ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குடியுரிமை அமைப்புகளுக்கும் நன்கொடை வழங்குவது அவசியம்!
ஏசிஎல்யூ - அமெரிக்க குடியுரிமை சங்கம் |
அமெரிக்கன்
சிவில் லிபர்டிஸ் யூனியன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா? இந்த அமைப்பு அமெரிக்காவில்
இப்போதைக்கு முக்கியமான செயல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறது. அங்கு பெண்கள் கருக்கலைப்பை
சுதந்திரமாக செய்துகொள்ளும் முறையை ஒழித்துக்கட்ட சில மாகாணங்கள் முயல்கின்றன. இந்த
பிற்போக்குத்தனத்திற்கு எதிராக பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஏசிஎல்யூ போராடி வருகிறது.
இத்தனைக்கும் இந்த அமைப்பு மக்களிடம் நன்கொடை பெற்றுத்தான் நூறு ஆண்டுகளாக உரிமைகளைக்
காப்பாற்ற போராடி வருகிறது.
இப்படி அரசின்
சட்டத்திற்கு எதிராக போராடுவதால் அமலாக்கத்துறை தன்னார்வ குடியுரிமை அமைப்பின் அலுவலங்களில்
சோதனையெல்லாம் நடத்துவதில்லை. வெளிநாட்டு பணத்தை பெறுகிறார்கள் என்று சொல்லி கேலி,
அவதூறு செய்வதில்லை. நிறுவனர்களை, உறுப்பினர்களை, தன்னார்வலர்களை காவல்துறை மூலம் மிரட்டுவதில்லை.
முக்கியமான பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைப்பதில்லை.
வெளிநாட்டு
மக்களைப் போலவே இந்தியாவில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான
பணம் ஆன்மிக அமைப்புகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் செல்கிறது. எல்லாவற்றையும் ஆண்டவன்
பார்த்துக்கொள்வான் என அப்பாவியாக நினைக்கிறார்கள். நடைமுறையில் ஏதும் நடப்பதில்லை.
ஆனால், அதேசமயம் அரசின் தவறான முடிவுகளை, முட்டாள்தனமான சட்டங்களை எதிர்க்க உருப்படியான
குடியுரிமை அமைப்புகளை தேட வேண்டியதாக உள்ளது. சொற்ப அளவில் அப்படி செயல்பட்டுக்கொண்டு
இருப்பவர்களும் அரசு அமைப்புகள் மூலம் கடுமையான மிரட்டப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள்.
அமைப்பை தடை செய்கிறார்கள். அதையும் மீறினால் குண்டர்களால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
உண்மையில்
இந்தியர்கள் தானம் கொடுப்பதில் தடுமாறுவதில்லை. ஆனால் அவர்கள் அரசை நம்புவதில்லை. தனியார்
தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள். அதன் வழியாக ஏதாவது செயல்கள் நடந்தால் போதும்
என ந்ம்பி பணத்தைக் கொடுக்கிறார்கள்.
2022ஆம் ஆண்டில், தனிநபர்கள் மட்டும் 33 ஆயிரம் கோடி
ரூபாயை தானமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். சமூக பொறுப்புணர்வு நிதியாக தனியாக ரூ.29ஆயிரம்
கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பெருநிறுவனங்கள் கிராம மேம்பாட்டிற்கு நிதியை நன்கொடையாக
வழங்கியிருக்கிறார்கள்.
இந்தியாவில்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு அதிக வாடிக்கையாளர்கள் அதிகரித்தாலும் சாப்பிட உணவின்றி,
சுகாதார வசதியின்றி, தங்க வீடின்றி தடுமாறும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
எனவே, இந்திய பெருநிறுவனங்கள் தமது நன்கொடையில் பெரும்பாலானவற்றை கல்வி சுகாதாரம்,
உணவு ஆகியவற்றுக்கே அளிக்கின்றன. ஒருவர் பசியில்
உணவு கேட்டு கெஞ்சும் நிலையில், குடியுரிமை அமைப்புகளுக்கு நன்கொடை கொடுங்கள்
என்று கேட்பது இரக்கமில்லாததாகவே தோன்றும்
அல்லவா? ஆனால் அதைப்பற்றி யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
குடியுரிமை
அமைப்புகள் இந்தியாவில் இல்லாமல் இல்லை. ஆனால் அவற்றுக்கு நீதிமன்றத்தில் அரசுக்கு
எதிராக வழக்கு போடும் அளவுக்கு நிதி வசதி இல்லை. இந்த வகையில் மேற்சொன்ன ஏசிஎல்யூ அமெரிக்க
அமைப்புடன் ஒப்பீடு செய்தால், 0.005 சதவீத அளவுக்கே இந்திய குடியுரிமை அமைப்புகளுக்கு
மக்களின் நிதி கிடைக்கிறது.
அரசின் சட்டங்களை எதிர்த்து நின்றால், குடியுரிமை
அமைப்புக்கு நிதியுதவி செய்தால் நமக்கு ஏதேனும் மிரட்டல்கள் வருமோ, பிரச்னைகள் வருமோ
என பல்வேறு தொழில்நிறுவனங்களும் பயப்படுகின்றன. இதனால்தான் அரசின் முட்டாள்தனமான சட்டங்களை
எதிர்க்க ஆட்களே இல்லாமல் போகின்றனர். இங்குதான் மக்களின் சுதந்திரமான பேச்சுரிமை நசுக்கப்படுகிறது.
பொதுவெளியில் சுதந்திரமாக தனது கருத்தை ஒருவர் முன்வைக்க முடியாது.
தைனிக் பாஸ்கர்,
பாரத் சமாச்சார், நியூஸ்கிளிக், நியூஸ் லாண்டரி, தி வயர், பிபிசி என உண்மைகளை வெளிப்படையாக
பேசிய ஊடகங்களுக்கும் அமலாக்கத்துறை மூலம் நேரடியான மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனால்,
ஊடகங்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை உண்மைகளை பேசாமல், அரசை புகழ்ந்து பேசி தங்களை
காத்துக்கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. தி வயரில் நேர்காணல் எடுத்துவரும் பத்திரிகையாளர்,
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் தாப்பரின் நிகழ்ச்சிக்கு, விளம்பரதாரர் கிடைக்கவில்லை.
இதற்கு காரணம், அவர் மதவாத கட்சிகளுக்கு எதிராக தனது கருத்துகளை வெளிப்படையாக கூறுவதுதான்.
அதை அவரே வெளிப்படையாக தனது நூலில் தெரிவித்துள்ளார். அதேசமயம், கரண் தாப்பர் தனது
தோளில் குறுகலை உருவாக்கிக்கொள்ளவில்லை. தனது மனசாட்சிப்படி செயல்படுகிறார். ஆனால்,
அது இந்தியாவில் பலருக்கும் சாத்தியமாகவில்லை.
ஏசிஎல்யூ
அமைப்பு, முதல் உலகப்போர் காலத்தில் உருவானது. அப்போது ரஷ்யாவின் மூலம் கம்யூனிசம்
அமெரிக்காவில் பரவுகிறது என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது. எனவே, அவசரநிலையைப்
போல சட்டம் ஒன்றை போட்டு, மக்களின் வீடு புகுந்து
சந்தேகப்படுபவர்களை அடித்து உதைத்து கைது செய்தனர். அரசு, இவர்களைப் பற்றி எந்த வழக்கும்
பதியாமல், விசாரணை செய்யாமல் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது.
இந்த அநீதியைத்
தட்டிக்கேட்டு அவர்களை விடுவிக்க ஒன்று சேர்ந்த தனிமனிதர்களின் கூட்டிணைப்பில் உருவானதுதான்
ஏசிஎல்யூ. இந்த தன்னார்வ அமைப்பு, அமெரிக்காவில் நடைமுறைக்கு வரும் பல்வேறு ஜனநாயகத்திற்கு
எதிரான சட்டங்களை, மக்களின் தனிமனித உரிமைகளை நசுக்கும் விஷயங்களுக்கு எதிராக போராடுகிறது.
1.7 மில்லியன் மக்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். நூறு வழக்குரைஞர்கள் இந்த அமைப்பில் பணியாற்றி, ஆண்டுக்கு 2 ஆயிரம் வழக்குகளை நடத்துகிறார்கள். இதற்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவுகிறார்கள்.
மக்களுக்கும், அரசு அமைப்புக்கும் நடக்கும் கலந்துரையாடலுக்கு
இடைமுகமாக ஏசி எல்யூ அமைப்பு உள்ளது. இந்த உரையாடல், நீதிமன்றம், ஊடகங்கள், தெருக்கள்
ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மனசாட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பல்வேறு கேள்விகளைக்
கேட்டு பதில்களைப் பெறுகின்றனர். இதனால்தான் தடம் மாறிய அரசின் செயல்பாடு ஜனநாயகப்
பாதையில் சீராகி நடக்கிறது. மக்களின் வாழ்க்கை மேம்படுகிறது.
அமெரிக்காவில்,
மக்கள் பத்து சதவீத நன்கொடையை குடியுரிமை அமைப்புகளுக்கும், ஆராய்ச்சி அமைப்புகளுக்கும்
வழங்குகிறார்கள். அரசு, நாட்டில் புழங்கும் நிதியை இறுக்கிப் பிடிக்காமல் நன்கொடையை
அனுமதித்தால் அரசின் செயல்பாடுகள் நேர்த்தியாவதோடு, மக்களின் வாழ்க்கையும் மேம்பட வாய்ப்புள்ளது.
நாட்டின் மூலை முடுக்கெங்கும் மதவாதம் மட்டுமே மனதின் குரலாக ஒலித்தால் போதுமா, மக்களின்
ஜனநாயக குரல் ஒலிப்பது எப்போது?
டைம்ஸ் ஆப்
இந்தியா - சுபாஷிஷ் பத்ரா எழுதிய கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக