மீசையை முறுக்கி சவால் விட்டுத் திருடும் மாதவன்! - மீச மாதவன், கிரேஸி கோபாலன் - கேரக்டர் புதுசு
மீச மாதவன் - மலையாளம் |
மீச மாதவன் - மலையாளம் |
மீச மாதவன்
மலையாளம்
திலீப் (மாதவன் நாயர்)
கிரேஸி கோபாலன், மீசை மாதவன் என இரு படங்களுக்கும் ஒரு
ஒற்றுமை உண்டு. இரண்டிலும் திலீப் நடித்தார் என்பதல்ல. இரண்டு படங்களிலும் நாயகன் திருடன்.
ஆனால் அப்படி மாறியதற்கு இறந்தகாலத்தில் நெகிழச்செய்யும் ஃபிளாஷ்பேக் உண்டு. அதை நேர்த்தியாகவும்
சொல்லியிருக்கிறார்கள்.
மாதவன் நாயர். இந்தப் பெயரைச் சொன்னாலே ஊரில் உள்ள அனைவருக்குமே
அவர் திருடன் என்பது தெரியும். மலையாளத்தில் கள்ளன் என்கிறார்கள். மீசை மாதவன் என்பதுதான் அவன் பட்டப்பெயர். ஊர் மக்கள்
யாராவது அவனிடம் லொள்ளு பேசி கோபம் வந்து மீசை முறுக்கினால் அன்று, சம்பந்தப்பட்டவர்
வீட்டுக்குள் முக்கியமான ஏதாவது ஒரு பொருளேனும் களவு போகும். அதை தடுக்கவே முடியாது.
அந்தளவு திருட்டில் ஜெகஜாலன். திருட்டில் ரிடையர்டாகி கால் ஆணி வந்துவிட்ட முன்னாள்
திருடரிடம் வித்தை கற்ற ஆள், மாதவன்.
ஊருக்குள் புதிய பொருட்களை வாங்க முடியாத சிலர், மீசை
மாதவனிடம் எனக்கு இந்த பொருட்கள் வேண்டுமென்று சொல்லி, ஆர்டர் செய்து காசு கொடுத்து
வாங்குவதும் உண்டு. மாதவனைப் பொறுத்தவரை அவனுக்கென நண்பர் பட்டாளம் உண்டு. அவனை நேசிக்கும்
ஆட்கள் உண்டு. அந்த பரிவுக்கு ஒரு காரணம் இருக்கிறது. உதவி என ஒருவர் கேட்டால் தன்னை
அடகு வைத்தாவது பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் மென்மையான ஈர இதயம் மாதவனுக்கு உண்டு.
மாதவனின் விவசாய நிலத்தை பிள்ளச்சன் என்ற வட்டிக்காரர்
கடனுக்காக கையகப்படுத்தி வைத்திருக்கிறார். அவரிடம் அடகு வைக்கப்பட்ட நிலத்திற்கான
அசலை மாதவன் ஏற்கெனவே கட்டினாலும் கூட அவனது கல்வியறிவின்மையை பயன்படுத்தி வட்டி கேட்டு
ஏமாற்றுகிறார் பிள்ளச்சன். இப்படித்தான் ஊர் முழுக்க சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
பிள்ளச்சனின் மனைவி இதைபற்றி அறிந்திருந்தாலுன் கணவனிடம் நேரடியாக கூற முடிவதில்லை.
பிள்ளச்சன், தனது ஒரே மகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைத்திருக்கிறார்.
நிலம் போனதால் வாழ்வதற்கு கூலி வேலைகள்தான் ஒரே உபாயம்.
மாதவனின் அண்ணன் படித்து, கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டார். அவர் படிப்பதற்கான காசு, கல்யாணச் செலவு ஆகியவற்றை
மாதவன்தான் செய்வான். கூடவே, அம்மா, தங்கை ஆகியோருக்காக மாதவன்தான் உழைத்துக்கொண்டிருப்பார்.
அதையெல்லாம் அவர் அண்ணனுக்கு சொல்வதில்லை. அவருக்குத் தெரிந்தாலும் கண்டும் காணாமல்
அப்படியே இருந்துவிடுகிறார். ஏதும் செய்வதில்லை என்பது பின்னாளில் பார்வையாளர்களான
நமக்குத் தெரிகிறது. எல்லோருக்கும் அவரவர்க்கான சுயநலம் எந்தளவு இருக்கிறது.
ஒருவர், குடும்பத்தில்
உள்ள மற்றவர்களுக்கான தனது வாழ்வை பணயம் வைப்பது எந்தளவு முட்டாள்தனம் என்பதை படத்தின்
இறுதிக்காட்சியில் மாதவன் புரிந்துகொள்கிறார். சதி ஒன்றில் சிக்கி அரும்பாடுபட்டு,
இறுதியில் தன்னை நிரூபிக்கிறார். அதன் வழியாகவே அவருக்கு திருமணமும் நடக்க வாய்ப்பு
உருவாகிறது.
மாதவன் திருடன்தான். அதேசமயம், அவன் மிகப்பெரிய அளவில்,
பிறரது குடியைக் கெடுக்கும் திருட்டுகளை செய்வதில்லை. அவசியத்திற்கு, பிறர் அவனிடம்
உதவி கேட்டால் கிராமத்தில் பணக்காரரான பிள்ளச்சனின் வீட்டில் திருடி கொடுத்து உதவுகிறான். அண்ணனுக்கு படிப்புச்செலவுக்கு பணம் கொடுக்க, வீட்டில்
மூன்று பேர் சாப்பிடவுமே பனிரெண்டு வயதில் தொடங்கி கள்ளனாகிறான் மீசை மாதவன். அதை அவன்
விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. வேறுவழியில்லாமல் ஈடுபட்ட அந்த தொழிலில் அவன் கைதேர்ந்தவன்.
ஊரில் உள்ள தலைமைக்
காவலரும் அவனுமே ஒன்றாக சுற்றுமளவு நெருக்கமாகிறார்கள். இதற்கு வேலை எதிர்ப்பாக அமைவதில்லை.
இருவரின் மனதும் ஒன்றுபோல உள்ளது. கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யும் மனமுடையவன்,
மாதவன் என்பதை தலைமைக் காவலர் அறிந்திருக்கிறார்.
ஊரில் உள்ள பிள்ளச்சனுக்கு வட்டியை ஏமாற்றுவது, கொடுக்கும்
பணத்திற்கு ரசீது வழங்காமல் அவர்களின் சொத்துக்களை வழக்கு போட்டு கையகப்படுத்துவது
ஆகியவற்றை துணிச்சலாக செய்கிறார். கூடவே சரச சல்லாபமும் உண்டு. ஊரில் உள்ள ராணுவ வீரரின் மனைவியிடம் தொடர்பு வைத்திருக்கிறார்.
படத்தில் இதை காமெடியாக கூறுகிறார்கள். அதர்மமான செயல்கள்தான். மாதவன் அதை பெரிதாக
எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், தனது தங்கை திருமணம், தனது பால்ய கால தோழியான பிள்ளச்சனின்
மகள் ருக்மணியால் நிற்கும்போதுதான் அவன் கோபம் கரை கடக்கிறது. போலீஸ் அடித்தும், தலைமைக்காவலர்
தயக்கத்துடன் அடித்தும் சொல்லாதவன் காவல் நிலையத்தை
விட்டு வந்ததும் பிள்ளச்சனின் பணத்தை தூக்கியெறிந்து ருக்மணியிடம் சொல்கிறான்.
‘’உன்னோட பிளான்தானே இது. என்னோட தங்கைக்கு வந்த வரனைக்
கெடுத்துட்டே இல்லே சந்தோஷமா இரு’’ என கோபத்துடன் சொல்லிவிட்டு செல்கிறான். ருக்மணியின்
அம்மாவும் மாதவன் திருடனாக மாறியதில் அவள் தந்தையின் பங்கைச் சொல்லி, மகளைத் திட்டுகிறாள்.
‘இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்திட்டியே’ என்கிறாள்.
மீசை மாதவனைப் பொறுத்தவரை அவன் மகிழ்ச்சியாக இருந்த காலம்,
அவன் அப்பா உயிரோடு இருந்த காலம். அப்போது ஏழை, பணக்காரன் என வேறுபாடு இல்லாமல் பிள்ளச்சனின்
மகளான சிறுமி ருக்மணியை தனது தோளில் அமரவைத்து சென்றவன்தான் மாதவன். பின்னாளில்தான்
வறுமையான நிலையில் அவன் திருடனாகிறான்.
பிள்ளச்சனின் மகளான ருக்மணிக்கு, வெளியூரில் உள்ள ஆங்கிலப்பள்ளியில்
படித்து நாகரிகம் கொண்ட புத்திசாலித்தனமுள்ள இளம்பெண்ணாகிறாள். அவளுக்கு பழைய நினைவுகள்
ஏதுமிருப்பதில்லை. ஆனால், தான் யாராக இருக்கிறோம் என்பதை மாதவன் மறப்பதேயில்லை. எனவே,
தலைமைக் காவலரின் மகள் அவன் விளையாட்டுப் பேச்சில்,
அவளை மணப்பதாக கூறும்போது அதை நம்புகிறாள்.
பிள்ளச்சனிடமிருந்து வீட்டின் அடமானப்பத்திரத்தை திருடிக் கொண்டு வந்து கொடுக்கும்போது,
‘’தன்னைஅவன் விரும்பவில்லையா?’’ என்று கேட்கிறாள். அவன் அதிர்ச்சியோடு ‘’எப்போதும்
உன்னை பிடிக்குமே’’ என்று கூறியபடி ஒரு நொடி அப்படியே திகைத்து நின்றுவிடுகிறான்.
பெண்ணுக்கு தான் விரும்பியது நடக்க வேண்டும். விரும்பிய
ஆணுடன் ஒன்றாக கைகோத்து சந்தோஷமாக இருக்கவேண்டும். ஆனால், ஆணுக்கான பொறுப்புகள் வேறு.
தன்னிடம் உதவி கேட்ட தலைமைக் காவலரிடம் வேடிக்கையாக கேலி பேசிய மாதவன், காதலைப்பற்றி
நினைக்க வாய்ப்பே இல்லை.
ருக்மணியைக்
காதலிக்க எடுக்கும் முடிவைக் கூட விளைநிலத்திற்கான கடனை முழுமையாக கட்டமுடியாமல் வாழும்
வீடும் பறிபோகிறதே என்ற அவசரத்தில்தான் எடுக்கிறான். மற்றபடி அவள் மட்டுமல்ல எந்த பெண்ணையும் காதலிக்க
அவன் நினைப்பதில்லை. யதார்த்தம் இதுதான். திருடனை யார் மணப்பார்கள்?
ருக்மணியைக் காதலிப்பது இடையில்தான் நடக்கிறது. அந்த
உறவை பயன்படுத்தி சொத்தை மீட்க நினைக்கிறான் என பிள்ளையச்சன் தன் பெண்ணிடம் கூறுவார்.
ஆனால், அவர் கூறுவதை தொடக்கத்தில் ஏற்று, இறுதியில் உண்மையில் விரும்புவதாக அவளது வீட்டில்
வைத்தே நேர்மையாக பேசுவான் மாதவன். அடுத்த படம் பற்றி பார்ப்போம்.
கிரேஸி கோபாலன் - மலையாளம் |
இதேபோன்ற கதை அமைப்பைக் கொண்ட படம், ‘கிரேஸி கோபாலன்’.
படத்தின் தொடக்கம் பிரமாதமாக அமைந்துவிட்டது. இந்த படத்தை இயக்குநர் தீபு இயக்கினார்.
ஊஞ்சல்ஜாடி என்ற கிராமத்தில் எந்த வீட்டுக்கும் கதவே இருக்காது. அதற்கு காரணம், கோபாலன்
அவற்றை கழற்றிக் கொண்டு போய்விடுகிறான். இதை தடுக்க என்ன முயற்சி செய்தாலும் ஊராரால்
ஒன்றும் செய்யமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக புகார் கொடுக்க செல்லும் காவல்நிலையத்தில்
உள்ள ஜீப்பின் டயர்களைக் கூட திருடிவிடுகிறான் கோபாலன். போலீசில் புகார் தந்துகொண்டிருக்கும்போது,
ஊர்க்காரரின் சைக்கிளை கோபாலன் திருடிக்கொண்டு அதற்கு பதிலாக ஒரு சீட்டை மட்டும் எழுதி
வைத்திருக்கிறான். ‘’சைக்கிள் எனக்கு பிடித்திருக்கிறது. எடுத்துக்கொள்கிறேன்.’’ அவ்வளவுதான்.
ஒவ்வொரு திருட்டுக்கும் இப்படியொரு செய்தி மட்டுமே பொருளை பறிகொடுத்தவருக்கு கிடைக்கிறது.
உண்மையில், கோபாலன்
ஊராரின் பொருட்களை திருடி விற்க கடந்த கால பிரச்னை காரணமாக உள்ளது. தவறு செய்யாத கோபாலனின்
தந்தை, மோசடிக்காரன் என்று ஊராரால் அடிக்கப்பட்டு
அவதூறு செய்யப்பட்டு இறந்துபோகிறார். அவரது மோசடிக்கான இழப்பீடு என்று சொல்லி பூர்விக
வீடு கையை விட்டு போய்விடுகிறது.
பூர்விக வீடு கையைவிட்டு
போனது கோபாலனை ஆவேசம் கொள்ள வைக்கிறது. எனவே, தான் இழந்த நிம்மதியை ஊரார் அனைவரும்
ஒருசேர இழக்க வேண்டும் என நினைக்கிறான். அதற்காக ஊரில் உள்ள பள்ளி, வீடு, பஞ்சாயத்து
அலுவலகம் என எதையும் மிச்சம் வைக்காமல் கொள்ளையடிக்கிறான். தொடக்க காட்சிகளுக்குப்
பிறகு கோபாலன் நகரத்திற்கு சென்று லஷ்மணன் என்ற உள்ளூர் திருடனோடு சேர்ந்து செய்யும்
கடத்தல் அவனை ஏராளமான பிரச்னைகளில் மாட்டிவிடுகிறது. அதைக் கடந்து தனது குடும்பத்தை
உருவாக்கி பணம் சம்பாதித்து வீட்டை எப்படி மீட்கிறான் என்பதே கதை. திலீப்பின் நடிப்புக்காகவே
பார்க்கவேண்டிய படம்.
Release
date: August 2002 (India)
Director: Lal Jose
Budget: 1.45
crores INR
Cinematography: S. Kumar
Distributed
by: Kalasangham Films
கருத்துகள்
கருத்துரையிடுக