கொலை வழக்குகளைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவும் பல்கலைக்கழக மாணவன்! டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி!
டோன்ட் கால்
இட்ஸ் எ மிஸ்ட்ரி
ஜப்பான் டிவி
தொடர்
சீசன் 1
இந்த டிவி
தொடர் முழுக்க உளவியல் தொடர்பானது. குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவர் எப்படி உளவியல்
கோட்பாடுகளை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார் என்பதை பல்வேறு வழக்குச் சம்பவங்கள் வழியாக
விளக்குகிறது.
அதிரடியான
திருப்பங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் என்று தொடரில் ஏதுமில்லை. அனைத்தும் நிதானமாக
நடைபெறுகிறது. அதை பல்கலைக்கழக மாணவர் டோட்டனோ குன் கண்டுபிடிக்கிறார்.
பல்கலைக்கழகத்தில்
படிக்கும் டோட்டனோ குன், சமூகத்தின் விதிகளுக்கு அதிகம் பொருந்தாத ஆள். அகவயமானவர்
என்பதால், நூல்களை வாசிப்பது, பிடித்த உணவுகளை சமைத்து ரசித்து சாப்பிடுவது, ஓவியக்
கண்காட்சிகளுக்கு செல்வது என வாழ்ந்து வருகிறார். அவருக்கு நண்பர்களே கிடையாது. பெண்
தோழியும் இல்லை.
இப்படி வாழ்பவர்
வாழ்க்கையில் கொலை வழக்கு குற்றச்சாட்டு வருகிறது. ஒருநாள் தனது. அறையில் சமைத்து சாப்பிடத்
தயாரானவரை காவல்துறையினர் வந்து அவரது பல்கலையில் படிக்கும் வசதியான மாணவரை கொலை செய்துவிட்ட
குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். முறையான அரஸ்ட் வாரண்ட கூட கிடையாது. கூட்டிபோய்
மிரட்டி அவரை குற்றவாளி என நம்ப வைக்கலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால், டோட்டனோ
குன் அவனது உளவியல் சார்ந்த திறமையால் அங்குள்ள காவலர்களிடம் பேசி அவர்களின் உளவியல்
ரீதியான நம்பிக்கையை உடைத்து அவர்கள் மூலமே ஆதாரங்களை சேகரித்து அவன் குற்றவாளி அல்ல
என நம்ப வைக்கிறான். தன்னம்பிக்கை இல்லாமல் பிறரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருக்கும்
ஃப்யூமிட்சு என்ற பெண் காவலருக்கு தைரியம் கூறும் டோட்டனோ குன், அவளை தனக்கு சாதகமாக
பயன்படுத்திக்கொள்கிறான். பதிலுள்ள அவளது மனதில் இருந்த செல்ல நாய் இறந்துபோன பற்றிய
துக்கத்தை, வேலை பற்றிய வருத்தத்தை பேசி பேசி மெல்ல அகற்றுகிறான். இதனால் ஃப்யூமிட்சுக்கு
அவன் மீது ஒருதலைக் காதல் உருவாகிறது. தொடரில் இந்தப் பெண்தான் டோட்டனோவுக்கான இணை
என்பது போல வருகிறார்.
டோட்டனோ காவல்நிலையத்தில்
அமைதியாக உட்கார்ந்துகொண்டே இன்ஸ்பெக்டர் தன் மீது போட்ட போலி குற்றச்சாட்டை உடைக்கும்
காட்சியும், பேசியே அவரை கரைந்தழுக செய்வதும் அற்புதமான காட்சி. இன்ஸ்பெக்டர் பற்றிய
உண்மைகளை டோட்டனோ சொல்ல சொல்ல அவர் முகம் வெளிறிக்கொண்டே வரும். பழிவாங்கும் வெறியால்
அவரது வாழ்க்கை எப்படி மோசமானது என்பதை டோட்டனோ குன் குரலை உயர்த்தாமல் பேசிக்கொண்டே
வருவான்.
டோன்ட் கால்
இட்ஸ் எ மிஸ்டரி என்ற தொடர் முழுக்கவே, ஒரு மனிதரை ஒருவன் உள்வாங்கி கவனித்து குற்றவாளியா,
இல்லையா, மனநல குறைபாடு கொண்டவனா என கண்டுபிடிக்கிறான் டோட்டனோ குன். இவனது புத்திசாலித்தனத்தை
காவல்துறையில் உள்ள ஃப்யூமிட்சுவும், அவளது சக அதிகாரியும்(யூடோ இகிமோடோ) அறிந்து அவனோடு நட்பாகிறார்கள்.
காவல்துறையினரின் பல்வேறு வழக்குகளை டோட்டனோ குன் நேரடியாக அல்லது மறைமுகமாக தீர்த்து
வைக்கிறான்.
குழந்தைகளை அடித்து உதைத்து சித்திரவதை செய்யும்
பெற்றோர்களை கொல்லும் தொடர் கொலைகாரர் வழக்கு, உயிரோடு புதைக்கப்பட்ட ஓவியரின் தங்கை
பற்றிய வழக்கு, பல்கலைக்கழக பேராசிரியரின் மனைவி கொல்லபட்ட வழக்கு ஆகியவை தொடரில் வசீகரம்
கொண்டவையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
டிவி தொடரில்
பெரும்பாலான விஷயங்கள் அனைத்தும் ஜப்பான் மொழி தொடர்பானவைதான். அதில் உள்ள எழுத்துக்களை
மாற்றி புரிந்துகொள்வது, குறிப்பிட்ட படங்களை வைத்து அதன் அர்த்தம் உணர்வது, குறிப்பிட்ட
நூலில் உள்ள பக்க எண்களை வைத்து ஒரு பெண் பேசும் கருத்தை உள்வாங்குவது என மூளையை கசக்கி பிழியும் வகையில் நிறைய விஷயங்கள் உண்டு.தொடரில்
இதை சுவாரசியமாக ரசிக்கும் வகையில் கூறியிருக்கிறார்கள்.
ஒரு இடத்தை,
மனிதரை இந்தளவு கூர்மையாக கவனித்து விஷயத்தை உள்வாங்கிக்கொள்ள முடியுமா என ஆச்சரியப்படுத்தும்
விதமாக டோட்டனோ குன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். அவர் ஏன் அகவயமானவர் ஆனார்
என்பதை தொடரில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களின் இடையே கூறியிருக்கிறார்கள்.
அதுவே மனதை வருத்தம் கொள்ளச் செய்யும் விதமாக உள்ளது.
மருத்துவமனையில் ரைகா சானுடன் நடைபெறும் சங்கேதக்குறியீடு கொண்ட உரையாடலும், அதைப் பின்பற்றி டோட்டனோ குன் காதல்
வயப்ப்படுவதும் இறுதியாக உண்மை தெரிந்து வேதனை கொள்வதும் சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகள்
மீது பெற்றோர் செலுத்தும் வன்முறை பற்றி இந்தளவு வலிமையாக கூறமுடியுமா என்று தெரியவில்லை.
அனைத்து நடிகர்களும் தொடரில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டோட்டனோ குன்தான் நாயகன். டிவி தொடரின் போஸ்டரில்
அவர்தான் இருக்கிறார். ஆனால், தொடரில் ஏராளமான பாத்திரங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது.
இதனால் இதைப் பார்க்க உங்களுக்கு அந்தளவு சலிப்பு தோன்றாது. ஒரேவிதமான சட்டம், குடும்பம், காவல்துறை வழக்குகள்
என தொடர்களைப் பார்ப்பவர்களுக்கு டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்டரி புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
கோமாளிமேடை
டீம்
நன்றி - ராக்குட்டன் விக்கி ஆப்
Romaji: Mystery to Iu Nakare
Japanese: ミステリと言う勿れ
Director: Hiroaki Matsuyama, Shunsuke Shinada, Hideyuki Aizawa, Hiroyuki Abe
Writer: Yumi Tamura (manga), Tomoko Aizawa
Network: Fuji TV
Episodes: 12
Release Date: January 10 - March 28, 2022
Runtime: Monday 21:00-21:54
TV Ratings: 11.8%
Language: Japanese
Country: Japan
கருத்துகள்
கருத்துரையிடுக