வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

 




தென்கொரிய கவிஞர் கோ யுன்




24 சிறிய பாடல்கள்

கோ யுன்

கவிதை நூல்

காவிரி சிற்றிதழ்

தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்

 சிறுநூல்வரிசை


இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது.

கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது.

கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம்.

விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து  கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார். இந்த கவிதை, வாழ்க்கை, மரணம் என இரண்டு விஷயத்தையும் துறவு மனநிலையில் அணுகிறது. துறவு என்று கூறுவது இறுக்கமான வடிவத்தில் அல்ல. சற்று தாராளமான, வாழ்வை அதன் வடிவில் அணுகுவதாக உள்ளது. நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் போல, உலகை விட்டு வெளியேறம்போது நடனமாடிக்கொண்டே செல்வேன் என கவிதை முடிகிறது.

பொதுவாக மரத்தின் இலை பழுத்து விழுவது  மரணத்தின் மறைமுக குறியீடு. ஆனால், அதை வாழ்க்கையின் மகிழ்ச்சியாக ஒருவர் கூறுவது என்பது ஆச்சரியமானது.

அடுத்து, நீதிக்கான போராட்டங்களில் ஏற்படும் விரக்தி, அதை பெறமுடியாத மனிதர்களை நோக்கியதாக கவிதை ஒன்று உள்ளது. முப்பது ஆண்டுகளாக கூ கூச்சலிட்டுக்கொண்டிருந்த விவகாரங்களை கைவிடுவதன் வழியாக அதில்மு உள்ள நீதியையும் அதன் போக்கிலேயே விடுவது பற்றி கவிதை பேசுகிறது. உண்மையில் இந்த கவிதை, அரசுடன் போராடும் சமூக போராளிகளுக்கு பொருந்துகிற கவிதை. நம்பிக்கையின்மை, விரக்தி தீவிரமாக வெளிப்படுகிறது. இந்த கவிதையை வாசித்தபிறகுதான், உண்மையில் கவிதையின் பிற்பகுதியாக என்ன காரணத்தால் கோ யுன் இப்படியொரு கவிதையை எழுதியிருப்பார் என யோசிக்கத் தோன்றுகிறது. அவர் நாட்டில் சந்தித்த அரசியல் விவகாரங்கள் காரணமாக இருக்கலாம். மேம்போக்காக நம்பிக்கையின்மை தொனிக்கிற கவிதைதான். ஆனால் ஆழமாக பார்த்தால் கோபத்தை மனதிற்குள் புகுத்துகிற கோணமும் இருப்பதை மறக்க முடியாது.

குழந்தையிடம் பிச்சைக்காரனாக விரும்புகிறாயா இல்லை திருடனாகவா என கேட்கும் முறை சற்று குரூரமானது. ஆனால் படிக்கும்போது சற்று சங்கடமாக தோன்றினாலும் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை ஆழமாக கவனித்து கோ யுன் இப்படி கூறியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஒன்றை உழைத்துப் பெறும் வலிமை இல்லாமல் அதை இரந்து பெறுபவர்கள், மற்றொருபுறம். அப்படி ஒருவர் பிச்சைக்காரனாக்கும் சூழ்நிலையை உருவாக்கி அவர்களிடமிருந்து திருடுபவர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். சற்று விரக்தியான மனநிலையில் உலகைப் பார்த்து பேசும் முதியவரின் மனநிலை போலவும் கவிதை உள்ளது.

மொத்தம் 24 சிறு கவிதைகள். இதில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை மட்டும் கூறியுள்ளேன். நீங்கள் இந்த சிறுநூல்வரிசை கவிதை நூலை வாசிக்கும்போது வேறுவகையாக உணரவும் வாய்ப்புள்ளது. ஒருவர் மனதில் தானுணர்ந்த அனுபவம், பொருள் அடிப்படையில்தான் கவிதையோ, நாவலோ உள்வாங்கிக்கொள்ள முடியும். புதிய அனுபவம் தரும் கவிதைகளை வாசிக்கவேண்டுமென நினைப்பவர்களுக்கு கவிஞர் கோ யுன் நல்ல அனுபவத்தை தருவார்.

 கோமாளிமேடை டீம்


 நூலைத் தரவிறக்கி வாசிக்க....

 https://kaavirimagazine.blogspot.com/2020/12/3.html

 

 

கருத்துகள்