நுண்கடன் நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கும் ஏழைப் பெண்கள்! - மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரத்தில் பெருகும் தற்கொலைகள்!

 





கடன்

நுண்கடன் 







கடன்வலையில் மாட்டித் தவிக்கும் மகாராஷ்டிரா விவசாய கூலித் தொழிலாளர்கள்

கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, குறைந்தளவிலான கடன் வழங்கும் முறைக்கு நுண்கடன் என்று பெயர். இதை தொடங்கி வைத்தவர் நோபல் பரிசு பெற்றவரான சமூக செயல்பாட்டாளர், முகமது யூனூஸ். இவர், 1983ஆம் ஆண்டு வங்கதேசத்தில் கிராம மக்களுக்கு நுண்கடன்களை வழங்கும் கிராமீன் வங்கியைத் தொடங்கி நடத்தினார். இந்த ஐடியாவை பின்பற்றி உலகமெங்கும் ஏராளமான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தோன்றின.

இந்தியாவில் உருவான நுண்கடன் நிறுவனங்கள், கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், தினக்கூலி மக்களுக்கும் கடன்களை வழங்கினர். இப்படி வழங்கப்படும் தொகை முப்பது ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை கடன்  வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி 30 சதவீதமாக உள்ளது. வட்டியை வாரம், பதினைந்து நாட்கள், மாதம் என பிரித்து வசூலிக்கிறார்கள். நுண்கடன் விவகாரம், வங்கதேசம் போல இந்தியாவில் வெற்றிகரமாக அமையவில்லை.

மகாராஷ்டிராவில் காலநிலை மாற்றத்தால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை என்பது நிலையாக இல்லை.  இந்த முறையில் பெண்களுக்கு அதிகளவில் கடன்களைக் கொடுத்து கடன்வலையில் சிக்க வைத்து அவர்களை வட்டி கட்டச்சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள்.

உண்மையில் கடனைக் கொடுக்க கூடாது என்று பெண்கள் யாரும் நினைக்கவில்லை. சூழல் நெருக்கடிகள் அவர்களையும் அப்படி சிக்க வைத்துவிட்டன. வீட்டில் பெண்கள் கடன் வாங்குகிறார்கள் என்றால், ஆண்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் பங்கிற்கு கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி சிரமப்படுகிறார்கள். அவர்களும் தினக்கூலிகளாகவே இருக்கிறார்கள். எனவே, வேறுவழியில்லை பெண்கள் குடும்பத்திற்காக நுண்கடன் வாங்கி பாரம் சுமக்கிறார்கள்.

தனியாக விவசாய கூலித்தொழிலாளிகள் மட்டுமில்லை. மகளிர் சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள் கடன் வாங்கினாலும் நுண்கடன் நிறுவனங்களின் நெருக்கடியை சமாளிக்க முடியாது. ஒரே அமைப்பு என்பதால், சக பெண்களை வைத்து கடன்களை கொடுக்கச்சொல்லி, வட்டியைக் கட்டச்சொல்லி மிரட்டல்களின் வடிவம் மாறுகின்றன.

ரிசர்வ் வங்கி, அதிகளவு வட்டி வசூலிக்குமாறு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காத நிலையில் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடு மெல்ல வரம்புமீறி சென்றுகொண்டிருக்கிறது. பொதுவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மாவட்டத்தில், இப்படி கடன் பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு, நுண்கடன்களை வழங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இப்படி கடன்களைப் பெற்று தொழில் செய்பவர்களை உலக வங்கி ‘மைக்ரோஎண்டர்ப்ரீனர்’ என்று அடையாளப்படுத்துகிறது.  

விதர்பாவில் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். இந்த வகையில் நுண்கடன்களைப் பெற்ற பெண்கள் தற்கொலை செய்வதற்கான சூழல் கூடி வருகிறது. 2021ஆம் ஆண்டு மார்ச் 31 படி, நுண்கடன்களின் அளவு 82.89 லட்சமாக இருந்து 2022ஆம்ஆண்டு மார்ச் 31 படி, 91.66 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை நுண்கடன் அமைப்பு சங்கம் வெளியிட்டுள்ளது. மேற்சொன்ன நுண்கடன் அளவு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டுமேயானது.

இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நுண்கடன்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.2010ஆம் ஆண்டு, அதிக வட்டியுடன் கொடுத்த கடனை திருப்பிக்கேட்டு மிரட்டியதால் ஆந்திரத்தில் இருநூறு பேர் தற்கொலை செய்துகொண்டனர்.  மகாராஷ்டிரத்தை அடுத்து பஞ்சாப்பிலும் நுண்கடன் சார்ந்த தற்கொலைகள் தொடங்கியுள்ளன.

இலங்கையில் ஏற்கெனவே நுண்கடன் சார்ந்த தற்கொலைகள் அதிகரித்த காரணத்தால், அங்கு இத்தகைய கடன்களை வழங்குவதை நிறுத்திவைக்கலாம்  என அரசியல் கட்சிகள் யோசித்து வருகின்றன. நுண் கடன் என்ற சிந்தனையை தவறு என்று கூற முடியாது. ஆனால் அதை எப்படி நடைமுறைபடுத்துகிறார்கள். கண்காணிப்பு அமைப்புகள், இதன் நடைமுறைப் ப்பிரச்னைகளை கண்காணித்து சீர் செய்தார்களா இல்லையா என்பதில்தான் அனைத்துமே அடங்கியுள்ளது. இந்தியாவில் நுண்கடன் முறையை ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்தினாலும் அதை முறையாக கண்காணிக்கவில்லை. எனவே, நுண்கடன் என்ற கடன் கொடுக்கும் முறை, மக்களின் உயிரைப் பறிக்கும் தூக்கு கயிறாக மாறியுள்ளது.

இந்து நாளிதழில் குணால் புரோகித் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

images - Creative commons

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்