கடலைப் பாதுகாப்பதை வெறும் பேச்சாக அன்றி, செயலாக மாற்ற வேண்டும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து

 








பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர்

பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர்


காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து. கடலை பாதுகாக்கும் செயல்பாட்டினை ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியா முன்னெடுக்கும் என நம்புகிறார்.

நீலப்பொருளாதாரம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?

உலக நாடுகள் வரையறுத்துள்ள நீலப்பொருளாதாரம் என்பதையே நானும் கூறுகிறேன். கடலை சூழலுக்கு உகந்த வழியில் பயன்படுத்தும்போது, அதைச் சார்ந்த  மக்களின் வாழ்க்கையும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும். நாம் ஏற்கெனவே நிலத்தை பெருமளவு பயன்படுத்திவிட்டோம். எனவே, இப்போது கடலில் இருக்கும் இயற்கை வளங்களை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். நாம் நிலத்தை மோசமாக பயன்படுத்தியது போல கடலை, அதன் வளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

நீலப்பொருளாதாரத்தில் உள்ள ஆபத்துகள் என்ன? இப்படி ஏற்படும் ஆபத்துகள் நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவையா?

கடலை தங்களது வாழ்வாதாரமாக, பொருளாதார அடிப்படையாக கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்து இதன் பாதிப்புகள் மாறுபடும். காலநிலை மாற்றம், கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தல், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குதல், சட்டவிரோதமாக மீன் பிடித்தல், எண்ணெய் கசிவு, நீர்வாழ் உயிரினங்களின் வாழிடம் அழிவு, பல்லுயிர்த்தன்மை அழிக்கப்படுதல், கடல்பகுதி வளர்ச்சிப்பணிகள் ஆகியவை எல்லாமே நீலப்பொருளாதாரத்தை பாதிக்க கூடியவை. நிலப்பரப்புகளில் மானுடவியல் ஆய்வுகளைச் செய்வது போல கடலிலும் செய்வது அவசியம்.

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதில் நீலப்பொருளாதாரம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இந்த மாநாடு, கடல் பாதுகாப்பில் என்ன முயற்சிகளை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் தலைமையில் உலக நாடுகள், கடலில் அதிகளவு மீன் பிடித்தலை குறைத்து, அதில் மாசுபாடுகளை கட்டுப்படுத்த முயல்வார்கள் என நம்புகிறேன். அதற்கான கொள்கைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. வளரும் நாடுகளின் கடல் சார்ந்த பாதுகாப்புக்கு வளர்ச்சி பெற்ற நாடுகள் நிதி முதலீடு செய்து கொள்கை ரீதியாகவும் பல்வேறு உதவிகளை வழங்க முடியும். 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் 30 சதவீத கடல் பகுதியை பாதுகாக்கும் செயல்பாட்டை வெறும் பேச்சாக இல்லாமல் செயலாக முன்னெடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.

 

மீன் உற்பத்தியில் உலகளவில் இந்தியாவின் இரண்டாவது இடத்தில் உள்ளது.  இந்த நிலையில் இந்தியா எப்படி பிற நாடுகளுக்கு  கடல்சார் பாதுகாப்பில் உதவ முடியும்?

இந்தியா கடல் சார்ந்த பாதுகாப்பில், சிறிய நாடுகளுக்கு வழிகாட்டி உதவ முடியும். சூழலுக்கு உகந்த சுற்றுலா, கடல் சார்ந்த மறுசுழற்சி ஆற்றல், ஆகியவற்றில் கவனம் செலுத்தி பல்லுயிர்த்தன்மையைக் காக்கலாம். இந்தியா, ப்ளூசார்டர் ஆக்சன் குரூப்பில் இணைந்தால், கடலுக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் செயல்பாடுகளில் பங்கேற்க முடியும்.

நீலப்பொருளாதரம், கடல்சார் பாதுகாப்பு ஆகியவை மக்களிடையே போதிய கவனத்தைப் பெறவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

கடல் என்பது நாம் உயிர் வாழ்வதற்கு எந்தளவு முக்கியம் என மக்களுக்கு இன்னும் புரியவில்லை. நாம் உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சு கூட கடலோடு தொடர்புடையதுதான். கடல்தான் நமக்கான உணவைத் தருவதோடு, வாழ்க்கையை வாழ உதவுகிறது. தட்பவெப்ப சூழலையும் குறிப்பிட்ட இயல்பில் வைத்திருக்கிறது.

நிலப்பரப்பில் உள்ள வெப்பத்தைக் கவர்ந்து வைத்து, சூழலை குளுமையாக்குவது கடல்தான். ஆனால் கடல் மாசுபட்டால் புயல், சூறாவளி என நினைத்துப் பார்க்க முடியாதபடி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நாம் கடலை இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தால், 2100ஆம் ஆண்டு கடல் உயிரினங்கள் அனைத்துமே முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.

கடல் பாதுகாப்பிற்கான நிதி குறைவாகவே உள்ளது. இதை எப்படி எதிர்கொண்டு நடவடிக்கைகளை திட்டமிடப்போகிறீர்கள்?

பசுமை காலநிலை நிதிக்கு குறைந்தபட்சம் 2 சதவீத நிதியையேனும் ஒதுக்கவேண்டும். இதற்கென  ப்ளூ சார்டர் 2018 என்ற கொள்கையை உருவாக்கியுள்ளோம். அனைத்து நாடுகளும் கடல்சார்ந்த பிரச்னைகளுக்கான நிதியை அணுக, காலநிலை நிதி மையம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை மிகவும் அபாயத்திலுள்ள சிறு நாடுகள் பயன்படுத்தி, கடல் சார்ந்த பாதுகாப்பை மீட்கலாம். இதற்கென தனி ஆலோசகர்களை அமர்த்தும் திட்டமும்  உள்ளது.

 

 

 

 

மங்கா பேல்

டைம்ஸ் ஆஃப் இந்தியா

படங்கள் - கார்டியன், கேடி பிரஸ் 

கருத்துகள்