குடும்பத்தின் மரபணு தொடர்பில்லாத, ஆண்மையற்ற ஒருவனின் வாழ்க்கைப் போராட்டம்! ஸ்ட்ராங்கஸ்ட் அபாண்டட் சன் - மங்கா காமிக்ஸ்
ஸ்ட்ராங்கஸ்ட்
அபாண்டட் சன்
200+---
(சீனா) மங்கா
காமிக்ஸ்
தொன்மைக்
காலத்தில் நடைபெறும் போரில், வலிமையான இனக்குழு, ஷே லுயான் எனும் இனக்குழுவைத் தாக்கி
முழுமையாக அழிக்கிறது. இந்த தாக்குதலில் ஒரு மாணவன் மட்டும் தாக்கப்பட்டாலும் உயிரோடு
இருக்கிறான். இந்த போர் நடைபெற்றது கூட அவன் மாஸ்டர் சம்பந்தப்பட்டதுதான். அவனது மாஸ்டராக
உள்ள பெண்மணியை, இன்னொரு இனக்குழுவில் உள்ளவர் மணக்க விரும்புகிறார். ஆனால் மாஸ்டருக்கு
விருப்பமில்லை. எனவே, திடீர் போர் நடத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறது. அதாவது அதிகாரம்
உள்ள ஆண் மணம் செய்ய விரும்பினால, பெண் தனது உடலை விட்டுக்கொடுத்துவிடவேண்டும். அப்படி
இணங்காவிட்டால் அவளையும் அவளைச் சார்ந்தவர்களையும் கொல்வது சீன கலாசார வழக்கம். இந்த வகையில்,
ஒட்டுமொத்த மாஸ்டர் சார்ந்த இனக்குழுவே இறந்துவிடுகிறது.
தனது, மாணவனுக்காக மாஸ்டர் முன்னே நின்று தனது உயிரைவிடுகிறார். மாணவன் காப்பாற்றப்பட்டாலும்
அவனது ஆன்மா முன்ஜென்ம நினைவுகளோடு நவீன உலகிற்கு வருகிறது.
பொதுவாக இப்படி
அமைக்கப்படும் கதையில், நவீன வாழ்க்கை வாழும் மனிதர், சோங்கியாக, பலவீனமாக, நிறைய அவமானங்களை
சந்திப்பவராக இருப்பார். இவரது உடலில் புகுந்து ஆன்மாவை அழுத்தும் தொன்மை கால தற்காப்புக்கலை
மாணவரின் ஆவி. சூழலை மெல்லப் புரிந்துகொண்டு தன்னை வலுப்படுத்திக்கொள்ளும். கடந்த காலம்
முதல் நவீன காலம் வரையிலான கதையில் மாறாத அம்சம் இதுதான்.
இந்த கதையில்,
யே மோ என்ற மாணவனின் உடலில், தொன்மைக்கால ஆவி புகுகிறது. பிறகுதான் யேவின் வாழ்க்கை
எப்படிப்பட்டது என நமக்கும் தெரிய வருகிறது. யே குடும்பம் வசதியான பல்வேறு தொழில்களை
செய்து வருகிறது. ஆனால் அதில் யே மோ ஒரு அங்கமில்லை. அவன், டிஎன்ஏ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு
யே குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை என தெரிய வர, அவனை குடும்பத்தை விட்டு வெளியேற்றி
விடுகிறார்கள். ஆனாலும் அந்த குடும்பத்தில்
அவனது சகோதரி யே லின், ஜிஃபாங் ஆகியோர் பாசமாக இருக்கிறார்கள். யே லின்னின் தோழியிடம்தான்
யே மோ ஏராளமாக பணம் வாங்கி செலவழித்து வந்திருக்கிறான். பின்னே, குடும்பத்தை விட்டு
துரத்தியபிறகு சாப்பிடுவதற்கு கூட அவனிடம் காசில்லை. தங்குவதற்கான இடமும் தேவை இல்லையா?
பள்ளியில்
படிக்கும் மாணவர்களுக்கு யே மோவுக்கு ஆண்மையில்லாதவன், குடும்பத்திலிருந்து விரட்டப்பட்டவன்
என்ற உண்மைகள் தெரிந்திருக்கிறது. எனவே, யே மோ, யே லின்னின் தோழியிடமிருந்து மீண்டும்
பணம் கடன் வாங்குகிறான். தனது தொன்மைக்கால தற்காப்புக்கலை பயிற்சியைச் செய்கிறான். இந்த நேரத்தில் அவனுக்கு அதிர்ஷட சீட்டு வணிகம்
பற்றி தெரிய வருகிறது. தனது தற்காப்புக்கலை சக்தி மூலம் 50 ஆயிரம் ரூபாய்க்கு சீட்டு
எழுதிக்கொண்டு, அதிர்ஷ்ட சீட்டு வணிகம் செய்யும் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப் போகிறான்.
ஆனால் அங்குள்ளவர்கள் அவனை அடித்து விரட்ட முயல, அத்தனை பேர்களையும் அடித்து உதைத்து
வீசுகிறான். உண்மையில் அதிர்ஷ்ட சீட்டு நிறுவனம், பொதுமக்களில் பணக்கார ர்களை கண்டுபிடித்து
தகவல்களை சேகரித்து அதை வைத்து அதிர்ஷ்ட சீட்டு எழுதி வெற்றிபெறுகிறது. இந்த உண்மையை யே மோ எளிதாக கண்டுபிடித்துவிடுகிறான்.
அவன் நகர
மேயராக உள்ளவரின் மகளைப் பற்றிய தகவலை மட்டும் சேகரிக்கிறான். அவள், தாயார் மருத்துவமனையில்
படுத்துக் கிடக்கிறார். அந்த மருத்துவமனைக்கே சென்று தான் எழுதிய அதிர்ஷ்ட சீட்டை இருபதாயிரம்
ரூபாய்க்கு விற்கிறான். அதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதையும் சொல்கிறான். அந்த
இளம்பெண், எப்படியாவது அம்மா படுக்கையிலிருந்து எழுந்தால் போதும் என நினைக்கிறாள்.
எனவே காசைக் கொடுத்து வாங்கி அந்த சீட்டை பயன்படுத்துகிறாள். அந்த மந்திரச்சீட்டின்
சக்தி காரணமாக தாயார் கோமாவில் இருந்து விழித்தெழுகிறாள். இதனால் யே மோவுக்கு இளம்பெண்ணின்
ஆதரவு கிடைக்கிறது. அவளோடு பழகுகிறான். பிறந்தநாள் விழாவுக்கு கூட அந்த பெண்ணிடமிருந்து
அழைப்பு வருகிறது. அங்கும் போய் சில வக்கிரமிக்க பணக்காரர்களைச் சந்திக்கிறான்.
மேயரின் மகளிடமிருந்து
பெற்ற பணத்தில் தற்காப்புக்கலையை உயர்த்திக்கொள்ள முயல்கிறான். இதற்காக மருத்துவ மூலிகைகளை
தேடி எடுத்து வீட்டுத்தொட்டியில் வளர்க்கிறான். இந்த நேரத்தில், அவனுக்கு நிச்சயம்
செய்த இளம்பெண், அவனைத் தேடி வருகிறாள். அவள் நிங் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
அவள் யே மோவை திருமணம் செய்துகொள்வதாக கூறுகிறாள்.
சாங் எனும் குடும்பத்தின் வரன்களை தட்டிக்கழிக்க
போலியாக யே மோவை திருமணம் செய்துகொள்கிறாள். இதற்காக யே மோவிற்கு 50 ஆயிரம் டாலர்கள்
கொண்ட டெபிட் கார்டை தருகிறாள். சிறிது நாட்கள் கழித்து யே மோவை விவாகரத்து செய்துவிட்டு
வெளிநாடு செல்வது அவளது குடும்ப ஆட்களின் திட்டம். நேரடியாக சாங் குடும்பத்தை எதிர்ப்பது
கடினம் என்பதால் இப்படி ஒரு ஜெகஜால பிளான்.
யே மோ, முட்டாள்
கிடையாது. அவனை நிங் கேடயமாக பயனபடுத்தி தன்னை பாதுகாத்துக்கொள்கிறாள் என்பது தெரியும்.
எனவே, அவளிடம் காசு வாங்கிக்கொண்டு அவளது கணவன் போல நடந்துகொள்கிறான். நிங் கொடுத்த
டெபிட் கார்ட் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இருந்தாலும் மனைவி என்பதால் சோறு போடவேண்டுமே என்பதால்,
அதிர்ஷ்ட சீட்டுகளை விற்பது, தன் ரத்தத்தை விற்று பணம் பெறுவது என செலவுகளை செய்கிறான்.
வீட்டில் பொறுப்புள்ள போலி மனைவியாக நிங் சாப்பிடுகிறாள், தூங்குகிறாள். அவ்வளவுதான்.
யே மோ அவளுக்கு சமையல் செய்துவிட்டு வெளியே போய்
வேலையில் ஈடுபடுகிறான். காசு கிடைத்தால்தான் தற்காப்புக் கலைக்கான ஆயுதங்கள், மருந்துகளை
வாங்க முடியும். மணம் செய்துகொள்ளாமல் அவமானப்படுத்திய காரணத்தால், சாங் குடும்பத்திற்கு,
நிங்கை கொலை செய்ய விருப்பம். தங்கள் குடும்ப ஆட்களை மணம் செய்துகொள்ளாமல் யே மோவை
எதற்கு அவள் மணந்தாள் என யே மோவையும், நிங்கையும் கொல்ல அவனது வீட்டுக்கு வருகிறாள்.
ஆனால்,முன்னமே யே மோ அதைத் தெரிந்துகொண்டு
சாங் ஆட்களை அடிக்க சாலைக்கே வந்துவிடுகிறான்.
மூன்று நபர்களை நொடியில் அடித்து வீழ்த்தி, காரோடு
கொண்டுபோய் மலைப்பாதையில் தள்ளி விபத்து போல செய்துவிடுகிறான். அதேநேரம், யுன் பிங்
என்ற அவனது பள்ளி ஆசிரியரை, அதிர்ஷ்ட சீட்டு
கும்பல் கடத்தி பாலியல் வல்லுறவு செய்து வீடியோவாக்கி மிரட்டி பணம் பறிக்க முயல்கிறது.
அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராத விதமாக செல்லும் யே மோ அந்த கும்பலை அடித்து உதைத்து
ஆசிரியரைக் காப்பாற்றுகிறான். ஆனால் அந்த ஆசிரியர் மயக்கத்தில் இருந்த காரணத்தால்,
கண்விழிக்கும்போது தெரிந்த யே மோதான் தன்னை பாலியல் வல்லுறவு செய்தான் என காவல்துறையில்
புகார் கொடுக்கிறாள்.
யே மோவைப்
பொறுத்தவரை அவனுக்கு நடந்த திருமணம் போலித் திருமணம். அதில், மனைவியான நிங்கிற்கு அவன்தான்
சொந்த பணத்தைக் கொடுத்து கைங்கரியங்கள் செய்யவேண்டி வந்தது. கூடுதலாக சாங் குடும்பத்தின்
கொலை தாக்குதல்கள் வேறு. எனவே, அந்த நகரிலிருந்து
வேறு நகருக்கு சென்று மூலிகைகளை தேடலாம். தற்காப்புக்கலையை இன்னும் பலப்படுத்தலாம்
என நினைக்கிறான். பயணிக்கிறான். அந்த பயணத்தில் துப்பாக்கிகளை விற்கும் வென் டாங் என்ற
பெண்மணி, வியாபாரி அங்கிள் வூ, புதாவோ சங்கம், ராணுவ அதிகாரி, டியாங் இனக்குழுவுடனான
பரஸ்பர உறவு, மாஃபியா குழுக்களோடு சண்டை என பரபரப்புடன் கதை செல்கிறது.
கணினியின்
படிக்கலாம். ஆனால் , மாறாக போனில் படித்தால் ஓவியங்கள் சிறியதாக தெரியும், உரையாடல்களை
ஜூம் செய்து படிக்கவேண்டும். யே மோவைப் பொறுத்தவரை போலித்திருமணம் என்றாலும் கூட நிங்
மீது அக்கறை உள்ளது. அதை காதல் என்று சொல்ல முடியாது. யே மோவை கட்டுப்படுத்த, மனைவி
நிங்கைத் தாக்குகிறது சாங் குடும்பம், ஒருமுறை,
வீடு புகுந்து நிங்கை இரும்பு ராடால் அடித்து முதுகெலும்பை உடைக்கிறது. நிங்கின் தோழி
மூலம் அதை அறியும் யே மோ, நிங்கை அக்குபஞ்சர் மூலம் குணப்படுத்துகிறான். கூடுதலாக,
தற்காப்புக்கலை சக்தி குறைவாக இருந்தாலும்
அவர்களின் வீட்டுக்குபோய் சண்டையிட்டு கொல்லும் சம்பவத்தில் ஓவியங்கள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன.
அதிலும் பல சண்டைகளில் எதிரியின் எலும்புகள் உடைவது
எக்ஸ்ரே போல காட்டப்படுகிறது. ரத்தம் தெறித்தால்தான்
சண்டை என ஓவியர் உறுதியாக நம்பியிருக்கிறார். எனவே, காமிக்ஸ் சட்டகங்களில் ஏகதத்துக்கும்
ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது.
உண்மையில்
யே மோவின் நோக்கம், தன்னை வலிமையாக்கிக்கொண்டு தனது மாஸ்டரை கொன்ற குடும்பத்தை பழிவாங்குவதுதான்.
இந்த வகையில், அவன் தன்னை கொல்ல முயல்பவர்களைப் பற்றி பெரிதாக யோசிப்பதேயில்லை, கை, கால்களை வெட்டுகிறான். ஆணிகளை
வீசி உடலை சேதப்படுத்துகிறான். மணிக்கட்டு, கால் முட்டிகளை பெயர்க்கிறான். அதிலும்,
மலைப்பகுதியில் மூலிகை தேடிப்போகும்போது பாவோ என்பவனின் இடதுகையை வெட்டி, கீழே விழும்போது
வலதுகையையும் வெட்டும் காட்சி, பீதியடைய வைக்கிறது.
நிறைய இடங்களில்
தனக்கு அறிமுகம் இல்லாதவர்களைக் காப்பாற்றக்கூட மணிக்கட்டை கீறி ரத்தத்தை நீர் போல
புகட்டும் நிகழ்ச்சிகள் உள்ளன. இதை இங்கு கூறுவதற்கு காரணம், யே மோ மனநிலை அளவில் எந்தளவு
வலிமையானவன் என்பதைக் கூறுவதற்குத்தான். புரிந்துகொள்வதற்கும்தான்.
வல்லுறவு, மானப்பங்கம், அதீத வன்முறை உள்ளதால் மன
தைரியமுள்ளவர்கள் மட்டும் இந்த காமிக்ஸை படிக்கவேண்டும். அப்படியல்லாதவர்கள் படித்தால்,
நிச்சயம் வருத்தப்படுவார்கள். ஏனெனில் இந்த காமிக்ஸ் தொடரில் வரும் காமெடி கூட செக்ஸ்
கலந்ததுதான்.
ஆனால் கூட காமிக்ஸில் ஏராளமான திருப்புமுனைகள்,
ஆச்சரியங்கள் உள்ளன. குறிப்பாக, யே மோ ரயிலில்
அறிமுகமான மருத்துவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் சேர்ந்து மருத்துவமனை தொடங்குவது,
அதை நடத்துவதன் வழியாக பணம் சம்பாதிப்பது. அதில் வரும் தீர்க்க முடியாத நோய்க்காக ஹாங்காங்
சென்று வயதானவர் ஒருவரின் உயிரைக் காப்பது, குழந்தைகள் கடத்தல் என நிறைய கதை இணைப்புகள்
உள்ளன. ஒன்றோடொன்று தொடர்புபட்டு கதை சென்றுகொண்டே இருக்கிறது.
வாய்ப்பிருப்பவர்கள்
காமிக்ஸை வாசியுங்கள். உங்களை நிச்சயம் ஏமாற்றாது.
கோமாளிமேடை
டீம்
--------------------------
https://strongest-abandoned-son.fandom.com/wiki/Ye_Mo
https://www.novelupdates.com/series/strongest-abandoned-son/
கருத்துகள்
கருத்துரையிடுக