காவல்துறைக்கு மாற்றாக பணியாற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன காவலர்கள் - அதிகரிக்கும் குற்றங்கள்

 





பிங்கர்டான் நிறுவன பாதுகாப்பு காவலர்கள்










அமெரிக்காவில் தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள்! -  நம்பிக்கையிழந்து தடுமாறும் காவல்துறை

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கொன்றார். இதற்கு அன்றைய அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த வெறுப்புவாதம், இனவெறி, நிறவெறி என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடைமுறையில் காவல்துறையில் சேர்ந்த ஆட்கள் கூட காவல்துறையில் இப்படித்தான் நிலைமையா என பணியை விட்டு வேகமாக விலகி அடுத்தவேலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதம் பேர் இப்படி காவல்துறைக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னாளில் விலகி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகள் தகவல் கொடுக்கின்றன.

பிலடெல்பியா, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் காவல்துறைக்கு குற்றங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் இல்லை.இதனால் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. பிலடெல்பியாவில் ஏடிஎம் கொள்ளை அடிக்கப்பட்டு ஆறுமணிநேரங்களுக்கு பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

அரசு காவல்துறையில் நிர்வாகம் சார்ந்த  வேலை நெருக்கடி, ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களைச் சொன்னாலும் மக்களுக்கு பாதுகாப்பு என்பது மெல்ல குறைந்து கொண்டிருக்கிறது. இதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ, வியாபாரிகள் உணர்ந்துவிட்டனர். எனவே, அவர்கள் முதல்வேலையாக தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை அணுகி தங்கள் வியாபாரத்தை பாதுகாக்கவென பாதுகாவலர்களை வாடகைக்கு அமர்த்தி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள பெவர்லி ஹில்ஸ் அருகில் காவல்துறை போல பாதுகாப்பு நிறுவனங்களின் காவலர்கள் ரோந்து போகும் அளவுக்கு குற்றங்களின் பிரச்னை உள்ளது. தனியார் வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பாதுகாக்க தனிப்பட்ட பாதுகாவலர்களை நாடுகிறார்கள். இந்த அணுகுமுறை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.

 இப்படி வணிக நிறுவனங்கள் தனியார் பாதுகாவலர்களைப் பணிக்கு வைப்பதால் குற்றங்கள் குறையுமா என்று சமூக அக்கறை கேள்வி கேட்க கூடாது. பாதுகாவலர் வணிக நிறுவனத்தை மட்டுமே பாதுகாப்பார். குற்றவாளி, எரிபொருள் நிலையத்தை கொள்ளையடிக்க முயன்றால், அவனைத் தாக்கி வீழ்த்தி காவல்துறையில் ஒப்படைப்பதுதான் அவரது வேலை. ஊரைக்காப்பது அல்ல. பயனாளிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் என்றால் பாதுகாவலர் தலையிடுவார். பெரும்பாலும் இது கூட அநாவசியம்தான். காசு கொடுக்கும் முதலாளியை, அவரது நிறுவனத்தைக் காப்பதே முதல் பணி.

அமெரிக்க காவல்துறையில் சட்டம் ஒழுங்கை காக்கும் போலீஸ் அதிகாரிக்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் டாலர்கள் சம்பளம் என்றால் தனியார் பாதுகாவலருக்கு  அதில் பாதிதான் ஊதியம். ஒருநாளுக்கு  750 டாலர்களை சம்பளமாக கொடுக்கிறார்கள். நிறுவனத்தின் வருமானத்தைப் பொறுத்து பாதுகாவலர்களுக்கு வழங்கும் சம்பளம் மாறுபடும். பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், பணம் சம்பாதித்தாலும் பாதுகாவலர்களுக்கு வழங்கும் சம்பளம் மிகவும் குறைவுதான்.  

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன பாதுகாவலர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டாலும் குற்றங்களைப் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுப்பதே முதல் பணி. கையில் பதவிசமாக துப்பாகிக இருக்கிறதே, சுட்டுப் பார்ப்போம் என சட்டத்தை கையில் எடுத்தால் உடனே அவர்கள் மீது கொலைவழக்கு பதியப்படுகிறது. இப்படி நிறைய வழக்குகளில் தனியார் பாதுகாப்பு சேவை பாதுகாவலர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் பாதுகாக்கும் நிறுவனத்தின் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்தால் அதை திரும்ப பெற்றுத்தரும் பொறுப்பு உண்டு என தனியார் பாதுகாவலர்கள் கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையினர் அதை மறுக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை காவல்துறை காப்பாற்றுவதும் இல்லை. குறைந்தபட்சம் ஒருவர் பாதுகாப்பு பொறுப்பேற்ற சொத்தைக் காப்பாற்ற முயல்வதையும் காவல்துறை ஏற்கவில்லை.  

கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபடுபவர்களால் ஆண்டுக்கு 145 தனியார் நிறுவன பாதுகாவலர்கள் பணியில் இருக்கும்போது கொல்லப்படுகிறார்கள். அதாவது, 85 சதவீதம் பேர்.ஆண்டுக்கு பதிமூன்றாயிரம் தாக்குதல்களை தனியார் பாதுகாப்பு சேவை காவலர்கள் எதிர்கொள்கின்றனர்.

அமெரிக்க பொது காவல்துறை மெல்ல மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாக மாறிவருகிறது. உலகின் மூன்றாவது பெரிய பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பெயர், அலைட் யுனிவர்சல். அமேஸான், வால்மார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து ஏராளமான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் நிறுவனம் இதுதான். அண்மையில் ஜி4எஸ் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு புதியவை கிடையாது. பல நூற்றாண்டுகளாக பாதுகாப்பு சேவைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன. 1850ஆம் ஆண்டு ஆலன் பிங்கர்டான் என்பவர் பிங்கர்டான் என்ற பாதுகாப்புசேவை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், அன்றைய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிங்கனை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தை செக்யூரிட்டாஸ் ஏபி என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதில், 3,58,000 பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனம், 45 இடங்களில் சேவையை வழங்கி வருகிறது.

அமெரிக்க அரசின் காவல்துறை, இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். இனவெறி கூடாது என தனது அலுவலர்களுக்கு கற்றுத் தரவேண்டும். அப்படியில்லை எனில், மக்களைக் காப்பாற்ற தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் காவலர்களை குத்தகைக்கு எடுக்கும் அவலநிலை உருவாகும்.

ஆலனா சேமுல்ஸ்

டைம் வார இதழ்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்