸ்பெக்டர் வயிற்றில் பாய்கிறது. இரவு நேரத்திலும் காவலர்களுடன் ரோந்து வந்தவர், இளம்பெண்ணை மானபங்கம் செய்ய நினைத்த நேரத்தில் தோட்டா பாய்கிறது. காவல்துறை ஆட்களையே சுட்டுவிட்டார்கள் மொத்த காவலர்களும் ஆக்ரோஷத்தில் இருக்கிறார்கள்.

அதேநேரம் இன்னொரு மாஃபியா குழுவுக்கு துப்பாக்கிக்கு பதிலாக அர்ஜூனின் ஹேர்ஆயில் போய் சேருகிறது. அவர்கள் பார்சல் கம்பெனிக்கு சென்று அர்ஜூனின் வீட்டு அட்ரஸை வாங்கிக்கொண்டு அவனைத் தேடி வருகிறார்கள். அதேநேரம், இரண்டாம் முறையாக அட்ரஸ் மாறி வரும் பார்சலில் யாரைக் கொல்ல வேண்டுமென்ற நபரின் புகைப்படம் இருக்கிறது. அது வேறுயாருமில்லை, அவருக்கு தனது பெண்ணை மணம் செய்துதர மறுத்த மாமனாரின் புகைப்படம்தான் அது. இந்த நிலையில் எப்படி நாயகன் தனது காதலியின் அப்பா, அதாவது வருங்கால மாமானாரைக் காப்பாற்றினார், சினிமா கனவை சாதித்தார், அடிவயிற்றில் சுடப்பட்ட காமக்காளையான இன்ஸ்பெக்டரிடமிருந்து தப்பினார்,, துப்பாக்கியைத் தேடும் மாஃபியா குழுவிடமிருந்து தப்பியது எப்படி என பல்வேறு விஷயங்கள் ஒன்றாக இணையும்படி கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஶ்ரீராம் ஆதித்யா.

படத்தில் காமெடியே பிரதானம் என களமிறங்கியிருக்கிறார். அதனால் பார்வையாளர்கள் முகத்தில் சிறு நவ்வு எப்போதும் இருக்கவேண்டும். குறையவே கூடாது. மற்றதையெல்லாம் நாயகன் அசோக் கல்லா பார்த்துக்கொள்வார். படத்தில் மைம் கோபி நன்றாக நடித்திருக்கிறார். அவர், அர்ஜூனின் பெற்றோருக்கு கதை சொல்லும் காட்சி நன்றாக வந்திருக்கிறது. நிதி அகர்வால் நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. பாடல்களுக்கு வந்துவிடுகிறார். நடனம் ஆடுகிறார்.

 ஜெகதி பாபுவை முதலில் வில்லன் போல காட்டி பிறகு அவரை கோமாளியாக்கி இருக்கிறார்கள். மனிதர் எந்த பாத்திரத்திலும் தயங்காமல் நடிக்கிறார். பாராட்டவேண்டும்.

படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் சினிமா பற்றிய பெருமை பேசுகிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. ஜெகதி பாபு, மத்திய வயது கொண்ட சலீம் பாய் என்ற மும்பை கேங்ஸ்டர் பற்றிய படத்தில் நடிக்க நினைக்கிறார். ஆனால் அவரது கனவு கலைந்து போகிறது. கூடவே, போலீஸ், மாஃபியா குழுக்களின் பிரச்னையிலும் மாட்டுகிறார். ஜிப்ரானின் இசை பாடல்களில் கும்மாளமாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் பிம்பத்தோடு நாயகன் ஜூம்மாரே என ஆடும் பாடல் அட்டகாசம். 

 ஒருவரின் நிறைவேறாத சினிமா கனவை காமெடியாக காட்டுகிறார்கள். நமக்கு காமெடியெல்லாம் சரி. ஆனால் அவருக்கு அது வேதனைதானே? அதை  வெறுமனே காமெடியாக எப்படி பார்ப்பது? தனது குடும்பத்தின் நலனுக்காக சொந்த  கனவை, லட்சியத்தை தியாகம் செய்தவனின் வலி போலவே பார்க்க முடிகிறது. உண்மையில் படத்தை நகைச்சுவையோடு கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த வேகத்தில் கதை எங்கோ தொலைந்து போய்விட்டது. கதையில் நாயகனின் பார்வைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால், பிற பாத்திரங்களின் வடிவமைப்பு மழுங்கிப்போய்விட்டது.

 

கோமாளிமேடை டீம்  

 

 

 

 


கருத்துகள்