உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

 









டெவில்ஸ் அட்வகேட்

கரண் தாப்பர்

ரூ.375

ஹார்ப்பர் கோலின்ஸ்

அமேசான்

 

இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட்.

இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார்.

டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.

 மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் அம்மாவிற்கு மகனை கண்டிப்புடன் வளர்த்து படிப்பில் கெட்டிக்காரனாக மாற்றும் பொறுப்பும்  உருவாகிறது. பிற்காலத்தில் கரண்தாப்பர் பத்திரிகையாளராக உருவாகி டிவி சேனல்களில் பேசுவதற்கான விதை இங்குதான் உருவாகிறது.

போர்டிங் பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவராக இருந்த கரண், அங்கு படித்த அவருக்கு சீனியர் மாணவரான எழுத்தாளர் விக்ரம் சேத்தை  சந்திக்கிறார். கரணுக்கு, அவர்தான் பிறரை வசீகரிக்கும் விதமாக உணர்ச்சிகரமாக பேசுவது பற்றி கற்றுத்தருகிறார். அப்போது கரண், பள்ளியில் விவாத குழுவில் பங்கு பெற்றிருக்கிறார். பின்னாளில் படிப்பு சார்ந்து இயங்கும் மாணவர்களுக்காக தனி பரிசு ஒன்றை உருவாக்கும் அளவுக்கு கரண் தாப்பர் புகழ்பெறுகிறார். தனது படிப்பில் அக்கறை கொண்டவராக செல்வாக்கு செலுத்தியவராக தனது அம்மாவைக் குறிப்பிடுகிறார். இவருக்கு அடுத்த பெண்ணாக சகோதரி கிரண், வளர்த்த தாதிப்பெண் ஆகியோர் வருகிறார்கள்.

கரண் தாப்பர், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் மாணவர்களுக்கான யூனியன் தலைவராவது, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது அதில் ஏற்படும் சில தடுமாற்றங்களை வெளிப்படையாக கூறுவது, ஆக்ஸ்போர்டில் யூனியன் தலைவராக இருந்த பெனாசீர் பூட்டோவை  சந்தித்தது. பிறகு அந்த நட்பு வாழ்க்கை முழுக்க தொடர்ந்த சம்பவங்களை விவரிப்பது என கல்லூரி கால அனுபவங்களை சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார்.

 அரசியல் சார்ந்த அக்கறைகளை வளர்த்துக்கொள்ள கல்லூரி காலமே கரணுக்கு உதவியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களை கல்லூரிக்கு அழைத்து வந்து பேச செய்வது, பேசும்போது அந்த இடத்தில் அவர்கள் செலுத்தும் செல்வாக்கு ஆகியவற்றை அவர் சிறப்பாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். 

தனது வருங்கால மனைவி நிஷாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசுவது, பிறகு நண்பர்களாகி, காதலர்களாகி ஒன்றாக இரண்டு ஆண்டுகள் லிவ் இன் வாழ்க்கையை  ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த அனுபவங்கள் சாகசத் தன்மையுடன் எழுதப்பட்டுள்ளன.  காதலியின் கத்தோலிக்க மதம் சார்ந்த விதிகளால்,  குழந்தையை கருக்கலைப்பு செய்ய நேர்ந்ததையும் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். கரண், நிஷா காதலுக்கு மதம் குறுக்கே நின்ற நெருக்கடி சூழல் அது.

நிஷாவை கத்தோலிக்க தேவாலயத்தில் மணம் செய்து ஆறு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த நேரத்தில் கரணுக்கு வீக்எண்ட் டெலிவிஷன் என்ற நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. அதை செய்துவருகிறார். கூடவே,  டைம்ஸ் பத்திரிகையில் ஆசிரியர் சார்லி மூலம் கிடைத்த ஆதரவு வழியாக சில நேர்காணல்களை செய்து தருகிறார். இந்த வகையில் பெனாசீர் பூட்டோ, ஆங் சன் சூகி ஆகியோரின் நேர்காணல்களை எப்படி செய்தேன் என விளக்கியிருப்பது சுவாரசியமாக உள்ளது. முதலில் சுருக்கமான சொல்லிவிட்டு பிறகு தனது நட்பை விவரித்துப் பேசுகிறார்.

 வீக்எண்ட் டிவி நிறுவனத்தில் சேர்வதற்கு முன்னர், தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிநாட்டு நிருபராக பணிக்குச் சேர்ந்து செய்தியை எழுதுவதில் உள்ள நுட்பங்களை எப்படி கற்றுக்கொண்டேன் என்பதை விவரித்து எழுதியிருக்கிறார். இந்த பகுதியில்,  நமீபியா, பாகிஸ்தான் என சென்று செய்திகளை சேகரித்து எழுதுவதில் தனது அனுபவங்களை நேர்மையாக பதிவுசெய்திருக்கிறார். இந்த அனுபவங்கள், இதழியல் துறை சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு உதவுபவை.  இந்த சம்பவங்களில் ஆசிரியர் சார்லி, நிருபரான கரண் மீது வைத்துள்ள நம்பிக்கையும், அவர் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு அவரைக் காப்பாற்ற முனைவதையும்  முக்கியமானதாக கருதலாம். ஆசிரியர், நிருபர் உறவு நெருக்கமானதாக இருக்கும்போது செய்திகளில் நிறைய புதுமைகளை செய்வது சாத்தியம். பிரச்னைகள் வரும்போது நிருபரை, பத்திரிகையாளரை நாளிதழ் ஆசிரியர் கைவிட்டுவிட்டால் பிறகு அந்த உறவு நீண்டகாலத்திற்கு நிலைக்காது. கரண், தனக்கு ஆதரவாக நின்ற ஆசிரியர் சார்லியை நூலில் நினைவுகூர்ந்துள்ளானர்.  

மனைவி நிஷா, கரணை விட அதிகம் சம்பாதிக்கும் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக இருந்தவர். இதனால், இருவருக்குள்ளும் ஏதாவது பிரச்னை வருமோ என நினைத்து நிஷா செய்யும் செயல்களை  அவர்களுக்கு இடையிலான அன்பாகவே எடுத்துக்கொள்ளலாம். இதில், முக்கியமான சம்பவமாக நிஷா நோய்த்தொற்று ஏற்பட்டு கோமாவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும்போது கரண்,  அவரது மாமனாரிடம் பேசுவது நெகிழ்ச்சியானதாக உள்ளது. மனைவியை நோய்க்கு பறிகொடுப்பது இழப்புதான். அதை எப்படி கடந்து வருவது என்பதை மாமனார், மருமகனுக்கு போனில் கூறுகிறார். இதை படிக்கும்போது மனம் வேதனையில் கலங்குகிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு கரண், இந்தியாவில் உள டிவி சேனல்களில் வேலை பார்க்க நினைக்கிறார். இதற்கான உதவியை பிரதமரான ராஜீவ்காந்தி செய்கிறார். தூர்தர்ஷனில் மூன்று மாதங்கள் வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. அதன் வழியாக இந்தியாவில் ஊடகத்துறை இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்கிறார்.

 ஆனால், அரசு நிறுவனத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்காத காலம் என்பதால், புதிய முயற்சிகளை தூர்தர்ஷனில் செயல்படுத்துவது கடினம். எனவே, வெளியே வந்தவருக்கு இந்துஸ்தான் டைம்ஸின் வீடியோ பத்திரிக்கையான ஐ விட்னஸில் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கான முயற்சிகளை தேர்தலில் தோற்றிருந்த அரசியல் தலைவர் ராஜீவ்காந்தி செய்துகொடுக்கிறார். ராஜீவே, கரணை அழைத்து வேலை தொடர்பாக பேசி அவருக்கு உதவுகிறார் என்பதுதான் இந்த சம்பவத்தில் நாம் கவனிக்கவேண்டியது. சஞ்சய்காந்தி, கரண் தாப்பரின் சகோதரி கிரண் ஆகியோருக்கு இடையிலான நட்புதான் பின்னாளைய உதவிகளுக்கு காரணமாக அமைகிறது.

பி.வி. நரசிம்மராவ், கிரிக்கெட் வீரர் கபில்தேவ், அடல் பிகாரி வாஜ்பாய், எல் கே அத்வானி, ஜெயலலிதா, முஷாரப், சச்சின் டெண்டுல்கர், ராம் ஜெத்மலானி, இறுதியாக நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வரையில் தனது நேர்காணல் அனுபவங்கள், அதற்கு பின்னணியில் இருந்த நபர்கள், உருவான பிரச்னைகள், அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட அனுபவங்கள் என நிறைய விஷயங்களை பேசியிருக்கிறார் கரண் தாப்பர். இதில் முக்கியமானது, தனது பத்திரிகையாளர் பணி காரணமாக அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட மோதல்கள், சில தவிர்க்க முடியாத சூழல்களில் நல்ல நட்பை, இணக்கத்தை இழந்தது ஆகியவை பற்றியும் பேசியிருக்கிறார்.

ஒரு விழாவில் சந்தித்த பெண், டிவியில் ஒளிபரப்பான ராம்ஜெத்மலானியுடன் நடைபெற்ற ஆக்ரோஷ பேட்டி பற்றி தனது கருத்தை கூறுவது நூலில் முக்கியமான பகுதி. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து உண்மையை பேசுவது, தனிப்பட்ட நண்பராக அரசியல்வாதிகளுடன்  இணக்கமாக இருப்பது என இரண்டு தரப்புகளுக்கான  சிக்கல்களையும் அந்த உரையாடல் பகுதி வெளிப்படுத்தி பேசுவதாக நினைக்கிறேன்.

இறுதியாக மோடியுடன் நடைபெற்ற நேர்காணல். அதற்குப் பிறகுதான் கரண் தாப்பர் இந்தியா டுடே குழுமத்தில் அவரது வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறார். அதாவது, பாஜக அவருக்கு அந்தளவு நெருக்கடி கொடுக்கிறது. மோடி, எந்தளவு பழிவாங்கும் வன்மம் உடையவர் என்பதை கரண் தாப்பர் விளக்கி  எழுதியிருக்கிறார்.

ஆட்சி இருக்கலாம், இழக்கப்படலாம். அரசியல்வாதிக்கு பதவி முக்கியம். ஆனால் பத்திரிகையாளர் கரண், இப்போதும் இயங்கிக்கொண்டு இருக்கிறார். பதவி இல்லாதபோது அரசியல்வாதிக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?

கரண், முடிந்தளவு தன்னால் உருவான பிரச்னைகளை அடையாளம் கண்டு களைய முயன்றாலும், மனசாட்சிக்கு விரோதமின்றி  உண்மையான பத்திரிக்கையாளராக வேலை செய்தவர்.வேலையா, நட்பா என்று வரும்போது அவர் தனது வேலையைத்தான் தேர்ந்தெடுத்தார். அதை பல்வேறு இடங்களில் நூலிலேயே குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தனது நேர்மைக்கான விலையை அவர் கொடுக்க நேர்ந்திருக்கிறது என்பது வருத்தமானது. இறுதியாக நூலை நிறைவு செய்யும்போது கரண், தான் எழுதவேண்டியது மக்களுக்கு கூற வேண்டியது பற்றி நம்பிக்கையுடன் பேசுகிறார். பாஜகவின் புறக்கணிப்பு கரணின் தொழிலில் தொய்வை ஏற்படுத்தினாலும் இன்றும் அவர் இயங்கிக்கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கலாம். நாட்டின் முக்கியமான பிரச்னைகளான வேலைவாய்ப்பின்மை, கலவரங்கள், சிறுபான்மையினர் தாக்குதலைப் பற்றி பேசாமல் லவ் ஜிகாத், முஸ்லீம்களின் மக்கள்தொகை என திசைதிருப்பும் விஷயங்களை ஊடகங்கள் பேசிவருகிற சூழ்நிலையாக நிலைமை மாறியிருக்கிறது.

கரண் தாப்பரின் நூலை வாசிப்பதன் வழியாக டிஜிட்டல் ஊடகங்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றுபவர் எந்தளவு கவனமாக பணியாற்ற வேண்டும். நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடலில் குறுகல் இல்லாமல் தோளில் நிமிர்வுடன் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதைக் கற்கலாம். ஒருவகையில் கரணின் காலத்திலும், இன்றும் ஊடகங்கள் எப்படி மாறியிருக்கின்றன என்பதையும் ஒப்பிட்டு புரிந்துகொள்ளவும் கூட நூல் பயன்பட வாய்ப்புள்ளது.  

கோமாளிமேடை டீம்

 --------------------------------------


கருத்துகள்