காதலியை பேருந்து விபத்தில் பறிகொடுத்துவிட்டு, வினோதமான நபராக மாறும் காதலன்! - ஸ்டில் 17- தென்கொரிய தொடர்
ஸ்டில் 17 கே டிராமா |
ஸ்டில் 17
தென்கொரிய
டிவி தொடர்
யூட்யூப்
– எஸ்பிஎஸ் வேர்ல்ட்
கொரியாவின்
சியோல் நகரம். இங்கு, பதினேழு வயதான காங் வூ ஜின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான்.
அப்போது, இசையை அனுபவித்து வாசிக்கும் பள்ளிச்சிறுமி ஒருத்தியை பார்க்கிறான். அவள்
வயலின் வாசிப்பவள். பள்ளியில் போட்டியில் வாசித்து வென்று ஜெர்மனிக்கு பயிற்சிக்கு
போகும் சூழலில் இருக்கிறாள்.
காங்கிற்கு,
அவள் பெயர் தெரியாது. ஒருநாள் சைக்கிளில் வரும்போது, பள்ளிச் சீருடையுடன் சிறுமி ஒருத்தி
நடைமேடையில் நிற்கிறாள். கைவிரல்களை முயல்போலாக்கி
நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள். அப்போதுதான் தான் விரும்பும் சிறுமியின் பெயரை நோ
சுமி என அறிகிறான். அந்த போஸை அப்படியே படமாக வரையும் காங், அவளிடம் கொடுத்து நட்பாக
நினைக்கிறான். ஆனால், திடீரென நடக்கும் பேருந்து விபத்தில் நோ சுமி என்ற பெயர் கொண்ட
சிறுமி இறந்துபோகிறாள். இதனால், காங் மனம் உடைந்து போகிறான். விபத்தான பேருந்தில் அன்றைக்கு பயணித்த காங், தான்
விரும்பிய சிறுமிக்கு கலை அரங்கம் செல்ல தவறான வழியை சொல்லிவிடுகிறான். அந்த சிறுமியும்
அதேபோல அவன் சொன்ன இடத்திற்கு செல்லும்போது விபத்தில் சிக்குகிறாள். நோ சுமியின் இறுதி
சடங்கிற்கு செல்லும் காங், வேதனையில் அங்கிருந்து ஓடி வந்துவிடுகிறான். பிறகு அங்கு
பள்ளி செல்ல பிடிக்காமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறான்.
அவனது பெற்றோர்
முடிவுப்படி, தனது அக்கா குடும்பத்தோடு ஜெர்மனிக்கு செல்கிறான். அங்குதான் பள்ளி, கல்லூரி
படிப்பை படிக்கிறான். விபத்து ஏற்படுத்தி சோகம் அவனது மனநிலையை பாதிக்க, ஆறுமாதம் வேலை,
ஆறுமாதம் ஊர் சுற்றுதல் என தன்னை மாற்றிக்கொள்கிறான். மனிதர்களிடமிருந்து சற்று தூரமாக
வைத்துக்கொள்கிறான்.
உண்மையில்
பேருந்து விபத்தில் இறந்தவள் பெயர் நோ சுமி. ஆனால், காங் நடைமேடையில் பார்த்த சிறுமியின்
பெயர் வேறு என்பதை அறிவதில்லை. விபத்தில் காங்
நட்புகொள்ள விரும்பிய சிறுமி கோமாவுக்கு சென்றுவிடுகிறாள். பதிமூன்று ஆண்டுகளுக்குப்
பிறகு கண்விழிக்கிறாள்.
அதாவது, பதினேழு வயதில் விபத்து நடக்கிறது. மருத்துவ
சிகிச்சைக்குப் பிறகு முப்பது வயதில் கண் விழிக்கிறாள். மனம் பதினேழு வயதில் நின்றுபோயிருக்க,
உடல் முப்பது வயதை எட்டியிருக்கிறது. அவளை மாமா, அத்தைதான் வளர்க்கிறார்கள். ஆனால்,
அவளை மருத்துவமனைக்கு வந்து பார்ப்பதில்லை. மருத்துவச்செலவுக்கும் பணம் கொடுக்கவில்லை.
சியோ ரி என்பதுதான் அந்த கோமா சிறுமியின் பெயர்.
அவளுக்கு ரகசியமாக ஒருவர், தனது பெயர் குறிப்பிடாமல் பண உதவி செய்கிறார். மேலும், அந்த
மருத்துவமனையில் உள்ள இளம் மருத்துவர் கிம் டாங் ஹே, சியோ ரி யை எப்படியாவது பிழைத்து
வைத்துவிடவேண்டும் என முயற்சிக்கிறார்.
உண்மையில்
சியோ ரி தனது வயலின் கலைஞர் கனவை நிறைவேற்ற முடிந்ததா, அவளது அத்தை, மாமா எங்கே போனார்கள்,அ
வர்களுக்கு என்ன ஆனது, காங் சியோ ரியை அடையாளம் கண்டானா, தனது மனநிலை குறைபாட்டிலிருந்து
வெளியே வந்தானா என்பதுதான் தொடரின் மீதிக்கதை.
தொடக்க காட்சியில்
காங், தாடி மீசை வளர்ந்து பீதியூட்டும் ஆளாக மாறியிருக்கறான். தான் விரும்பிய நட்புகொள்ள
நினைத்த பெண்ணின் விபத்திற்கு காரணமாகிவிட்டோம் என நினைத்து குற்றவுணர்ச்சி கொண்டு
மனநல பாதிப்பை (பிடிஎஸ்டி) அடைகிறான். இதனால், ஆறுமாதம் வேலை, ஆறுமாதம் யாருக்கும்
எதையும் சொல்லாமல் சென்று ஊரை சுற்றுவது என வாழ்கிறான். அவனது அக்கா, கொரியாவில் வாங்கிய
வீட்டிற்கு காங்கை போகச் சொல்கிறார்கள். அவனுக்கு துணையாக அவளின் மகன் தங்கியிருக்க
போவதாக கூறுகிறாள்.அதாவது, மாமா, மாப்பிள்ளை ஒரே வீட்டில் இருப்பது திட்டம்.
அக்கா மகன்
சான், பள்ளியில் படகு ஓட்டும் விளையாட்டுக்கு பயிற்சி எடுக்கிறான். அவனுக்கு மாமா காங்
என்றால் பிரியம். சிறுவயது முதலே மாமா மேல் அதிக பாசம் உண்டு. எனவே, காங்கோடு ஆறுமாதம்
தங்கியிருப்பதை மகிழ்ச்சியாக ஏற்கிறான். சமையலுக்கு ஜெனிஃபர் என்ற பெண்மணியும் நியமிக்கப்படுகிறார்.
காங், தங்கும் வீட்டிற்கு சியோ ரி தான் வாழ்ந்த வீடு என்று ஆசையுடன் தேடி வருகிறாள்.
அங்கு அவளது மாமாவைப் பார்ப்பதே அவளது லட்சியம். ஆனால், பதிமூன்று ஆண்டுகளில் நிறைய
விஷயங்கள் மாறியிருக்கின்றன. ஏனெனில் அந்த வீடு ஏற்கெனவே காங்கின் அப்பாவிற்கு விற்கப்பட்டுவிட்டது.
சியோ ரி முதலில்
காங்கின் வீட்டுக்கு வருகிறாள். அவளை அங்கு வேலை செய்யும் ஜெனிஃபர் ஆணா, பெண்ணா என்று
கூட கேட்காமல் தங்க அனுமதித்து விடுகிறார். காங், தாடி மீசையுடன் வருபவன், தன் அக்கா
மகனை எப்போதும் போல முத்தம் கொடுத்து எழுப்புகிறான். ஆனால் அங்கு சானின் படுக்கையில்
சியோ ரி தான் உறங்கிக்கொண்டிருக்கிறாள்.
உடனே அங்கு களேபரம் நடக்கிறது. பிறகுதான் காங்கின்
மாப்பிள்ளை சான் வருகிறான். காங், வீட்டில் சியோ ரியை தங்க வைக்க இணங்கவில்லை. ஆனால்
சானுக்கு சற்று மனது இளக்கம் என்றாலும் மாமா சொல்வதை மீற முடியவில்லை. சியோ ரி வீட்டை
விட்டு வெளியேறுகிறாள். உணவுக்காக பல்வேறு இடங்களில் அலைகிறாள். பிறருக்காக தன்னை வருத்திக்கொள்ளும்
கபடற்ற குணம் அவளுக்கு உள்ளது. இதை அவள் அறிவதில்லை. ஆனால் பிறருக்கு வெளிப்படையாக
தெரிகிறது. அந்த மனம்தான் அவளைப் போலவே காயம்பட்ட மனிதர்களை ஈர்க்கிறது.
வயலின் பயிற்சி
செய்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிறது. வாசித்த வயலினும் பழுதாகிவிட்டது. அதை சரி செய்ய
2 ஆயிரம் டாலர்கள் தேவை. இந்த பணத்தை சம்பாதிக்க முதலில் வேலை ஒன்று வேண்டும். காங்,
ஒரு மாதம் அவளை தனது வீட்டில் தங்க வைப்பதோடு, அவளின் பழைய வீட்டை விற்பதற்கான முயற்சியைக்
கூட தள்ளி வைக்கிறான். இதுகூட சியோ ரிக்காக அல்ல மாப்பிள்ளை சான் கேட்டுக்கொண்டதற்காகத்தான். சானுக்கு சியோ ரி மெல்ல
ஒருதலைக்காதல் பூக்கிறது. அவளுக்கு வயது 30 என்றாலும் பதினேழு வயது சிறுமி போலவே நடந்துகொள்கிறாள்.
சூதில்லாத அவளின் அன்பும் செயலும் அவனை ஈர்க்கிறது.
வயலினை பழுதுபார்த்தால்
ஏதாவது ஆசிரியர் வேலை சம்பாதிக்கலாம் என சியோ ரி நினைத்து உணவகங்களில் சென்று வெங்காயத்தை
வாங்கி வநுத உரிக்கும் வேலையை செய்கிறாள். கூடவே சாக்ஸ்களை மடித்து கொடுக்கும் வேலையை
செய்கிறாள். வயது 30 என்பதால், பள்ளிப்படிப்பு முழுமையாக முடிக்காத காரணத்தால் அவளுக்கு
உடல் உழைப்பு சார்ந்த வேலை கிடைப்பது கூட கடினமாக உள்ளது.
முக்கியமாக,
அவள் பதிமூன்று ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்ததால் சமூக அடையாள அட்டை கூட பெறவில்லை.
இதனால் காவல்நிலையம் சென்றாலும் கூட தனது மாமா, அத்தை பற்றி விசாரிக்க முடியவில்லை.
இதையெல்லாம்
சியோ ரி எப்படி கடந்துவருகிறாள் என்பதும் கதையில் முக்கியமானது.
இந்த தொடரில்
நேர்மறையான தன்மை அதிகம். சியோ ரி,
ஜெனிஃபர் என இருவருமே சாலை விபத்தில் தங்களது வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அதற்கு காரணமானவரை
அடையாளம் கண்டு அழுதுகொண்டே ‘’ஏன் இப்படி செஞ்சே?’’, என கேள்வி கேட்கும் காட்சி உருக்கமானது.
வாழ்க்கையில் பதிமூன்று ஆண்டுகள் கரைந்துவிட்டபிறகு,
ஒருவர் தன் வாழ்க்கையை மீட்டு சரியான நிலைக்கு கொண்டு வருவது கடினம். ஜெனிஃபர் தனது
கணவரை, குழ்ந்தையை இழக்கிறார் என்றால் சியோ ரி, தனது உறவுகள், ஆதாரமாக இருந்த வீடு
அனைத்தையும் இழந்து தெருவில் வாழும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.
‘’மதிப்பு
வாய்ந்த பொருளே, மனிதனோ காலத்தால் புறக்கணிக்கப்படும்போது பின்னாளில் அவர்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது
‘’ வயலின் பழுதுபார்க்கும் கடைக்காரர் சொல்லும் தத்துவம்தான் கதையின் மையப்பொருள்.
சியோ ரி இந்த தத்துவத்தை உணர்ந்துதான் வெங்காயம்
உரிக்கும்போது அழுகிறாள். ஆனால்,அ வளின் இயல்பான வெகுளியான குணத்தால் தனக்கென காங்கின் குடும்ப உறுப்பினர்களை நண்பர்களாக்கி
கொள்கிறாள். இறுதியில் காங்கையே கூட மாற்றுகிறாள். அவனை மணந்துகொள்கிறாள். மருத்துவமனை
நோயாளிகளுக்கு தன்னார்வமாக இசை தெரபியை வழங்குகிறாள். ஆத்மார்த்தமாக வயலினை இசைக்கிறாள்.
கூடவே, அவளது பள்ளித்தோழியும் வயலின் வல்லுநருமான தோழி ரின் கிம் இணைகிறாள்.
காங் தவிர
சியோ ரியை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். மருத்துவர் கிம் டே. இவரைப் பொறுத்தவரை பள்ளியிலேயே
சியோ ரிக்கு காதலைச் சொல்லி கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று திட்டம் போட்டு ஆசிரியரிடம்
அடிவாங்குகிறார். பின்னாளில், மருத்துவராகிறார். சியோ ரியை காப்பாற்றி அவளை மணக்க நினைக்கிறார்.
அடுத்து, பள்ளி மாணவன் சான். வயது பதினேழு என்றாலும் சியோ ரியை அவன் வேலை தேடியபிறகு மணம் செய்துகொள்ளலாம்
என நினைக்கிறான். அவள்தான் அவனுக்கு படகு ஓட்டும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான ஆழ்மன
உந்துதலை அளிக்கிறாள்.
சியோரி வயலின்
வாசிப்பதில் தனித்துவமானவளாக இருப்பது ஏன் என அவளை போட்டியாக நினைக்கும் ரின் கிம்மிடம்
ஜெர்மன் ஆசிரியர் கூறுவது சிறப்பானது. ஆத்மார்த்தமான இயல்பில் இசையை புரிந்துகொண்டு
வாசிப்பது, ரின் கிம்மிற்கு கைவராத ஒன்று. அதை அவள் பின்னாளில் உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்கிறாள்.
சியோ ரி, பூங்கா ஒன்றில் வயலின் வாசிக்கும்போது, வயதான பெண்மணி அதைக்
கேட்டு ரசிக்க தினமும் அங்கு வருவதும், அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் நெகிழ்ச்சியானது.
வயதான பெண்மணி, காய்கறிகளை சியோரிக்கு பரிசாக அளிக்கிறாள். பதிமூன்று ஆண்டுகளுக்கு
பிறகு, தனது இசைக்காக அவள் பெறும் பரிசு. அதை
சானிடம் சொல்லி மகிழ்கிறாள்.
சியோ ரியின்
வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்கள் நிறைய நடக்கிறது. அதற்காக அவள் அதையே நினைத்துக்கொண்டிருக்கவில்லை.
அதை அவள் அழுதுகொண்டேனும் கடக்க முயல்கிறாள். பசியில் இருக்கும்போது கிடைக்கும் ஒரு
கேக் துண்டை கூட காங், அதன் மீது உட்கார்ந்து வீணடித்துவிடுகிறான். வீடற்ற ஒருவர் சியோ
ரிக்கு கிடைக்கும் உணவைக் கூட தானே வாங்கி சாப்பிடுகிறார். சியோரி பட்டினி கிடக்க நேரிடுகிறது.
அவளது அத்தை, அவளுக்கு சொந்தமான வீட்டை காங்கின் பெற்றோருக்கு விற்றுவிட்டு எங்கோ சென்றுவிடுகிறாள்.
பட்டினியால் கண் சொருகி, சானின் வீட்டிலுள்ள அறையில் மயங்கி விழுகிறாள்.
இதையெல்லாம்
கடந்து சியோ ரி தனது வாழ்வை மீண்டும் மீட்டெடுக்க நினைக்கிறாள். பதினேழு வயது மனதை,
மெல்ல தனது முப்பது வயதுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறாள். அப்போதுதான் காங், யாரென
அவள் அறிகிறாள். தனது காதலை அடையாளம் காண்கிறாள். அவன் மனதில் இருந்த குற்ற உணர்வைக்
களைகிறாள். சானை தனது தம்பியாக ஏற்கிறாள். ஜெனிஃபர், சானின் நண்பர்கள், செல்ல நாய்
டியோக் கு அல்லது ஃபேங் என குடும்பமாக ஒன்றாக இருக்கிறார்கள்.
ஜெனிஃபர்,
சியோ ரி, காங், நோ சுமி, சியோ ரியின் மாமா, அத்தை என பலரது வாழ்க்கையும் ஒரே ஒருவரால்
தலைகீழாக மாறுகிறது. அதுதான், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த குடிகாரர். விபத்து
நேர்ந்தபிறகு தனது குடியின் விளைவை உணர்ந்து
அதை சரி செய்ய முனைகிறார். ஆனால், காலத்தைப் பொறுத்தவரை அனைத்து விஷயங்களுக்கும் இரண்டு
வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஏற்கெனவே, விபத்தால் பலரும் தங்களது இயல்பான வாழ்க்கையை
இழந்துவிடுகிறார்கள். நினைத்துப் பார்க்க முடியாத வகையில் வாழ்க்கை தடம் புரண்டுவிடுகிறது.
சோகத்தில்,
வலியில் இருக்கும்போது தலைமுடியைத் தடவி, கண்ணீர் துடைத்து தோளில் சாய்த்துக்கொள்ளும்
நண்பர்களை, ஆதுரமான கரங்களை, துணை நிற்கும் ஏதேனும் உறவைத் தேடுகிறோம். உண்மையில் அந்த
நேரத்தில் அந்த செயல் என்பது எவ்வளவு முக்கியமானது.
சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதல் என்பது, உடைந்து
சிதறும் மனதை காப்பாற்றியிருக்க கூடுமோ என யோசிக்க வைக்கிறது. தொடரில், காங், சியோ
ஆகியோர் இருவருமே ஒருவர் உணர்வு ரீதியாக கீழே
இறங்கும்போது இன்னொருவர் துணையாக இருக்கிறார்கள். கைகளை தொடுகிறார்கள். ஆறுதலாக அணைத்துக்கொள்கிறார்கள்.
சோகத்தில் தொய்ந்து போன ஒருவரின் தலையை தாங்க தோள்களைக் கொடுக்கிறார்கள்.
மகிழ்ச்சியின்
கதவைத் திறக்க தயங்க கூடாது. அதை நண்பர்கள், தோழி, காதலி, மனைவி என யார் வேண்டுமானாலும்
திறக்கலாம். அப்போது நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் வாழ்க்கை சோகத்திலும் விரக்தியிலும்தான்
மூழ்கும். வாய்ப்பு கிடைத்தால் கொரிய டிவி தொடரை பாருங்கள். யூட்யூபில் கிடைக்கிறது.
ராக்குட்டன் விக்கி ஆப்பிலும் பார்க்கலாம்.
யாங் சே ஜாங், ஷின் ஹை சுன் ஆகியோர் காங், சியோ ரி பாத்திரத்தில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். காங்கின் வீட்டில் உள்ள டியோக் கூ என்ற சிறு நாய் கூட ஒரு முக்கியமான பாத்திரமாக வருகிறது. மனிதர்களைக் கடந்து நாய், பாதி இறந்துபோன தொட்டிச்செடியைக் கூட பாத்திரமாக கருதும் தொடரின் எழுத்தாளர், இயக்குநர் ஆகியோர் பாராட்டத் தக்கவர்கள்.
கோமாளிமேடை
டீம்
Awards: SBS Drama Award for Top Excellence in Acting - Monday–Tuesday Drama, MORE
Also known as: 30 But 17
Genre: Romantic comedy
Literal meaning: Thirty But Seventeen
Original language: KoreanDirector: Jo Soo-Won
Writer: Jo Sung-Hee
Network: SBS
Episodes: 32
கருத்துகள்
கருத்துரையிடுக