அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

 








எப்போதும் பசி

அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம்.

ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.

 சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

ஊட்டச்சத்துகள், நார்ச்சத்துகள் கொண்ட உணவுகளை செரிக்க அதிக நேரம் பிடிக்கும். அந்த நேரத்தில் மனத்தூண்டுதல் பெற்ற மக்கள், சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள். மதிய உணவு உண்டபிறகு இசக்கி விலாஸ் பிராண்ட் கடலை மிட்டாய் கூட சாப்பிடத் தோன்றக்கூடாது. அந்தளவு சரிவிகிதமான உணவுகளை உண்பது உடலுக்கு நல்லது.

அகோர பசி என்பதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர பசிக்கும் நேரத்தில் நீர் குடிக்கலாம். வெளியில் சற்று நடந்துவிட்டு வரலாம். உங்களது மன உணர்வுகளைத் தூண்டும் உணவுகள் விற்கும் கடைப்பக்கம் போகாமல் இருக்கலாம். மயிலாப்பூரின் கச்சேரி ரோட்டில் வேலை செய்துகொண்டு மயிலை பிரியாணி அல்லது பெஸ்ட் பிரியாணி சாப்பிடாமல் இருப்பது கடினம்தான். ஆனால் மனக்கட்டுப்பாடு இருந்தால் அடிக்கடி தோன்றும் அகோர பசியை எளிதாக தொலைத்துக்கட்டலாம். எண்ணெய்யில் வறுத்த பிரியாணி சோற்றை, கொண்டாட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு மறக்கலாம்.

டைம் வார இதழ் 

 image - pixabay


கருத்துகள்