லவ் அலாரத்தை ஆன் செய்து லவ் மேப்பை அப்டேட் செய்யலாம் - நீங்க ரெடியா?

 
















தம்பதிகளுக்கு இடையே மௌனமான பிரிவு உருவாகிறதா? – தீர்வு என்ன?

காதலிக்கும்போது ஒருவரைப் பற்றிய பிடித்தது, பிடிக்காதது, என தெரிந்துகொள்பவர்கள் மணமானபிறகு பல்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து காதலை பின்தள்ளிவிடுகிறார்கள். இதற்கு, பெற்றோரைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது என ஏராளமான காரணங்களைக் கூறுகிறார்கள். உண்மையில், கணவன், மனைவி என இருவரும் சற்று முயற்சி எடுத்தால் அவர்களின் மனதிலுள்ள லவ் அலாரத்தை ஒலிக்க வைக்க முடியும். இதற்கு இருவரும் ஒரே சமயத்தில் தங்களை சற்றே மாற்றிக்கொண்டு முன்னே அடியெடுத்து வைக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்….

காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக மாறியவர்கள் கூட காதல் என்பதை முழுக்க ஒழித்துவிட்டு ஏதோ பிள்ளைகளுக்காக ஒரே வீட்டில் ஒரே படுக்கை அறையில் வாழ்வதாக சூழல் மாறிவருகிறது. இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை காரணம் என்று மட்டும் காரணம் சொல்லி தப்பிவிட முடியாது. இந்த பரபரப்பிலும் அவரவருக்கு பிடித்த விஷயங்களை விடாமல் செய்துகொண்டுதானே இருக்கிறோம். பிறகு, காதலில் மட்டும் ஏன் பஞ்சம், பற்றாக்குறை ஏற்படுகிறது?

மணமாகி தேனிலவு காலம் முடிந்தபிறகு கணவன், மனைவி இருவரும் தங்கள் உறவை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். மனப்பூர்வமான ஒன்றிணைவு இல்லாமல் நட்பை, இணக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.

இப்படி மணமாகி ஒன்றாக இருந்தாலும் மனத்தளவில் வெகு தொலைவில் இருப்பதை ‘சைலன்ட் செபரேஷன்’ என குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் அறையை பகிர்ந்துகொண்டு வாழும் ரூம்மேட்கள் போலத்தான் வாழ்க்கை இருக்கும். தேவைகளைப் பொறுத்தவரை ஒப்புக்கு நிறைவேற்றிக்கொண்டு வாழ்வார்கள். அன்பில்லாமல் வறண்டுபோல இயல்பிலான வாழ்க்கையை. கசப்பைப் பொறுத்துக்கொண்டு வாழ்வதுதான் இதன் உண்மையான பொருள். ஏன் இப்படி வாழ வேண்டும்? பிள்ளைகள் வந்துவிட்டார்கள். எனவே, அவர்களுக்காக தங்களை தாங்களே வெறுத்துக்கொண்டு ஒன்றாக வாழ்கிறார்கள்.

ஆரஞ்ச் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாயகி தனது அம்மாவிடம் ‘’அப்பாவை நீ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட, அப்போ இருந்தது மாதிரியே இப்போ அப்பாவை காதலிக்கிறியாம்மா? என்பதற்கு, அவள் அம்மா, முதலில் காதல் இருந்தது. இப்பவும் அப்படி நினைச்சுக்கிட்டே வாழ்ந்துக்கிட்டே இருக்கேன். காதல் இல்லைனாலும் நீங்க எல்லாம் வந்துட்டீங்க இல்ல’’ இதுதான் இந்த கட்டுரையில் நான் கூற விரும்பிய விஷயம். காதல் இருந்து வற்றிப்போனபிறகு அந்த நினைவை நினைத்துக்கொண்டுதான் பலரும் வாழ்கிறார்கள். ஆனால் அது உண்மையான வாழ்க்கை அல்ல. போலித்தனமான இயல்பு.

காதலித்து திருமணம் செய்தாலும், பெற்றோர் பார்த்து திருமணம் செய்தாலும் நாம் உயிருள்ள ஒருவரோடு வாழ்கிறோம். ஆனால் நம்மில் பலரும் தம் தேவைகளை தீர்த்துக்கொண்ட பிறகு,  உடன் வாழ்பவர்கள் என்றாலும் கூட பொருட்களைப் போல நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதை சுரண்டல் என்றுதானே கூறவேண்டும். சுரண்டல், நச்சுத்தன்மை நிறைந்த சூழல் என்றால் அதைக் களைந்துவிட்டு வேறு வழிகளை நோக்கி நகர்வது முக்கியம்.

காதல் இல்லாத  மௌனம் நிறைந்த சூழலை எப்படி உடைப்பது? இருவரும் பரஸ்பரம் ஒருவரோடொருவர் நேரத்தை செலவழிப்பது முக்கியம். ஒன்றாக உட்கார்ந்து டீ அல்லது காபி குடிப்பது, பேசவில்லையென்றாலும் பிடித்த விஷயங்களை ஒன்றாக உட்கார்ந்து செய்யலாம். இதெல்லாம் நீண்டகால நோக்கில் உணர்வு ரீதியான ஒட்டுதலை, நட்பை உருவாக்கும். இதில், அதிக நேரம் என்பதை விட எந்தளவு உணர்வுரீதியான ஒன்றிணைப்போடு ஒத்திசைவாக சூழலில் இருக்கிறோம் என்பது முக்கியம்.

நீண்டகாலமாக காதல் இன்றி ஒன்றாக வாழும் தம்பதிகள், தங்களுக்குள் நெருக்கமான உரையாடல் இல்லாதவர்களுக்கு மேற்சொன்ன விஷயம் பயன் அளிக்கும். எதுவாக இருந்தாலும் இருவரும் மனம்விட்டு பேசுவது, ஒருவருக்கொருவர் பிடித்த விஷயங்களை அறிந்து நிறைவேற்றுவது, வீட்டு வேலைகளை இணைந்து செய்வது என சில சமாச்சாரங்களை செய்வது முக்கியம்.

கணினி இருக்கிறது. அதை பல்லாண்டுகளாக பயன்படுத்துகிறீர்கள். அதிலுள்ள மென்பொருள், வன்பொருள் என பலவற்றையும் மாற்றி மேம்படுத்தினால்தான் நன்றாக திறனுடன் உழைக்கும். காதலுக்கும் இது பொருந்தும். எனவே, நட்பாக இருந்து காதலாகி கசிந்துருகி நெருக்கமான உறவு வளர்த்து மணம் செய்தவர்கள் தங்கள் காதலையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இப்படி தங்கள் காதலை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்திக்கொள்வதை அமெரிக்க உளவியலாளர் ஜான் காட்மேன் லவ் மேப் என்று குறிப்பிடுகிறார்.

ஒருவரின் மூளையில் அவரது காதலி, மனைவி பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும். இதில், அவரின் ஆர்வம், ஆசை, பேராசை, காதல், பிடித்த பாட்டு என அனைத்துவித தகவல்களும் இருக்கும். இந்த தகவல்களை ஒருவர் தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள அவர், தனது காதலி, காதலுடன் காதல் கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது லவ் மேப் எப்படி மேம்பட்டு, காதல் பூ மலரும்? அமெரிக்க உளவியலாளர் ஜான் காட்மேன், ஏராளமான திருமணமான தம்பதிகள் பற்றி நாற்பது ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து ள்ளார்.

எனவே, தம்பதிகள் முடிந்தவரை தங்களுக்குள் காதலை பகிர்ந்துகொள்ளுங்கள். அதுதான் வாழ்க்கையை அற்புதமாக்கும். காதலை அஸ்திவாரமாக்கினால்தான் வாழ்க்கை கட்டுமானம் நிலையாக நிற்கும். எத்தனை மீட்டருக்குள் உங்கள் காதலி/மனைவி இருக்கிறார் என பார்த்து லவ் அலாரத்தை ஆன் செய்து லவ் மேப்பை அப்டேட் செய்யுங்கள்.

 டைம்ஸ் ஆஃப் இந்தியா

images - pinterest

 

 

கருத்துகள்