பஞ்சாப் இசைக்கலைஞர்களுக்கு உலக மேடையை திறந்து வைத்துள்ள நட்சத்திரம் - தில்ஜித் தோசன்ஜி

 


பஞ்சாபி பாடகர், நடிகர் தில்ஜித் தோசன்ஜி








பஞ்சாபி இசை, திரைப்படங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நட்சத்திரம் -தில்ஜித் தோசன்ஜி

காலிஸ்தான் பிரச்னை, பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பரபரப்பான விவகாரங்களை தாண்டி, தில்ஜித் நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோச்செல்லாவேலி இசை மற்றும் கலை விழாவில் தில்ஜித், சீக்கியர்களின் மரபான உடைகளை அணிந்து பாடி, நடனம் ஆடினார். இந்த விழா, அவரை உலகளவிலான மேடையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

தனது அமெரிக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இசைவிழாவில் முதல் இந்தியராக பங்கேற்றவர் தில்ஜித் தோசன்ஜிதான்.  இவர், தனது ஏழு வயதில் இருந்து பஞ்சாபி பாடல்களை பாடி ஆடிவருகிறார். இவருக்கான ஊக்கத்தை அக்காவுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார்.

அவர் பஞ்சாபி பாடல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய பாடல்களை தில்ஜித் மனப்பாடம் செய்து பாடச்செய்திருக்கிறார். அப்படித்தான் தில்ஜித் பஞ்சாபி பாடல்களை பாடத் தொடங்கினார்.

தற்போது, 39 வயதாகும் தில்ஜித், இருபத்தொரு ஆண்டுகளாக பொழுதுபோக்கு துறையில் இயங்கி வருகிறார். மொத்தம் பதினைந்து தனியிசை பாடல் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். முதல் தனியிசை பாடல் தொகுப்பின் பெயர், இஷ்க் டா உடா அடா. தில்ஜித்தின் பாடல்கள் கேசட்டுகள், சிடி, இசை ஆப்கள் என அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளன. ஒருவகையில் பஞ்சாபி பாடல்களின் வளர்ச்சியும் தில்ஜித்தின் எழுச்சியும் ஒன்றாக நடந்தது இது தற்செயலா என்று தெரியவில்லை.

தில்ஜித்தின் வருகையில் உற்சாகமான ஏராளமான இசைக்கலைஞர்கள் தங்கள் தனியிசை தொகுப்புகளை ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் தளங்களில் வெளியிட்டனர். வெளியிட்டு வருகிறார்கள். முக்கியமாக இணையத்தில் தங்கள் பாடல்களை வெளியிட்டு அதற்கான சம்பளத்தையும் பெற முடிவது மகிழ்ச்சியான ஒன்று. ஏனெனில் பல்லாண்டுகளாக ராயல்டி என்பதை பற்றிய அறியாதவர்களாக அல்லது அறிந்தாலும் அதை எப்படி பெறுவது என புரியாமல் உழைத்துக்கொண்டிருந்தவர்கள் பஞ்சாபி இசைக்கலைஞர்கள்.

 பஞ்சாபியர்களை இந்தி சினிமா வேடிக்கையானவர்களாக , கோமாளிகளாக காட்டி வந்தது. இந்த இயல்பை தில்ஜித் மாற்ற வேண்டுமென நினைத்தார். ஆனால் அவர் நடித்த பஞ்சாபி சினிமாவான தி லயன் ஆஃப் பஞ்சாப் என்ற படமே, அவர் டர்பன் கட்டி நடித்த காரணத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதை கூறியது வேறு யாரும் அல்ல. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்தான். தில்ஜித், இப்படி ஒரு விமர்சனமாக என நொந்துபோனார். ஆனால், தயாரிப்பாளரின் கருத்தாக அதை ஏற்றாலும், முழுமையாக அதை நம்பவில்லை. முதல் படத்தோடு கூடவே, ஜின்னே மேரா தில் லுட்டேயா என்ற திரைப்படத்திலும் அப்போது நடித்து வந்தார். அந்த படம் வெளியாகி வசூலில் மகத்தான சாதனை படைக்க, தில்ஜித்திற்கு இனி படங்களில் நடிக்கலாம் என்று தைரியம் பிறந்தது. 2011ஆம் ஆண்டு மட்டும், தில்ஜித் 29 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியில் வெளியான உல்டா பஞ்சாப் என்ற திரைப்படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.

1988ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப்பின் தலித் பாடகரான சம்கீலா என்பவரின் சுயசரிதைப் படத்தில் தில்ஜித் நடிக்கவிருக்கிறார். இயக்குநர், இம்தியாஸ் அலி.  தில்ஜித் தனது பாடல்களின் வழியே புகழை மட்டுமல்ல நிறைய எதிர்ப்பையும் பெற்றிருக்கிறார்.

கோலியான், ஜட் ஃபயர் கர்தா, லக் 28 குடி தா ஆகிய பாடல்களில் வன்முறை, பாலுறவு ஆகியவற்றை ஆதரித்துள்ளதாக சிலர் பிரசாரங்களைச் செய்துவருகிறார்கள். ஆனால் தில்ஜித் அதைக் குறித்த தெளிவைக் கொண்டிருக்கிறார்.

‘’இந்தியில், ஆங்கில மொழியில்  சண்டைப்படங்கள் வருகின்றன. அவற்றை யாரும் வன்முறையை ஆதரிக்கிறது என்று கூறுவதில்லை. அதைப்போலவே நாங்கள் உருவாக்கும் பாடல்களுக்கும் மையக்கருத்து ஒன்றுண்டு. பாடல்களை இந்தளவு தீவிரமாக ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பாடல்களை வன்முறையைத் தூண்டுகிறது என ஒருவர் கூறினால், அதே பார்வையில் சண்டைகளை மையமாக கொண்ட படங்களையும் பார்ப்பது சரியானது. ஆனால் இங்கு அப்படி நடப்பதில்லையே?’’ என்று கூறுகிறார்.

தில்ஜித், மூன்று நாட்களுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியதில்லையாம். பஞ்சாபில் இருப்பது போன்ற நிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை என்பவர், பிற பஞ்சாபி கலைஞர்களை விட ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார். உண்மையில் அவர் சொந்தம் கொண்டாடுவது அவர் பிறந்த மண்ணான பஞ்சாப் கூட அல்ல. அவர் நிற்கும்,பாடல்களை பாடி ஆடும் அந்த மேடை. அந்த மேடையில் தில்ஜித்தை பார்க்கும்போதுதான் கம்பீரமாக இருக்கிறது.

 

 

அமர்ஜோத் கௌர்

இந்து

படங்கள் - குயின்ட், பாலிவுட் ஹங்காமா

கருத்துகள்